மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 13 அக் 2021

நெருங்கிய ரத்த உறவுக்குள் திருமணம் செய்துகொள்ளாத ஹரியானா தமிழ்நாட்டைவிட முற்போக்கானதா? - பகுதி 1:

நெருங்கிய ரத்த உறவுக்குள் திருமணம் செய்துகொள்ளாத ஹரியானா தமிழ்நாட்டைவிட முற்போக்கானதா? - பகுதி 1:

பாஸ்கர் செல்வராஜ்

மாமன் மகள், அத்தை மகன் என நெருங்கிய ரத்த உறவுக்குள் அதிகம் திருமணம் செய்துகொள்ளும் மாநில மக்களைப் பற்றிய கணக்கெடுப்பில் அருணாசலப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய இரு மாநிலங்களைத் தவிர்த்து வடக்கின் பெரும்பாலான மாநிலங்களில் இவ்வாறான திருமணங்கள் மிகக் குறைவாகவே நடைபெறுகின்றன. கேரளாவைத் தவிர்த்து, வடக்கில் இருந்து தெற்கே செல்லச்செல்ல இது மெல்ல அதிகரித்து தமிழ்நாட்டிலும் ஆந்திரத்திலும் உச்சத்தை அடைகிறது. இம்மாதிரியான நெருங்கிய உறவுக்குள்ளான திருமணம் இந்த இணையர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மரபணு சார்ந்த நோய்களை உருவாக்கும் என்பது அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்பட்ட உண்மை. இந்த வகையில் பார்த்தால் இம்மாதிரியான திருமணமே நடக்காத ஹரியானா முற்போக்கான மாநிலமாகவும் இதுபோன்ற திருமணம் அதிகம் நடக்கும் தமிழ்நாடு பிற்போக்கானதாகவும் கருத வேண்டியிருக்கிறது.

அறிவியல் பார்வையற்ற ஹரியானாவின் பழக்கம்

ஹரியானா இந்த அறிவியல் உண்மையை உணர்ந்து இவ்வாறான மணமுறையைத் தவிர்த்திருந்தால் அது நிச்சயம் முற்போக்கானதுதான். ஆனால், இப்படித் திருமணம் நடக்காமல் இருக்க காரணம், சாதி மாறி திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்பதைப்போல, ஒரு கோத்திரத்துக்குள் திருமணம் செய்வது அந்த மாநிலத்தில் மட்டுமல்ல; வடக்கில் பெரும்பாலான மாநிலங்களிலும் சமூக ரீதியாக தடை செய்யப்பட்டது. மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் உள்ள ஊர்ப் பெரியவர்களை உள்ளடக்கிய காப் பஞ்சாயத்துக்கள் சாதி மாறியும், கோத்திரத்துக்குள்ளும் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்ற சமூகக் கட்டுப்பாட்டை நிலைநிறுத்தி வருகின்றன. மீறுபவர்களை ஊர் முன்னிலையில் அவமானப்படுத்துவது, வன்புணர்வு செய்வது, கொல்வது என மிகக்கடுமையான தண்டனைகளை நிறைவேற்றி இதில் எந்த உடைப்பும் ஏற்படாமல் பார்த்துக்கொள்கின்றன.

சாதி மாறி திருமணம் செய்தால் தமிழ்நாட்டிலும் கொலை செய்வது வரை செல்வது இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆதலால், இங்கு யாரும் அது குறித்து எழுப்பப் போவதில்லை. ஆனால், ஏன் கோத்திரத்துக்குள் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என பார்ப்பனர்களைத் தவிர்த்து மற்றவர்களுக்கு கேள்வி எழும் வாய்ப்பிருக்கிறது. ஏனெனில், பார்ப்பனர்களைத் தவிர, மற்றவர்கள் தமிழகத்தில் சாதி பார்த்து மணம் செய்கிறார்களே ஒழிய, கோத்திரம் பார்த்துச் செய்வதில்லை. கோத்திரம் பார்த்து திருமணம் செய்பவர்களைப் பொறுத்தவரை ஒரு கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் அக்கா, தங்கை, அண்ணன், தம்பிகள். ஆதலால் அவர்களுக்குள் திருமணம் செய்துகொள்வது சாத்தியமற்றது. மற்றவர்களைப் பொறுத்தவரை சித்தப்பன் மக்கள், பெரியப்பன் மக்களை உள்ளடக்கிய ஒரே வகையறா அல்லது கொத்துக்குள் மணம் செய்து கொள்வது மட்டுமே முறைதவறிய திருமணம். இதற்கு வெளியில் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள் மணம் செய்துகொள்ள தடையேதும் இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

மூன்று வகைப் பழக்கம் மூவரும் ஒன்றுபடும் இடம்

இதற்கு நேரெதிராக, முஸ்லிம் சமூகத்தில் பெரியம்மா மக்கள், சின்னம்மா மக்களுக்குள் ஒருதாய் வயிற்று மக்கள் என்ற வகையில் மணம் தடை செய்யப்பட்டதே ஒழிய... சித்தப்பன் மக்கள், பெரியப்பன் மக்களுக்குள் மணம் செய்ய தடையேதும் இல்லை. மேலே பார்த்த 1. ஒரு கோத்திரத்துக்குள் மணம் செய்யக்கூடாது 2. ஒரு தகப்பன் வழி வந்த வகையறா அல்லது கொத்துக்குள் மணம் செய்யக்கூடாது 3. ஒரு தாய்வழியில் வந்த கொத்துக்குள் மணம் செய்யக் கூடாது என்ற மூன்று வகையும் வேறுபடும் அதேவேளை இம்மூன்றும் ஒரே சாதிக்குள் அல்லது குறிப்பிட்ட குழு அடையாளத்துக்குள் மட்டுமே மணம் செய்துகொள்ள அனுமதி என்பதில் ஒன்றுபடுகின்றன. அதாவது, இந்தக் குழுவுக்குள் எப்படி மணம் செய்துகொள்வது என்பதில்தான் மூன்றும் வேறுபடுகிறது.

இந்த வேறுபாட்டைப் புரிந்துகொள்ள இனம், இனக்குழு, கோத்திரம், குலம், குலக்குழு, குலக்கொழுந்து என நம்மிடம் புழக்கத்தில் இருக்கும் வார்த்தைகளுக்கான உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் நிலைத்து வாழும் மக்கள் கால வளர்ச்சியில் பொதுவான ஒத்த மொழி, மதம், பழக்கவழக்கம், பண்பாட்டு அடையாளத்தின் மூலம் ஓரின (Race) மக்களாக அடையாளம் பெறுகின்றனர். ஒரே தமிழ்மொழியைப் பேசுபவர்கள் என்ற வகையில் தமிழினம் என நாம் அடையாளம் பெறுவதைப்போல. ஆதியில் ஓரினமாக இருந்தாலும் எண்ணிக்கையில் பல்கிப் பெருகும்போது இந்த மக்கள் வாழும் பரப்பு பெருகுகிறது. முதலில் ஒரு இனக்குழுவாக (Tribe) இருந்தவர்கள் பல இனக்குழுக்களாகப் பிரிகின்றனர். இதற்கு உதாரணமாக முற்காலத்தில் சேர, சோழ, பாண்டியர் எனப் பிரிந்ததையும் இக்காலத்தில் ஒரே சாதியில் பல உட்பிரிவுகள் (தேவர் சாதியில் உள்ள அகமுடையார், கள்ளர், மறவர் என மூன்று உட்பிரிவுகள்) இருப்பதையும் சொல்லலாம்.

மணமுறையின் பொருளாதார அடித்தளம்!

ஆதியில் காடுகளில் வேட்டையாடி தனக்கான உணவு உள்ளிட்ட வாழ்வாதார தேவைகளைப் பெறும் இந்த இனக்குழுக்கள் இந்தப் பரப்புக்குள் இயற்கையாகக் கிடைக்கும் உணவுப்பொருட்கள் குறைவானது என்பதால், இதை இந்தக் குழுவுக்கு மட்டுமானதாக்கும் பொருட்டு, இவர்களுக்குள் மட்டுமே திருமணம் செய்துகொண்டு இந்த இயற்கை செல்வத்தை இவர்களுக்கும், இவர்களின் சந்ததிகளுக்கும் மட்டுமானதாக ஆக்குகிறார்கள். இந்தப் பகுதிக்குள் வாழும் அனைவருக்கும் இந்தச் செல்வம் பொதுவானது. இதை உண்டு புசித்து வாழும் உரிமை இந்தக் குழுவைச் சேர்ந்த அனைவருக்கும் உண்டு. அந்த வகையில் இந்தக் குழுவுக்குள் ஜனநாயகமும், சமத்துவமும், சகோதர(ரி)த்துவமும் நிலவும். இப்படியான இந்தக் குழுவுக்கு இனக்குழு (Tribe) என்று பெயர். அதேசமயம் இந்தச் செல்வத்தை வெளியில் இருந்து வந்து மற்றவர்கள் கைப்பற்ற முனைவதும், இவர்கள் காப்பாற்ற முனைவதுமாக இந்தக் குழுவுக்கு வெளியில் மற்ற இனக்குழுக்களுடன் எப்போதும் பகைமை நிலவும். ஆக, இந்த ஜனநாயகம், சமத்துவம், சகோதர(ரி)த்துவம் எல்லாம் இந்த இனக்குழுவுக்குள் மட்டுமே நிலவும். இதற்கு வெளியில் அது போட்டி, செல்வ அபகரிப்பு, போர், கொலை எனப் பகைமையைக் கொண்டிருக்கும்.

இந்த இனக்குழுவுக்குள்ளான திருமணம் ஆதியில் வரைமுறையற்றதாக இருந்தாலும் பிற்காலத்தில் ஒரு தாய்வழியில் பிறந்தவர்கள், அக்கா, தம்பிகள் என்ற வகையில் இவர்களுக்குள் திருமணம் தடை செய்யப்பட்டது. இந்த ஒரு தாயின் வழியில் எள்ளுப்பாட்டி, கொள்ளுப்பாட்டி, முப்பாட்டி, பாட்டி, சின்னம்மா, பெரியம்மா ஆகியோரின் மக்களைக்கொண்ட கொத்துக்கு அல்லது வகையறாவுக்குக் குலக்குழு (Clan Orgen) என்று பெயர். இந்தக் குலக்குழுவைச் சேர்ந்த ஆண்கள் இந்தக் குழுவுக்கு வெளியில் சென்று தனக்கான துணையைத் தேர்ந்தெடுத்து அவர்களுடன் சேர்ந்து வாழ வேண்டும். மற்ற குலக்குழுவைச் சேர்ந்த ஆண்கள் இங்கே வந்து மணம் செய்துகொண்டு இவர்களுடன் வாழ வேண்டும். இப்படி ஒரு தாய் வயிற்றில் பிறந்த மக்களின் எண்ணிக்கை பெருகும்போது குலங்களின் எண்ணிக்கையும் பெருகுகிறது. ஆனால், ஒரே மூதாதையர் வழிவந்தவர்கள் என்ற வகையில் இந்தக் குழுக்குழுவைச் சேர்ந்தவர்கள் அனைவரும் அக்கா, தம்பிகள். இப்படி பல குலக்குழுக்களை உள்ளடக்கிய சகோதர(ரி)ப் பெருங்குழு கோத்திரம் (Phratry) ஆகிறது.

இனம், குலம், கோத்திரம், கூட்டுக்குடும்பம்

ஆக, ஒரு இனம் (Race) என்பது பல இனக்குழுக்களைக் (Tribes) கொண்டது. ஒரு இனக்குழு என்பது பல குலக்குழுக்களைக் (Gens) கொண்டது. பல குலக்குழுக்களை உள்ளடக்கியது கோத்திரம். ஒரு தாய் வழியைச் சேர்ந்த சகோதர சகோதரிகளாலான, மணம் செய்ய விலக்கப்பட்ட குழுக்கள் குலக்குழுக்கள் (Exogamy Group). அதேசமயம் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்புக்குள் இருக்கும் வாழ்வாதார வளங்களைத் தங்களுக்கு மட்டுமானதாக மாற்றும் நோக்கில் இந்தக் குலக்குழுக்களைக் கொண்ட இனக்குழுவுக்குள் மட்டுமே மணம் அனுமதிக்கப்பட்டது (Endogamy Group).

இந்த ஏற்பாடு இயற்கை சார்ந்த வேட்டை சமூகமாக இருக்கும்வரை, எல்லோரும் வேட்டையாடுவது பகிர்ந்து உண்பது என வாழ்ந்தவரை எந்த மாற்றத்தையும் சந்திக்கவில்லை. வேட்டையாடுவதில் இருந்து வேளாண் சமூகமாக மாறி நிலம், மந்தைகள், பொருட்கள் எனத் தனிச்சொத்து ஏற்படும்போது இவற்றை தானும், தனது சந்ததியும் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்ற தனியுடைமை சிந்தனை ஏற்படுகிறது. அதுவரையிலும் தாய்வழியில் பரம்பரையை அடையாளம் காண்பது இப்போது தந்தைவழிக்கு மாறுகிறது. முன்பு ஆண் பிற குலக்குழுவுக்கு இடம்பெயர்வது என்பது மாறி இப்போது பெண் இடம்பெயர்வது என மாற்றி அமைக்கப்படுகிறது. முன்பு, அக்கா, தங்கைகள் அவர்களின் குழந்தைகளையும் வேறு குலத்தில் இருந்து வந்த கணவர்களையும் உள்ளடக்கிய கூட்டுக்குடும்பம் இப்போது அண்ணன், தம்பிகள் அவர்களின் குழந்தைகள் வேறு குலத்தில் இருந்து வந்த மனைவிகளை உள்ளடக்கிய கூட்டுக் குடும்பமாக மாறுகிறது.

பெண் கொடுத்து, பெண்ணெடுக்கும் பழக்கம் ஏன்?

இந்தக் கூட்டுக்குடும்பத்துக்குள் வரும் வேறு குலப் பெண்கள் இங்கிருந்து மற்ற குலத்துக்குச் சென்ற பெண்களின் வாரிசுகளாகவும் அந்தக் கூட்டுக்குடும்பத்துக்கு, இந்தக் குலத்துப் பெண்களும் செல்லும்போது இந்த குடும்பங்களின் செல்வத்தை இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே அனுபவிக்கும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது. இது பெண்கொடுத்து, பெண்ணெடுக்கும் பழக்கமாக மாறுகிறது. முன்பு நிலம் பொதுவாக இருந்தவரை இந்தக் குலக்குழுவின் அளவு பெரிதாக இருந்தது. அது தனி நபர்களுக்கானதாக மாறும்போது இந்தக் குழுவின் அளவு குறுக ஆரம்பிக்கிறது. சொத்துள்ளவர்களுக்கு இது, சொத்தை தங்களுக்குள் அனுபவிக்க செய்துகொள்ளும் ஏற்பாடு. சொத்தற்றவர்களைப் பொறுத்தவரை சொந்தத்துடன் நெருங்கி இணைந்து வாழ பயன்படும் பழக்கம்.

இந்த ஏற்பாடும் நிலமும் அந்த நிலத்தில் வாழும் மக்களும் அங்கே நிலைத்து வாழும் வரைதான் சாத்தியம். இங்கே நிலம் சார்ந்த விவசாயத்துக்குப் பதிலாக நகரங்களில் உள்ள தொழிற்சாலை சார்ந்த உற்பத்திக்கு மாறும்போது கூட்டாக இணைந்து நிலத்தில் உழுது வரும் விளைச்சலில் அனைவரும் உண்டு பசியாறுவது என்பது மறைந்து தனிநபர்கள் தமது திறனை வளர்த்துக்கொண்டு உழைத்து செல்வம் சேர்ப்பது என மாறுகிறது. முன்பு ஒற்றுமையாக உழைத்து உருவாக்கும் செல்வத்தைக் கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்களுக்குள் பகிர்ந்து கொள்வது என்பது மறைந்து தான், தனது குடும்பம், தனது குழந்தைகள் என்ற தனியுடைமை சிந்தனை மேலும் வலுப்பட்டு, கூட்டுக்குடும்பத்தை உடைக்கிறது. தனிக் குடும்பங்களாக மாற்றம் பெறுகிறது. சேர்ந்து வாழும் வாய்ப்போ, தேவையோ இன்றிப் போகிறது. எண்பதுகளில் தமிழகம் முழுக்க இம்மாதிரியான கூட்டுக் குடும்பங்கள் நிறைந்திருந்தது யாவரும் அறிந்தது.

தமிழகத்தில் உடைந்த குலமும் கூட்டுக்குடும்பமும்!

முன்பு ஊர் பெயர் தெரியாத எவரும் ஒரு பகுதிக்குச் சென்றால் எளிதில் அவர்களை அடையாளம் கண்டுவிடுவார்கள். இன்று பொருளாதாரம் வளர்ந்து பெருமளவில் மக்கள் இடப்பெயர்வு நடந்துகொண்டிருக்கும் நிலையில் அது சாத்தியமற்றதாகி வருகிறது. முன்பு பரம்பரை பரம்பரையாக ஒரு தகப்பன் வழி வந்தவர்கள் எல்லாம் நமது சகோதர, சகோதரிகள் என்ற வகையில் அவர்களுடன் மண உறவு கொள்ளாமல் இருந்தது மாறி, இப்போது ஒரே சாதிக்குள், சித்தப்பன் மக்கள் பெரியப்பன் மக்கள் தவிர்த்து, மற்றவர்களுடன் திருமணம் செய்துகொள்வது என்ற நிலையை அடைந்திருக்கிறது. தமிழகத்தில் இந்த வகையறா (அ) கொத்து (அ) குலத்தின் சுருக்கமும், கூட்டுக் குடும்பத்தின் உடைப்பும், தனிக்குடும்பங்களின் பெருக்கமும் தமிழ்ச் சமூகத்தின் வரலாற்று வளர்ச்சியைக் குறிப்பவை. நெருங்கிய சொந்தத்துக்குள்ளான திருமணம் என்பதும், சொந்த சாதிக்குள்ளான திருமணம் என்பதும் இந்தச் சமூகத்தின் தனிநபர்களின் திறன் வளர்ச்சியும், சமூக செல்வ வளர்ச்சியும் இன்னும் மட்டுப்படுத்தப் பட்டதாகவே இருக்கிறது என்பதை நிறுவும் யதார்த்த உண்மைகள்.

இதனடிப்படையில் கோத்திரம், குலம், கூட்டுக்குடும்பம் எனப் பெரிய வட்டத்தில் இருந்து தனிக்குடும்பம் என்ற நிலையை அடைந்திருக்கும் தமிழகம் ஹரியானாவை விட சமூக வரலாற்று வளர்ச்சியில் முற்போக்கானது. ரத்த உறவுக்குள் திருமணம் செய்து கொள்வது மரபணு சார்ந்த நோய்களை உருவாக்கும் என்ற அறிவியல் உண்மையின் அடிப்படையில் பிற்போக்கானது. சாதிய சமூகத்தில் இருந்து வர்க்க சமூகத்தை நோக்கிய சமூக மாற்றத்தின் இடையில் இருக்கும் தமிழகம், முந்தைய சமூகப் பழக்கத்தின் தொடர்ச்சியாக, இடப்பெயர்வு, செல்வத்தில் ஏற்றத்தாழ்வு ஆகியவற்றால் சாதிக்குள் திருமணம் செய்துகொள்வதில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி காரணமாக, அதிகமாக ரத்த உறவுக்குள் திருமணம் செய்து கொள்கிறது. இந்தச் சமூகப்பழக்கம் மாற்றப்பட்டு விட்டொழிக்கப்பட வேண்டியது. இது வெறும் பண்பாட்டு மாற்றத்தின் மூலமோ, அறிவியல் விழிப்புணர்வின் மூலமோ மட்டுமே நிகழ்ந்துவிடக் கூடியது அல்ல. பொருளாதார வளர்ச்சி மற்றும் பரவலாக்கத்தின் மூலம் மட்டுமே சாதிக்கப்படக் கூடியது.

மற்ற இரு வகையான கோத்திரத்துக்குள்ளும், தாய்வழி உறவுக்குள்ளும் திருமணத் தடை இன்றும் தொடர்வதை எப்படிப் புரிந்துகொள்வது?

நாளை காலை 7 மணி பதிப்பில் பார்ப்போம்.

பாஸ்கர் செல்வராஜ்

தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் - அரசியல் - பூகோள அரசியல் - சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்

தொடர்புக்கு [email protected]

.

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

புதன் 13 அக் 2021