மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 8 ஆக 2021

பற்றி எரிந்த தெலங்கானா போராட்டமும்... பற்ற வைக்கப்பட்ட கொங்குநாடு கோரிக்கையும்!

பற்றி எரிந்த தெலங்கானா போராட்டமும்... பற்ற வைக்கப்பட்ட கொங்குநாடு கோரிக்கையும்!

எஸ்.இரவி

மத்திய அரசே மறுத்து விட்டது; தமிழ்நாட்டைப் பிரிக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்று. ஆனாலும் கலகத்தை உண்டாக்க சமூக ஊடகங்களில் சரமாரியாக கல் வீசப்படுகிறது. கொங்குநாடு கோரிக்கையைத்தான் சொல்கிறேன்.

இதைப் பற்றி நான் பேசவும் எழுதவும் ஒரு காரணமும் இருக்கிறது. கொங்குநாடு கோரிக்கையை எழுப்புபவர்கள், தெலங்கானாவை ஒப்பிட்டுப் பேசுவதுதான் அது. இன்னும் வலுவான ஒரு காரணம், நான் தெலங்கானா தலைநகரான ஹைதராபாத்தில் வசிக்கும் கொங்குநாட்டுக்காரன் என்பதுதான்.

கொங்கு மண்ணின் மைந்தன் என்பதோடு, 2009ஆம் ஆண்டிலிருந்து தெலங்கானா போராட்டத்தை நேரடியாகப் பார்த்தவன் என்ற முறையிலும், சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

தெலங்கானா மாநிலத்தின் கோரிக்கைக்கான நியாயமும், அந்த கோரிக்கையை எழுப்பிய மக்களின் வலியையும் எனக்குத் தெரிந்த அளவுக்கு தமிழக மக்களின் இதயங்களுக்குக் கடத்துவது மட்டுமே இந்தக் கட்டுரையின் ஒரே நோக்கம்.

தெலங்கானாவும் ஒருங்கிணைந்த ஆந்திரப்பிரதேசமும்!

பெரும்பாலான தமிழர்களுக்கு, ஆந்திரம் என்றால் திருப்பதிதான் நினைவுக்கு வரும். ஆனால், ஆந்திரா என்றால் தெலங்கானா, கடலோர ஆந்திரம் மற்றும் ராயலசீமை என மூன்று பகுதிகளைக் கொண்டது. ஒருங்கிணைத்த ஆந்திரப் பிரதேசத்தின், வடக்கு மற்றும் வடமேற்கு பகுதியில் அமையப் பெற்றதுதான் தெலங்கானா. இந்த மூன்று பகுதி மக்களும் பேசும்மொழி தெலுகு (தெலுங்கு) என்பதைத் தவிர, இவர்களுக்குள் வேறு எந்த ஒற்றுமையும் இருந்ததாக வரலாறே இல்லை.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்துக்கு முன், பத்தாம் நூற்றாண்டில் வாரங்கல்லை தலைநகராகக் கொண்டு, யாதவ வம்சத்தின் அரசர்கள் ஆட்சி செய்தபோதே தெலங்கானா கருவாகி விட்டது. அது உருவாவதற்குத்தான் பல நூற்றாண்டுகளாகி விட்டன. காகதீய வம்ச அரசர்கள், கோல்கொண்டா சுல்தானத்தை உருவாக்கியபோது, அதன் ஒரு பகுதியாக தெலங்கானா இருந்தது.

இதற்குப் பிந்தைய காலகட்டத்தில்தான், இஸ்லாமிய ஆட்சியாளர்களின் கைகளில் தெலங்கானா பகுதிகள் சென்றன. தெலங்கானா மாநிலத்தில் தெலுகு மொழிக்கு அடுத்ததாக உருது மொழி பேசுவோர் அதிகம் இருப்பது, இந்த காரணங்களால்தான்.

கி. பி. பதினேழாம் நூற்றாண்டில், மொகலாய வம்ச மன்னர் அவுரங்கசீப், தனது தக்கன படையெடுப்பை மேற்கொண்டார். கோல்கொண்டாவை அசால்ட்டாக அட்டாக் செய்து கைப்பற்றினார். முகலாயர் வசம் ஆனது கோல்கொண்டா. பின்னர், தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு முகலாயர்கள் ஆளத்தொடங்கியபோது, அவர்களுக்கு முகவர்கள் போல செயல் படத் தொடங்கியவர்கள்தான் ஆஸஃப் ஜாஹிகள். முகலாய சாம்ராஜ்ஜியம் பலவீனம் அடையத் தொடங்கியதும், ஆஸஃப் ஜாஹிகள் தங்களை, தனியான ஆட்சியாளர்களாக பிரகடனம் செய்து கொண்டார்கள். ஆஸஃப் ஜாஹி என்று சொன்னால் யாருக்கும் புரியாது; உலகறிந்த பெயரில் சொல்வதானால், இவர்கள்தான் ஹைதராபாத் நிஜாம்கள்.

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, கடைசி நிஜாம் மன்னராகிய, மீர் உஸ்மான் அலி கான், 1948இல் இந்திய அரசுக்கு பணிந்தார். ஆபரேஷன் போலோ (Operation Polo ) என்றழைக்கப்பட்ட ஆயுதம் ஏந்திய வழியில், இந்திய அரசிடம், மீர் நிஜாம் சரணடைய, ஆஸஃப் ஜாஹி ஆட்சி ஹைதராபாத்தில் முடிவுக்கு வந்தது. 1948 செப்டம்பர் 18 அன்று இந்தியாவுடன், ஹைதராபாத் மாகாணம் இணைந்தது.

உள்ளூர்க்காரர்களின் உரிமைகளுக்கான முதல் போராட்டம்!

ஹைதராபாத் மாகாணம் சுதந்திர இந்தியாவில் இணைந்தவுடன், ஒரு கோஷம் எழுந்தது. அதுதான்... ‘இட்லி சாம்பார் கர் கோ ஜாவ்’ (இட்லி, சாம்பார், உண்ணும் தென் இந்தியர்களே, இங்கிருந்து வெளியேறி, உங்கள் ஊருக்கு செல்லுங்கள் என்னும் பொருள் தொனிக்கும் கோஷம்). மதராஸி மாகாணத்தைச் சேர்ந்தவர்கள், தங்கள் வேலைவாய்ப்புகளைப் பறித்துக் கொள்கிறார்கள் என்பதற்கான போராட்டம்தான் அது. தொடர்ந்து போராட்டம் பெரிதானபோது, சிறு சிறு துப்பாக்கிச் சூடுகளும் நிகழ்ந்தன. சிலர் உயிர் துறக்கவும் காரணமாக அமைந்தது அந்த முதல் போராட்டம்.

விசால ஆந்திரா என்னும் கோரிக்கை எழுந்தபோது, கடலோர ஆந்திர பகுதி மக்களின் மீது இருந்த நம்பிக்கையின்மை காரணமாக, தங்களின் வாய்ப்புக்கள் பறி போய் விடும் என்கிற அச்சம், தெலங்கானா பகுதி வாழ் ஹைதராபாத் மாகாண மக்களிடம் எழுந்தது. அதனால், அந்தக் கோரிக்கையை அவர்கள் நிராகரித்து 1952ஆம் ஆண்டில் முல்கி போராட்டத்தை நடத்தினர்.

அதே ஆண்டில் ஹைதராபாத் மாகாண முதல்வராகப் பொறுப்பேற்ற புருகுல ராமகிருஷ்ணா ராவ், முல்கி சட்டங்கள் (MULKI RULES) என்று சில சட்டங்களைக் கொண்டு வந்தார். அதாவது, கீழ்நிலை பணியாளர்கள் தேர்வுக்கு உள்ளூர் (ஹைதராபாத், தெலங்கானா, கர்நாடகத்தின் குல்பர்கா, பீதர், ராய்ச்சூர் மற்றும் மராத்வாடா பகுதி) மக்களுக்கே முன்னுரிமை என்று விதிமுறைகளை வரையறுத்தார். இதனால் அந்தப் போராட்டம் அப்போதைக்கு முடிவுக்கு வந்தது.

இதற்கிடையே, 1953ஆம் ஆண்டு, சுதந்திரம் அடைந்த இந்தியாவில் மாநிலங்களை மறு சீரமைப்பு செய்யும் குழு ஒன்று முன்னாள் நீதிபதி ஃபாசல் அலி தலைமையில் SRC (States Re organization Committee) ஏற்படுத்தப்பட்டது. மொழிவாரியாக பல மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. பொட்டி ஸ்ரீராமுலு என்ற தீவிர தெலுகு மொழி ஆதரவாளர். மொழி வாரி மாநிலங்களில் தெலுகு பேசும் மாநிலம் வேண்டும் என்று காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தார்.

அதைத் தொடர்ந்து, அந்தக் கோரிக்கையை மாநிலங்கள் மறுசீரமைப்பு கமிட்டி பரிசீலித்தது. தெலுகு மொழி பேசும் மக்களுக்காக ஆந்திர மாநிலம் உதயமானது. ஆனால் 1956ஆம் ஆண்டில், ஃபாசல் அலியின் தலைமையில் மாநிலங்கள் மறுசீரமைப்பு கமிட்டி ஓர் ஐயப்பாட்டை வெளியிட்டது. அதாவது, ஆந்திராவுடன் தெலங்கானா பகுதி சேர்வதால், அந்தப் பகுதி மக்களின் நலன்கள் ஆந்திர மக்களால் பறிக்கப்படுமோ என்பதுதான் அந்த அச்சம். இதைப் போக்கும் வகையில், புதுதில்லியில் உள்ள ஹைதராபாத் ஹவுஸ் என்கிற கட்டடத்தில் (இப்போது வெளிநாட்டு விருந்தினர்களை உபசரிக்க இந்த மாளிகை பயன்படுத்தப்படுகிறது) ஆந்திராவின் பிரதிநிதிகளுக்கும், ஹைதராபாத் மாகாண பிரதிநிதிகளுக்கும் ஒரு நல்லெண்ண ஒப்பந்தம் (Gentleman Agreement ) கையெழுத்து ஆனது.

அதன்படி, புதிதாக அமையவுள்ள ஆந்திரப்பிரதேச மாநிலத்தில், ஆந்திர மக்களுக்கு இணையாக சம உரிமை, வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையில் இந்த ஒப்பந்தம் உறுதியானது. ஒருங்கிணைந்த ஆந்திரப்பிரதேசம் 1956ஆம் ஆண்டு, நவம்பர் 1ஆம் தேதி உதயமானது.

அதுவரையிலும் ஹைதராபாத் மாகாணத்தில் கன்னடம் பேசும் மக்கள் வசித்து வந்த பீதர், குல்பர்கா, ராய்ச்சூர், யாதகிரி, கொப்பல் போன்ற மாவட்டங்கள், பெங்களூருவைத் தலைநகராக உருவாக்கப்பட்ட கர்நாடகா மாநிலத்துடன் இணைக்கப்பட்டன. அதேபோல், மராத்தி மொழி பேசும் மராத்வாடா பகுதிகள், மும்பையைத் தலைநகராகக் கொண்டு உருவாக்கப்பட்ட மகாராஷ்டிர மாநிலத்துடனும் ஐக்கியமாயின.

1969ஆம் ஆண்டின் முதல் தனித் தெலங்கானா போராட்டம்!

1959ஆம் ஆண்டில் பிறந்த ஆந்திரப்பிரதேசத்தில், ஆரம்பத்திலிருந்தே அக்கப்போர் தொடங்கிவிட்டது. கர்னூலுக்குப் பதிலாக ஹைதராபாத், ஒருங்கிணைந்த ஆந்திரப்பிரதேசத்தின் தலைநகரானது. ஆனாலும், நீதியரசர் இஃபசல் அலி, வெளியிட்ட கவலை தோய்ந்த சந்தேகம் உண்மையானது. கல்வியறிவிலும், பிற நிறங்களிலும் மேம்பட்ட கடலோர ஆந்திர மாநிலத்தவர், தெலங்கானா மக்களின் உரிமைகளைப் புறக்கணித்து, கல்வி, வேலைவாய்ப்புகளில் கோலோச்சத் தொடங்கினர். முல்கி ஒப்பந்தம் ஏட்டில் மட்டுமே இருந்தது. 1969ஆம் ஆண்டில் தெலங்கானா தனி மாநிலம் கேட்டு, மீண்டும் வெடித்தது போராட்டம்; தடியடி, துப்பாக்கி சூடு நடந்தது. 369 பேர் மரணம் அடைந்தார்கள். இன்றளவும் ஹைதராபாத் நகரின் மையப் பகுதியில் பப்லிக் கார்டன் ( சைஃபாபாத் என்னும் இடத்தின் அருகில்) என்னும் இடத்தில், 1969 முதல் தெலங்கானா போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்காக ஒரு மணி மண்டபம் இருக்கிறது.

தொடர்ச்சி மதியம் 1 மணி பதிப்பில்...

(கட்டுரையாளர்: எஸ்.இரவி, புவிசார் குறியீடு நிபுணர், ஹைதராபாத்)

அதிமுகவில் சசிகலா: எடப்பாடிக்கு அதிகரிக்கும் அழுத்தம்!

9 நிமிட வாசிப்பு

அதிமுகவில் சசிகலா:  எடப்பாடிக்கு  அதிகரிக்கும் அழுத்தம்!

கொடநாடு: சசிகலா கொடுத்த குறிப்புகள்... எடப்பாடி மீது கொலைச் சதி ...

7 நிமிட வாசிப்பு

கொடநாடு:  சசிகலா கொடுத்த குறிப்புகள்... எடப்பாடி மீது கொலைச் சதி வழக்கு?

கனகராஜ் மரணம்: சகோதரர் உட்பட 2 பேர் கைது!

3 நிமிட வாசிப்பு

கனகராஜ் மரணம்:  சகோதரர் உட்பட 2 பேர் கைது!

ஞாயிறு 8 ஆக 2021