மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 14 அக் 2021

மாறாத முஸ்லிம்களின் பழக்கமும் மாறிய ஆரியர்களின் குலம், கோத்திரமும்! - பகுதி 2:

மாறாத முஸ்லிம்களின் பழக்கமும் மாறிய ஆரியர்களின் குலம், கோத்திரமும்! - பகுதி 2:

பாஸ்கர் செல்வராஜ்

உலகில் உள்ள மக்கள் சமூகத்தின் வரலாற்று வளர்ச்சியைக் காடுகளில் இருக்கும் உணவை உண்டு வாழும் வேட்டை சமூகம், சமநிலப் பகுதிகளில் நிலத்தைத் திருத்தி உணவை விளைவித்து உண்ணும் விவசாய சமூகம், உற்பத்தியின் வளர்ச்சியின் போக்கில் புதிய நுட்பங்களைக் கண்டறிந்து தொழிற்சாலைகளை நிறுவி, பல புதிய பொருட்களை உற்பத்தி செய்து மேம்பட்ட வாழ்க்கை வாழும் ஜனநாயக சமூகம் எனப் பொதுவான சட்டகத்துக்குள் வைத்துப் பார்ப்பது வழக்கம். ஆனால் எல்லா மனித இனமும் இப்படி வேட்டை, விவசாயம், தொழில் வளர்ச்சி என ஒரே சீரான வளர்ச்சியை அடைவதில்லை. ஒவ்வொரு சமூகத்தின் வரலாற்று வளர்ச்சியை அந்த மக்கள் இனம் வாழும் நிலப்பகுதியின் தன்மை, அது கொண்டிருக்கும் இயற்கை வளம், அதைப் பயன்படுத்தி அந்த மக்கள் செய்யும் உற்பத்தியின் தன்மை, அந்த உற்பத்தியில் அங்கு வாழும் மக்களினங்களின் பங்களிப்பு, இந்த வளர்ச்சியின்போது வரும் அந்நியர்களின் இடையீடு எனப் பல காரணிகள் ஒரு மக்கள் இனத்தின் வளர்ச்சியைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

நிலம், உற்பத்திக்கு ஏற்ப மாறும் சமூக வளர்ச்சி!

உதாரணத்துக்கு தமிழ்நாடு, பஞ்சாப், ஆப்கானிஸ்தான், சவுதி அரேபியா ஆகிய நான்கு பகுதிகளை எடுத்துக்கொள்வோம். தமிழ்நாடு, பஞ்சாப் ஆகிய இரு பகுதிகளும் பல ஆறுகளும் பெருமளவு சமநிலப் பகுதிகளையும் கொண்ட விவசாயம் செய்வதற்கேற்ற பகுதிகள். ஆப்கானிஸ்தானில் 48 விழுக்காடு மேய்ச்சல் நிலப்பகுதியாகவும், 11.8 விழுக்காடு மட்டுமே விவசாயம் செய்வதற்கு ஏற்ற நிலப் பகுதியாகவும், மற்றவை மலைகள் பள்ளத்தாக்குப் பகுதிகளாகவும் இருக்கின்றன. சவுதி அரேபியாவில் 80 விழுக்காடு பாலைவனப் பகுதியாகவும் மற்ற 20 விழுக்காடே மேய்ச்சலுக்கும், விவசாயத்துக்கும் ஏற்ற பகுதியாக இருக்கிறது. தமிழ்நாடு, பஞ்சாப்பைப் போலன்றி ஆப்கானிஸ்தானில் விவசாய உற்பத்தியோடு கால்நடை வளர்ப்பும் பெருமளவு நடைபெறுகிறது. இங்கே விவசாயத்தில் ஈடுபடும் சமூகமும், மேய்ச்சலில் ஈடுபடும் சமூகமும் ஒரே மாதிரியான சமூக வளர்ச்சியைக் கொண்டிருக்க முடியாது. சவுதியைப் பொறுத்தவரை எண்ணெய் கண்டுபிடிப்பதற்கு முன்புவரை சவுதியில் முக்கிய தொழில் கால்நடை வளர்ப்புதான். இந்த நான்கு பகுதிகளில் வாழ்ந்த மக்களும் இந்தத் தொழிலுக்கு வருவதற்கு முன்பு வேட்டைத் தொழிலைத்தான் செய்திருக்க வேண்டும்.

கால்நடை தொழில், விவசாய உற்பத்தி ஆகிய இரண்டும் அடிப்படையில் வெவ்வேறானவை என்பதால் அதைச் செய்யும் மக்கள் இனத்தின் சமூக கட்டமைப்பும் வளர்ச்சியும் வேறு வேறாகத்தான் இருக்க முடியும். கால்நடை வளர்ப்புக்கு அதிக அளவில் தொழிலாளர்கள் தேவையில்லை. ஒரு பெரிய ஆட்டு மந்தையை ஓரிருவர் மட்டுமே கண்காணித்து, பராமரித்து விடமுடியும். சில ஏக்கர் விவசாயப் பயிர் உற்பத்திக்கு எவ்வளவு தொழிலாளர்கள் தேவை என்பதைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. அதேபோல கால்நடைகளில் எந்த நோயும் அற்ற சூழலில் வேகமாக மந்தைப் பெருகும் தன்மை கொண்டது. அதனால் விவசாய உற்பத்தியைவிட கால்நடை உற்பத்தி வேகமாக வளரக்கொடியது. ஆதலால் விவசாய உற்பத்தியில் ஈடுபடும் மக்களைவிட, கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் மக்களிடம் வேகமாகத் தனியுடைமை வந்துவிடுகிறது.

வேகமாக தனியுடைமைக்கு வித்திடும் மேய்ச்சல் தொழில்!

தனியுடைமை வந்தபிறகு அவர்களின் குடும்பம் இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களை உண்டு வேட்டையாடி பகிர்ந்துண்ணும் வேட்டை சமூகத்தைப் போல தாய்வழி சமூகமாக இல்லாமல், இந்தச் செல்வம் தனது குழந்தைகளுக்குத்தான் செல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்ட தகப்பனை அடிப்படையாக, தந்தைவழி சமூகமாகத்தான் இருக்க முடியும். அது இயல்பாக தாய்வழியில் இருந்து இந்த கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் மக்கள் இனங்களை வேகமாக தந்தைவழி சமூகத்துக்கு மாற்றுகிறது. அதனால்தான் கால்நடை வளர்ப்பாளர்களான ஆரியர்கள் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவுக்குள் வரும்போது தந்தைவழி சமூகமாக மாறியிருந்தார்கள். அவர்களின் வேதங்களில் பெண்களைக் காண்பது அரிதாக இருக்கிறது. சிந்து சமவெளிப் பகுதியில் நகர நாகரிகத்தைக் கொண்டிருந்த திராவிட மக்களிடத்தில் அன்றும் பெண்களே முக்கிய பாத்திரம் வகித்திருக்கிறார்கள். இன்று தோண்டத்தோண்ட பெண்களின் உருவங்களே அதிகம் கிடைக்கின்றன.

கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் மக்கள் இனத்தில் ஏற்படும் இந்த வேகமான மாற்றம் குடும்பத்தில் தாயின் பாத்திரத்தை இரண்டாம் நிலைக்குத் தள்ளுவதோடு தாய்வழியிலான குலங்களை உடைத்து சுக்குநூறாக்குகிறது. விவசாயச் சமூகங்களைப்போல தாய்வழியில் இருந்து தந்தைவழி குலம், கூட்டுக்குடும்பம், தனிக்குடும்பம், அத்தை மகன், மாமன் மகளுக்குள் திருமணம் என்ற நீண்ட நெடிய பல நூற்றாண்டுக்கால மாற்றமாக இல்லாமல், தாயை அடிப்படையாகக்கொண்ட நீண்ட நெடிய பண்பாட்டு பழக்கமாக நிலைபெறாத கால்நடை மேய்க்கும் மக்களில், இந்தக் கால்நடை செல்வத்தைத் தனது சந்ததிக்கு மட்டுமானதாக மாற்றும் நோக்கில், ஒரு தாய் வயிற்றில் பிறந்த அனைவரும் அண்ணன், தம்பிகள் என்ற இயற்கையின் தெரிவை மட்டும் ஏற்றுக்கொண்டு, அந்தத் தாய்க்குப் பிறந்த குழந்தைகளைத் தவிர்த்து, சித்தப்பன் மக்கள், பெரியப்பன் மக்களுக்குள்ளான திருமணமாக மாறுகிறது.

ஆரியப் பிரிவினையும் பார்ப்பன கோத்திரமும்!

மத்திய கிழக்கில் வாழ்ந்த இந்தக் கால்நடை வளர்ப்புத் தொழிலைச் செய்த முஸ்லிம்கள் இந்தியாவுக்குள் படையெடுத்து வந்து இங்கே பல நூற்றாண்டு காலம் வாழ்ந்துவிட்ட பின்னரும், அவர்களின் தொழில் மாறிவிட்ட பின்னரும் அது பண்பாட்டுப் பழக்கவழக்கமாக இன்றும் தொடர்கிறது. அப்படி என்றால் இவர்களுக்கு முன்பு படையெடுத்து வந்த கால்நடை வளர்ப்பைத் தொழிலாகக் கொண்ட ஆரியர்களும் இதுபோன்ற குடும்ப அமைப்பைத்தான் கொண்டிருந்திருக்க வேண்டும். பின்பு வேதம் ஓதும் பார்ப்பனர்களாக மாறிய பின்னர் குலம், கோத்திரம் என்பதான குடும்ப அமைப்புக்கு ஏன் மாறினார்கள் என்ற கேள்வியை இது எழுப்புகிறது. இந்தக் கேள்விக்கான விடை, இந்தக் குழுவினரின் உற்பத்தியுடனான தொடர்பு எத்தகையது என்பதை ஆய்ந்தால் விடை கிடைக்கக்கூடும்.

ஆரியர்கள் சிந்து சமவெளிப் பகுதியில் நிலைத்துத் தங்கும்போது அவர்கள் புரோகிதம் செய்யும் பார்ப்பனர்கள், ஆட்சி செய்யும் சொத்துடைமை வர்க்கமான சத்திரியர்கள், சாதாரணர்களான வைசியர்கள் என மூன்றாகப் பிரிகிறார்கள். அதன் பிறகான சண்டை, ஆட்சி மாற்றங்களில் மற்ற இரு பிரிவும் வெவ்வேறு தொழில்களுக்குச் சென்றாலும் பார்ப்பனர்கள் மட்டும் இந்த புரோகிதத்திலேயே தங்கிவிடுகிறார்கள். எந்த ஆட்சி நடந்தாலும், என்ன விதமான உற்பத்தி நடந்தாலும் அதன் பலன்களைப் பெற்று வாழும் ஒரு குழுவாக மாறிப்போகிறார்கள். இந்த மொத்த குழுவும் ஒரே புரோகிதத் தொழிலைச் செய்யும்போது இந்தக் குழுவினரின் தனித்திறனில் என்ன மாற்றம் ஏற்பட்டுவிடப் போகிறது. இவர்களுக்குள் என்ன தொழில் பிரிவினை ஏற்பட்டுவிடப் போகிறது. அதன்மூலம் இவர்கள் என்ன செல்வத்தை உருவாக்கிவிடப் போகிறார்கள். இந்தச் சமூகத்தில் நால்வர்ண அமைப்பும், அதற்கான சடங்குகளும் இருக்கும்வரை இவர்களும் இவர்களின் தொழிலும், அதற்கான பிறப்பின் அடிப்படையிலான தனித்தன்மையையும் காப்பதே இவர்களின் இருப்புக்கான அடிப்படை. அப்படிக் காப்பாற்ற வாழையடி வாழையாக ஒரு தகப்பன்வழி குழந்தைகள் என்ற வகையில் குலத்தைக் கட்டிக் காப்பாற்றி வந்து அது காலப்போக்கில் ஆலமரமாக வளர்ந்து இன்று கோத்திரமாக நடைமுறையில் இருக்கிறது.

உழைத்து எரிந்து விழும் மக்களும் குளிர்காயும் மூவர்ணமும்!

மற்ற சத்திரியர்களும், வைசியர்களும் உண்மையில் கோத்திரத்தைக் கொண்டிருக்கவில்லை. பிற்காலத்தில் திருமண சடங்கின்போது வரும் பார்ப்பனர் அந்த சடங்கை நடத்த அவர் ஒரு கோத்திரப் பெயரைக் கொடுக்க காலப்போக்கில் இவர்களிடத்தில் அது நிலைபெற்றுவிட்டது என்கிறார்கள். இப்படி நிலைபெற்று இன்றும் தொடர்வதற்கு என்ன பொருளாதார அடிப்படை என்று பார்த்தால், முன்பு வடக்கில் நிலத்தின் உரிமை இந்த மூவர்ணத்திடம் இருந்தாலும் இவர்களின் நிலத்தில் உழைப்பவர்கள் சூத்திர, பஞ்சம சாதிகளாகத்தான் இருந்து வருகிறார்கள். இந்த உற்பத்தியின் பலனை அனுபவிப்பவர்களாகத்தான் இவர்கள் இருந்து வருகிறார்கள். இந்த மட்டுப்படுத்தப்பட்ட வளர்வதற்கு வாய்ப்பற்ற பொருளாதாரம் மற்ற ஆக்கிரமிப்பாளர்களின் இடையீடு காரணமாக மாற்றம் காணும்போது வர்த்தக சமூகமாகவும், மற்ற உயர்ந்த தொழிற்பிரிவுகளிலும் இந்த மூவர்ணத்தினரே சென்று ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள்.

இவற்றில் வேறு எவரும் குறிப்பாக சூத்திர, பஞ்சம சாதிகள் வராமல் இந்த அமைப்பின் பலனை இவர்கள் மட்டுமே அனுபவிக்கும் வகையில் பாதுகாத்து வருகிறார்கள். இந்த உற்பத்தியின் பலனை மேலே இருந்துகொண்டு தொடர்ந்து அனுபவிக்க வேண்டுமானால் இந்தப் பிறப்பின் அடிப்படையிலான சாதிய-இனக்குழு கட்டமைப்பு தொடர வேண்டும். அப்படி தொடர வேண்டுமானால் சாதிக்குள் திருமணம் தொடர வேண்டும். இது தொடர்ந்தால் இந்தப் பொருளாதாரம் மாற, வளர தொழிலாளர் திறன் வளர்ச்சி, கல்வி பரவலாக்கம் என்பது எப்படி நடக்கும்? நீட் போன்ற தடைக்கற்கள்தான் முளைக்கும். இதில் பெரிய முன்னேற்றம் நடக்காதபோது இந்த குலம், கோத்திரத்துக்குள் திருமணத் தடை, சாதிக்கு வெளியில் திருமணத் தடை என்பது எப்படி உடையும்? இந்தியாவுக்கே உரித்தான உலகில் எங்கும் இல்லாத இந்த சமூக பொருளாதார சுழற்சி எப்போது உருவானது எப்படி நிலைபெற்றது என்பது தனியான விரிவான ஆய்வுக்குரியது.

உற்பத்தி, சமூகம், பெண்கள்...

ஆனால், உற்பத்தியில் நேரடியாகப் பங்களிக்காத மக்கள் இனங்களின் வரலாற்று சமூக வளர்ச்சி, மற்ற மக்களில் இருந்து வேறுபட்டதாக இருப்பது இதன்மூலம் தெளிவாகிறது. சவுதியில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டு உலகிலேயே அதிக மதிப்பு வாய்ந்த எண்ணெய் நிறுவனமாக ஆரம்கோ இருந்தாலும் அங்கே குடும்பத்தில் பெரிய மாற்றமோ, சமூகத்தில் ஜனநாயக மாற்றங்களோ நிகழாதது இங்கே கவனிக்கத்தக்கது. இந்தச் செல்வ உருவாக்கத்தில் அங்குள்ள மனிதர்களின் பங்களிப்பு சொற்பமாகவும் இயற்கையின் பங்களிப்பே பிரதானமாகவும் இருக்கிறது. இந்த உற்பத்திக்கான தொழில்நுட்பத்திலும் இந்த மக்களின் பங்களிப்பு ஏதும் இல்லாத நிலையிலும் அந்த நாடு, நவீனமடைந்தாலும் நாட்டு மக்களின் சிந்தனையும், சமூகக் கட்டமைப்பும் பழைய நிலையிலேயே தொடர்ந்துகொண்டிருக்கிறது. இப்படி என்னதான் காரணம் கூறினாலும் இந்த நவீன காலத்திலும் இப்படியான பிற்போக்கான பழைமையான சாதிய, இனக்குழுவாத சமூக கட்டமைப்பை சவுதியிலும், இந்தியாவிலும், ஆப்கானிஸ்தானிலும் எப்படித் தொடர முடிகிறது என்ற கேள்வி மூளையைக் குடைகிறது. இந்தத் தொடர்ச்சிக்கான சூட்சுமம் இந்தச் சமூகங்களில் பெண்களின் நிலையில் இருக்கிறது.

மேலே விவாதித்த விவரங்களை எல்லாம் கூர்ந்து கவனித்தால் இனக்குழு, குலம், கோத்திரம் என எல்லா அடையாளங்களையும் கட்டிக்காப்பதில் பெண்களின் பாத்திரம் எவ்வளவு இன்றியமையாதது என்பது புரியும். நீங்கள் சொல்லும் ஆணை நான் மணம் செய்துகொள்ள முடியாது எனப் பெண் சொல்லிவிடுவதாக கற்பனை செய்துகொள்வோம். பின்பு எதன் அடிப்படையில் இவர்கள் தங்களது அடையாளத்தைக் கட்டிக் காப்பார்கள் என்பதை எண்ணிப் பார்த்தால் சவுதி மற்றும் ஆப்கானிஸ்தான் முஸ்லிம் அடிப்படைவாதிகளும், இந்தியாவில் சாதிய அடிப்படைவாதிகளும் பெண்களின் மீது ஏவிவிடும் அடக்குமுறைக்கும் ஆதிக்கத்துக்குமான மூலம் எங்கிருக்கிறது என்பது தெள்ளென விளங்கும். பெரியாரின் பெண்கள் விடுதலை மீதான அதீத அக்கறையின் பின்னுள்ள அறிவியலும் விளங்கும். அப்படி என்றால் ஆப்கானிஸ்தானும், இந்தியாவும் ஒன்றா... ஆப்கன் பெண்களின் பிரச்சினையும், இந்தியப் பெண்களின் பிரச்சினையும் ஒன்றா என்று கேட்டால், ‘ஆம்’ என்று பொதுவாகச் சொல்லிவிட முடியாது. ஆனால் அடிப்படையில் ஒன்று என்று மட்டும் சொல்ல முடியும். எப்படி?

பகுதி 1

நாளை காலை 7 மணி பதிப்பில் பார்ப்போம்.

பாஸ்கர் செல்வராஜ்

தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் - அரசியல் - பூகோள அரசியல் - சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்

தொடர்புக்கு [email protected]

.

டெல்லி பயணம்: பன்னீரின் அடுத்த திட்டம்!

3 நிமிட வாசிப்பு

டெல்லி பயணம்:  பன்னீரின் அடுத்த திட்டம்!

வேலுமணியோடு சிக்கப் போகும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்? அடித்தளம் போட்ட ...

7 நிமிட வாசிப்பு

வேலுமணியோடு சிக்கப் போகும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்? அடித்தளம் போட்ட அறப்போர்!

சசிகலாவை எடப்பாடி எதிர்த்தது பன்னீரால்தான் - உதயகுமார் புது ...

3 நிமிட வாசிப்பு

சசிகலாவை எடப்பாடி எதிர்த்தது பன்னீரால்தான் - உதயகுமார் புது ட்விஸ்ட்!

வியாழன் 14 அக் 2021