மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 26 செப் 2021

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் உத்தரவு!

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் உத்தரவு!

கடலூர் மக்களவைத் தொகுதி திமுக எம்.பி.யான டி.ஆர்.வி. ரமேஷுக்கு சொந்தமான முந்திரி கம்பெனியில் வேலைசெய்த, தொழிலாளி கோவிந்தராஜின் மர்ம மரணத்தின் முடிச்சுகளை நமது மின்னம்பலத்தில் தொடர்ந்து புலனாய்வு செய்து கட்டுரைகளை வெளியிட்டு வருகிறோம்.

கோவிந்தராஜின் உடல் கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி பிற்பகல் விழுப்புரம் மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்களால் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில்... கோவிந்தராஜை விசாரணை என்ற பெயரில் தாக்கியதில், தலையின் பின் பகுதியில் ஸ்கல் உடைக்கப்பட்டதாக தெரியவந்தது. சந்தேக மரணமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ள வழக்கைக் கொலை வழக்காக மாற்ற காவல்துறை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி கோவிந்தராஜ் தாக்கப்பட்ட நாளில் இருந்து, இப்போதுவரை இந்த விவகாரத்தில் நடைபெற்றதை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

கோவிந்தராஜ் யார்? அவருக்கு என்ன நடந்தது?

பண்ருட்டி தாலுக்கா பணிக்கன்குப்பம் ஊராட்சியில் அமைந்துள்ளது திமுக எம்பி டிஆர்வி ரமேஷ் குடும்பத்திற்குச் சொந்தமான முந்திரி கம்பெனி. இதில் மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் போர்மா செய்யும் வேலையைச் செய்துவந்தார். அதாவது முந்திரியை ஹீட் செய்து உடைக்க பதப்படுத்திக் கொடுப்பது.

இந்த கம்பெனிக்கு அதன் ஓனரான எம்.பி.ரமேஷ் அவ்வப்போது வருவார். முக்கிய நிர்வாகிகளிடம் பிசினஸ் பற்றி விவாதிப்பார். முந்திரி கம்பெனியில் ஓனர் ரமேஷுக்கு என்று தனியாக அறை இருக்கிறது. 19 ஆம் தேதி மாலையில் கம்பெனிக்கு வந்த ரமேஷ், தனது அறைக்குச் சென்றுள்ளார். ரிலாக்ஸாக கொஞ்ச நேரம் மது அருந்தியுள்ளார் ரமேஷ்.

அதற்கு முன்பே தொழிலாளி கோவிந்தராஜ் பற்றி சில தகவல்களை தனது நிர்வாகிகள் மூலமாக கேள்விப்பட்டிருக்கிறார் ரமேஷ். பல லட்சம் மதிப்புள்ள முந்திரியை கம்பெனியில் இருந்து அவ்வப்போது திருடி வெளியில் விற்பனை செய்துவிட்டார் என்பதுதான் கோவிந்தராஜ் மீது ரமேஷுக்கு சென்ற புகார். அன்று மாலை மது அருந்திக் கொண்டிருந்தபோதே, ‘கூப்பிடுய்யா அந்த கோவிந்தராஜை’ என்று டென்ஷனாக உத்தரவிட்டுள்ளார் ரமேஷ் எம்.பி. ஏற்கனவே இருக்கும் அதிகார போதையோடு ஆல்கஹால் போதையும் சேர்ந்து கொண்டதால் விசாரணை கடுமையாகவே இருந்துள்ளது.

வாய் வார்த்தையாகவே போய்க் கொண்டிருந்த விசாரணை மதுவின் உபயத்தால் திசைமாறியது. கோவிந்தராஜை கோபமாக ரமேஷ் தாக்க.... அவ்வளவுதான் கம்பெனி மேனேஜர் உள்ளிட்ட ஊழியர்களும் சேர்ந்து கோவிந்தராஜுவை தாக்கத் தொடங்கினார்கள். ரத்தக் காயமானதால், ‘அண்ணே... நாங்க பாத்துக்குறோம்’என்று சொல்லிவிட்டு, நள்ளிரவு கோவிந்தராஜை ரத்தக்காயத்துடன் காடம்புலியூர் காவல் நிலையத்திற்கு அழைத்து போயிருக்கிறார்கள் எம்.பி.யின் ஆட்கள்.

அவர் மீது திருட்டு புகார் கொடுத்து வழக்கு பதிவுசெய்து சிறையில் அடைக்கச் சொல்லியுள்ளார்கள்.எம்பி ஆதரவாளர்கள், அப்போது பணியிலிருந்த போலீஸார் கோவிந்தராஜ் கடுமையான ரத்தக் காயத்தோடு இருப்பதைப் பார்த்து, ’இந்த நிலைமையில இங்க வச்சிருக்க முடியாது. . ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போங்க’ என்று சொல்லி அனுப்பிவிட்டார்கள். ஆனால், மீண்டும் அவர்கள் வரவில்லை. மறுநாள் செப்டம்பர் 20 ஆம் தேதி, கோவிந்தராஜ் மகன் செந்தில்வேல் சென்னையிலிருந்து ஊருக்கு வந்து காடம்புலியூர் காவல் நிலையத்துக்குச் சென்றார்.

“எம்.பி உட்பட ஐந்து பேர் பெயர் தெரிந்தவர்களும் மற்றும் பலர் சேர்ந்து எனது தந்தையைக் கொலை செய்துவிட்டார்கள்” என்று செந்தில்வேல் புகார் கொடுக்க, போலீஸாரே அதிர்ந்துவிட்டார்கள்.

அரசியல் அழுத்தம் கொடுத்த ராமதாஸ்

ஆளும் கட்சி எம்.பி. மீது கொலைப் புகார் வந்த நிலையில் மெல்ல மெல்ல லோக்கல் அரசியல் அழுத்தங்களும் போலீஸாருக்கு வரத் தொடங்கின. ஆனால் பாமக நிறுவனர் ராமதாஸுக்கு இந்தத் தகவலை லோக்கல் பாமகவினரே கொடுக்க, விவகாரம் அரசியல் ரீதியாகவும் சூடானது.

இந்தப் பின்னணியில் எம்.பி.யை கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும், நீதி வேண்டும் என்று பாமகவினரும், ஊர் மக்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமதாஸும் ட்விட்டரில் கண்டனத்தைப் பதிவு செய்தவர், “இறந்தவர் உடலை ஜிப்மர் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும். எம்.பி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். அதே கோரிக்கையை பாமகவினர் 21ஆம் தேதி கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனுவாகக் கொடுத்தனர். பாமக சார்பில் வழக்கறிஞர் பாலு சென்னை உயர் நீதிமன்றத்துக்கும் இந்த விவகாரத்தை எடுத்துச் சென்றார்.

நீதிமன்ற உத்தரவின்படி போஸ்ட் மார்ட்டம்!

உயர் நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார் வழிகாட்டுதலின்படி கோவிந்தராஜ் பிரேதத்தை ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் 23 ஆம் தேதி, விழுப்புரம் முண்டியாம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்தனர். உறவினர்களின் போராட்டத்தை சமாளித்து அவர்களிடம் பேசி கோவிந்தராஜின் உடலை, போலீஸார் ஒப்படைத்தனர்.

மின்னம்பலம் சார்பில் ஜிப்மர் மருத்துவர்கள் வட்டாரத்தில் விசாரித்தபோது, “கோவிந்தராஜின் தலையின் பின் பகுதியில் அடிபட்டு ஸ்கல் ஓப்பனாகியுள்ளது. இடது கண் பகுதியில் அடிபட்டுள்ளது. காது பக்கத்தில் எலும்பு உடைந்துள்ளது. வயிற்றுப் பகுதியில் அடிபட்டுள்ளது. இறப்பிற்கு காரணம் தலையின் பின் பகுதியில் ஸ்கல் (பின் மண்டையில் இருக்கும் உள் எலும்பு) ஓப்பனாகியுள்ளதுதான்” என்றார்கள்.

போலீஸாரைப் பார்த்து எரிச்சலான எம்.பி.

போஸ்ட் மார்ட்டம் முடிந்த பிறகு, எம்பி மற்றும் அவரது ஆட்கள் தாக்கியதால்தான் கோவிந்தராஜ் மரணம் அடைந்திருக்கிறார் என்பதை கிட்டத்தட்ட உறுதி செய்துகொண்ட கடலூர் மாவட்ட போலீஸார், எம்பி ரமேஷுக்குச் சொந்தமான முந்திரி கம்பெனி, கடை, வீடுகளில் போலீஸ் பாதுகாப்பை அதிகப்படுத்தினார்கள். பாதுகாப்பு பணிகள் சரியாக இருக்கிறதா என்று கண்காணிக்க, அன்றே பண்ருட்டி 6வது போலீஸ் லைனில் உள்ள எம்பி வீட்டுக்கு காடம்புலியூர் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் சென்றிருக்கிறார். அப்போதும் வீட்டு வாசலில் போதையில் நின்ற எம்.பி. ரமேஷ், கோபத்தோடு எஸ்.ஐ.யைப் பார்த்து திட்டியிருக்கிறார். ரமேஷ் பதற்றத்தில் இருக்கிறார் என்பதை இதன் மூலமே உணர்ந்துகொண்டனர் போலீஸார்.

கடலூரில் இருந்து சென்னைக்கு சென்ற ரிப்போர்ட்!

கொலைப் புகார் வளையத்துக்குள் இருப்பது எம்.பி.என்பதால், போலீஸ் அதிகாரிகளும் முதல்வர் ஸ்டாலினுக்கு முழு ரிப்போர்ட்களை கொடுத்துள்ளனர். முதற்கட்ட விசாரணை முதல், பாமக இந்த விவகாரத்தைக் கையிலெத்தது, ஜிப்மர் மருத்துவர்களின் போஸ்ட் மார்ட்டம், போலீஸாரைப் பார்த்து ரமேஷ் திட்டியது வரை முழு தகவலையும் போலீஸ் மேலிடத்துக்கு கடலூர் போலீஸார் அனுப்ப, அந்த ரிப்போர்ட் முதல்வர் ஸ்டாலினுக்கும் சென்று சேர்ந்தது.

ஸ்டாலின் உத்தரவை ரமேஷிடம் சொன்ன அன்பகம் கலை

இதையடுத்து திமுக தலைமையில் இருந்து ஸ்டாலினுக்கு மிக நெருக்கமானவரும் துணை அமைப்புச் செயலாளருமான அன்பகம் கலை கடலூர் எம்.பி.யான ரமேஷிடம் பேசியிருக்கிறார்.

“என்ன இப்படி பண்ணிட்டீங்க? திருடிட்டான்னா போலீஸ்ல புகார் கொடுக்க வேண்டியதுதானே... இப்ப என்னாச்சு பாத்தீங்களா? சிஎம் வரைக்கும் எல்லா ரிப்போர்ட்ஸும் போயிடுச்சு. உங்க மேல ரொம்ப கோவமா இருக்காரு சிஎம். எம்.பி. பதவியை ரிசைன் பண்ணிட்டு விசாரணையை ஃபேஸ் பண்ண சொல்லியிருக்காரு. அதனால எதுக்கும் தயாரா இருங்க’ என்றதும் எம்பி ரமேஷ் ஆடிப் போய்விட்டார்.

போராடித் தோற்ற ரமேஷ்

முந்திரி கம்பெனியில் வேலை செய்யும் முக்கிய ஊழியர்கள் சிலரிடம் பேசினோம். “எங்கள் எம் டி (எம்பி) நல்லா குடிப்பார். மத்த விஷயங்களும் உண்டு. எம்பி,யாக டெல்லிக்குப் போனபிறகும் அங்கேயும் அப்படிதான் இருப்பார், அந்த வகையில்தான் பெரிய பெரிய இடத்து நட்புகள் கிடைத்தது, தேர்தலில் என்னை உதயநிதியே நிற்கச் சொன்னார். நானும் உதயநிதியும் தொழில் பாட்னர்கள், அவர்தான் சீட் கொடுத்தார் அப்படினு கூட்டத்துலயே பேசியிருக்காரு. அந்த வகையில இந்த சிக்கல்லேர்ந்து தன்னை விடுவிக்க சொல்லி, மேலே பலர்கிட்டயும் பேசியிருக்காரு. ஆனா போலீஸ் ரிப்போர்ட் தெளிவா இருக்கறதால அவருக்கு யாரும் உதவ முன் வரலை” என்கிறார்கள்.

அக்ரி கிருஷ்ணமூர்த்தி போல...

2011- 2016 அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி புதிய போஸ்டிங் போடுவதற்கு லட்சக் கணக்கில் லஞ்சம் கேட்டு அழுத்தம் கொடுத்ததாக வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை செய்துகொண்டார், அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யச்சொல்லி, மாவட்டச் செயலாளர் பதவியும் பிடுங்கிக்கொண்டு கைது செய்ய உத்தரவிட்டார். அதே நிலைதான் திமுக எம்பி ரமேஷுக்கும் நடக்கும். செப்டம்பர் 27ஆம் தேதி, பிரேதப்பரிசோதனை அறிக்கை கிடைக்கும், அறிக்கை வந்ததும் செக்‌ஷன் மாற்றப்பட்டு நிச்சயமாகக் கைது செய்வோம் என்கிறார்கள் போலீஸார்.

-வணங்காமுடி

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

ஞாயிறு 26 செப் 2021