மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 22 செப் 2021

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

கடலூரில் திமுக எம்.பிக்கு சொந்தமான முந்திரி ஆலையில் பணிபுரிந்த தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது. அந்தத் தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்டார் என அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்ட, திமுக எம்.பி தரப்பில் அந்த தொழிலாளி விஷம் குடித்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார் எனக் கூறுகின்றனர்.

என்ன நடந்தது? யார் அந்த தொழிலாளி?

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பணிக்கன்குப்பத்தில் கடலூர் திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி. ரமேஷுக்குச் சொந்தமாக ‘காயத்ரி கேஷுவ்ஸ்’ முந்திரி ஆலை இயங்கி வருகிறது. இந்த முந்திரி ஆலை மட்டுமின்றி ரமேஷ் எம்.பிக்கு சொந்தமாக மூன்று ஆலைகள் உள்ளன. ஒவ்வோர் ஆலையிலும் 100க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் பணியாற்றி வருகின்றனர். இந்த ஆலைகளிலிருந்து வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களுக்கு முந்திரி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

காயத்ரி கேஷுவ்ஸ் முந்திரி ஆலையில், மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் கடந்த ஏழு ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார். இவர் மனைவி இறந்துவிட்டார். மகன் செந்தில்வேல் மற்றும் மகள் வளர்மதி உள்ளனர். இதில் செந்தில்வேல் சென்னையில் பணியாற்றி வருகிறார்.

முந்திரியை உரிப்பதற்காக, அதைப் பதப்படுத்திக் கொடுப்பதுதான் கோவிந்தராஜின் பணி. தினமும் காலை 8 மணிக்குப் பணிக்குச் சென்று இரவு 8 மணிக்கு வீடு திரும்புவது அவரது வழக்கம். ஆனால் செப்டம்பர் 19ஆம் தேதி அன்று வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில்தான் கோவிந்தராஜுவின் மகனுக்கு , ‘உங்கள் அப்பா விஷம் குடித்துவிட்டு இறந்துவிட்டார்’ என்று முந்திரி ஆலையிலிருந்து தகவல் சென்றது.

இந்தத் தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், பண்ருட்டி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கோவிந்தராஜின் உடலைச் சென்று பார்த்தனர். அவரது உடலில் காயங்கள் இருந்ததால், கோவிந்தராஜ் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என காவல் துறையில் அவரது மகன் புகார் அளித்தார்.

காவல் நிலையத்தில் கோவிந்தராஜ் மகன் செந்தில்வேல் அளித்த புகாரில், “நான் சென்னையில் பணியாற்றி வருகிறேன். சம்பவத்தன்று காலை 8 மணிக்கு என் அப்பா வேலைக்குச் சென்றுவிட்டார். இரவு வீடு திரும்பவில்லை. செப்டம்பர் 20 அன்று அதிகாலை 2.25 மணியளவில் அப்பா நம்பரிலிருந்து எனக்கு போன் வந்தது. அப்போது டிஆர்வி ரமேஷ் உதவியாளர் பேசுவதாகவும், ‘அப்பா முந்திரி கம்பெனியில் மருந்து குடித்துவிட்டு இறந்துவிட்டார்’ என்றும் தெரிவித்தார்.

உடனடியாக நான், எனது பெரியப்பா மகன் ரகுராமன் மற்றும் ஆனந்தராஜ் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தேன். அவர்கள் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்குச் சென்று அங்குள்ள பிரேதத்தைப் பார்த்து உடல் முழுவதும் காயம் உள்ளது எனவும் ரத்தக்கறை படிந்து இருந்ததையும் படம்பிடித்து செல்போனில் எனக்கு அனுப்பி வைத்தனர்.

அந்தப் படத்தில் அப்பாவுடைய இடது கண் மற்றும் முகம், கழுத்து, உடல் முழுவதும் காயம் மற்றும் ரத்தக்கறைகள் இருந்தன.

எனது அப்பா நல்ல மனநிலையில் இருந்தார். அதனால் மருந்து குடிக்க வேண்டிய அவசியம் இல்லை. நான் விசாரித்துப் பார்த்ததில் டிஆர்பி ரமேஷ், அவரது உதவியாளர் நடராஜன் கம்பெனி மேலாளர் கந்தவேல், வினோத் என கம்பெனி ஆட்கள் தாக்கியதால்தான் இறந்துவிட்டார். எனவே எனது தந்தையைக் கொலை செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குற்றம்சாட்டியுள்ளார். கடந்த ஒரு வாரமாக கம்பெனியில் ஓரவஞ்சனையாக நடந்து கொள்கின்றனர். காலப்போக்கில் சரியாகிவிடும் என சிவசங்கர பூபதி மற்றும் லோகநாதன் ஆகியோரிடம் அப்பா கூறியிருக்கிறார் என்றும் புகாரில் குறிப்பிட்டுள்ளார் செந்தில்வேல்.

புகார் அளித்தும் அதை ஏற்றுக்கொள்ளாமல் இருந்ததால் பணிக்கன்குப்பத்தில் நேற்று முன்தினம் பாமகவினரும், உயிரிழந்த கோவிந்தராஜின் உறவினர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, காவல் துறையினர் குற்ற எண் 562/2021 U/s 174 (1) cr pc பிரிவின் கீழ் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ், நடராஜன், அல்லா பிச்சை, வினோத், கிருஷ்ணமூர்த்தி ஆகிய ஐந்து பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் பூதாகரமானதால் காவல்துறையைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் திமுக எம்.பி தரப்பிடம், கோவிந்தராஜின் குடும்பத்தை அழைத்து செட்டில்மென்ட் ஏதாவது பேசுங்கள்... பிரச்சினை பெரிதாகிறது என்று கூறியிருக்கின்றனர். அதற்கு எம்.பி தரப்பில், ‘நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ எனப் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் தற்போது வரை எம்.பி மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் பாமகவினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்று மனு கொடுத்தனர்.

அதில், “எம்.பி மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் கோவிந்த ராஜின் உடலை வாங்கமாட்டோம்” என குறிப்பிட்டுள்ளனர்.

அதேநேரத்தில், எம்.பி தரப்பிலிருந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்பதால் கோவிந்தராஜ் மகன் செந்தில்வேலுவை பாமகவினர் தைலாபுரத்துத் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டனர்.

கோவிந்தராஜ் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து அறிக்கை வெளியிட்ட பாமக நிறுவனர் ராமதாஸ், “இரவு 8 மணிக்குப் பணி முடித்துத் திரும்ப வேண்டிய கோவிந்தராஜ் மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதாக அடுத்த நாள் அதிகாலையில்தான் குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரிவித்துள்ளனர். அப்படியானால் இடைப்பட்ட நேரத்தில் நடந்தது என்ன? இதுகுறித்து முந்திரி ஆலையில் பணியாற்றும் சிலரிடம் விசாரித்தபோது மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி. ரமேஷ், அவரது உதவியாளர் நடராஜன், ஆலை மேலாளர் கந்தவேல், அல்லா பிச்சை, வினோத், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் சேர்ந்து கோவிந்தராஜை அடித்துக் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. உயிரிழந்த கோவிந்தராஜின் வாயில் நஞ்சை ஊற்றி அவர் நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டதாகப் பொய் செய்தி பரப்பப்படுகிறது. கொல்லப்பட்ட கோவிந்தராஜ் பாமக நிர்வாகி. அவரது படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரை பாமக ஓயாது.

கோவிந்தராஜ் கொலை தொடர்பாக காடாம்புலியூர் காவல் நிலையத்தில், டி.வி.ஆர்.ரமேஷ் உள்ளிட்டோர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கில் காவல் துறை செயல்பாடுகள் நிறைவளிக்கவில்லை.

கோவிந்தராஜை இரக்கமற்ற முறையில் அடித்துக் கொடுமைப்படுத்தி கொலை செய்த வழக்கில் கடலூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.ரமேஷ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து உடனடியாக அனைத்து எதிரிகளையும் கைது செய்ய வேண்டும். கோவிந்தராஜின் உடலை வெளிமாவட்ட மருத்துவர்களைக்கொண்டு கூறாய்வு செய்ய வேண்டும்; கூறாய்வு முழுமையாக காணொலி பதிவு செய்யப்பட வேண்டும். இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும். கோவிந்தராஜ் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

கோவிந்தராஜ் மரண விவகாரத்தில் என்ன நடந்தது என நாம் விசாரித்ததில், “கோவிந்தராஜ் முந்திரி ஆலையில் பணியாற்றியபோது எம்.பி.க்கு நம்பிக்கையானவராக இருந்தார். இந்த நிலையில் கோவிந்தராஜ் முந்திரியை திருடி எடுத்துச் சென்று வெளியில் விற்கிறார் என்று அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதுதொடர்பாக சம்பவத்தன்று எம்.பி. ரமேஷ் கோவிந்தராஜை அழைத்து விசாரி்த்து, ‘இவ்வளவு நம்பிக்கையாக இருந்துவிட்டு ஏன் இப்படி திருட்டு வேலை செய்கிறாய்’ என அவர் மேலே கையும் வைத்துவிட்டார். முதலாளி அடிக்கவும், கம்பெனி ஆட்களும் கோவிந்தராஜை அடித்துவிட்டனர்.

இதனால் காடாம்புலியூர் காவல் நிலையத்துக்குச் சென்ற கோவிந்தராஜ், எம்.பி மீது புகார் கொடுத்தார். ஆனால், அந்த புகாரை காவல் நிலையத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.

காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்த அவர் எங்கு போனார், என்ன செய்தார் எனத் தெரியவில்லை. இந்த நிலையில்தான் நள்ளிரவு 2.25 மணிக்கு கோவிந்தராஜின் மகனுக்கு எம்.பி உதவியாளர், ‘அப்பா இறந்துவிட்டதாக’ தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக செந்தில்வேலும் பதறியடித்துக்கொண்டு சென்னையில் இருந்து வந்துவிட்டார்” என்கின்றனர் கோவிந்தராஜுடன் இருந்தவர்கள்.

அதோடு, கோவிந்தராஜ் புகார் அளித்துவிட்டு வெளியே வந்தபோது அவரை கம்பெனிக்கு அழைத்துச் சென்று மீண்டும் தாக்கியுள்ளனர். இறந்த பிறகு தற்கொலை என நம்ப வைக்க வாயில் விஷம் ஊற்றியுள்ளனர். எது உண்மை என்று தெரியவில்லை” எனவும் அவர்கள் புலம்பினர். இதுதொடர்பாக நாம் காவல் துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, “பிரேதப் பரிசோதனை செய்தால்தான் எதுவாக இருந்தாலும் சொல்ல முடியும். ஆனால் இவர்கள் பிரேத பரிசோதனை செய்ய ஒத்துழைக்கவில்லை. இறப்பதற்கு முன் மருந்து குடித்தாரா? இறந்த பின் மருந்து ஊற்றினார்களா என்றெல்லாம் பிரேத பரிசோதனை செய்தால் தெரியும்” என்கின்றனர்.

எம்.பி ரமேஷை தொடர்புகொண்டு கேட்டபோது, “என் கிட்ட வேலை செய்த கோவிந்தராஜ் ரொம்ப நம்பிக்கையா இருந்தார். என் கம்பெனியிலிருந்து லட்ச ரூபாய் மதிப்பிலான முந்திரியை எடுத்துச் சென்று விற்றுள்ளது தெரியவந்ததும் கோபம் தாங்காமல் அழைத்து விசாரித்தேன். அதனால் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டார்” என்கிறார்.

பாமகவைச் சேர்ந்த ஜெகன் என்பவர் நம்மிடம் பேசுகையில், “திருடியதால்தான் அடித்தேன் என்று சொல்கிறார். முந்திரி ஆலையில் சிசிடிவி எல்லாம் உள்ளது. திருட்டு நடக்கிறது எனத் தெரிந்து இத்தனை நாள் சிசிடிவி கேமராவை கண்காணிக்காமல் இருந்தார்களா? இதற்கு வேறு காரணம் உள்ளது” என்று தெரிவித்தார்.

கோவிந்தராஜ் மரண விவகாரத்தில், என்ன நடந்திருந்தாலும், அவர் எப்படி இறந்தார் என உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளியே கொண்டுவர வேண்டும். கோவிந்தராஜின் மரணத்துக்கு நீதி வேண்டும் என்று தொழிலாளர்கள் மத்தியில் கோரிக்கை வலுத்துள்ளது.

-வணங்காமுடி

அதிமுகவில் சசிகலா: எடப்பாடிக்கு அதிகரிக்கும் அழுத்தம்!

9 நிமிட வாசிப்பு

அதிமுகவில் சசிகலா:  எடப்பாடிக்கு  அதிகரிக்கும் அழுத்தம்!

கொடநாடு: சசிகலா கொடுத்த குறிப்புகள்... எடப்பாடி மீது கொலைச் சதி ...

7 நிமிட வாசிப்பு

கொடநாடு:  சசிகலா கொடுத்த குறிப்புகள்... எடப்பாடி மீது கொலைச் சதி வழக்கு?

கனகராஜ் மரணம்: சகோதரர் உட்பட 2 பேர் கைது!

3 நிமிட வாசிப்பு

கனகராஜ் மரணம்:  சகோதரர் உட்பட 2 பேர் கைது!

புதன் 22 செப் 2021