மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 15 அக் 2021

இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் இனக்குழு சமூகமா? - பகுதி 3

இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் இனக்குழு சமூகமா? - பகுதி 3

பாஸ்கர் செல்வராஜ்

இந்தியாவையும், தமிழகத்தையும் ஆப்கானிஸ்தானுடன் ஒப்பிடுவது பலருக்கு உவப்பாக இருக்காது. சிலர் கோபம் கொள்ளவும் கூடும். ஆதலால் இருநாட்டு பெண்களின் நிலைமைகளைக் காண்பதற்கு முன்பாக இருநாட்டு சமூகத்துக்கும் என்ன ஒற்றுமை என்பதை சொல்ல வேண்டி இருக்கிறது.

ஆப்கன் மக்கள் இனங்கள்!

ஆப்கானிஸ்தானில் உள்ளவர்களைப் பொதுவாக இஸ்லாமியர்கள் என்று நாம் நினைத்திருந்தாலும் 3.89 கோடி மக்கள்தொகை கொண்ட அந்த நாட்டில் சுன்னி மார்க்கத்தைப் பின்பற்றும் பெரும்பான்மை பஷ்டூன்கள் (Pashtuns-42%), தஜிக்குகள் (Tajiks-27%), ஷியா மார்க்கத்தைப் பின்பற்றும் ஹசாராக்கள் (Hazaras-9%), உஸ்பெக்குகள் (Uzbeks-9%), அய்மாக்கள் (Aimaq-4%), துர்க்மேனியர்கள் (Turkmen-3%) பலூச்சுகள் (Paluch-2%)... இவர்களைத் தவிர்த்த மற்ற சிறுபான்மை இனத்தவர்கள் (4%) எனப் பல்வேறு இன மக்கள் வசிக்கிறார்கள், இந்தியாவில் பல மொழி, பண்பாட்டு, பழக்கவழக்கங்களைக் கொண்ட தமிழர்கள், தெலுங்கர்கள், கன்னடர்கள் எனப் பல இனத்தவர்கள் வசிப்பதைப்போல. பஷ்டூன் இனத்தவர்கள் என ஒரு பெயரில் அழைக்கப்பட்டாலும் அது பல்வேறு இனக்குழுப் பிரிவுகளைக் கொண்டது (படம் காண்க). தமிழினம் என நாம் ஒரு பெயரில் அழைத்துக்கொண்டாலும் நூற்றுக்கணக்கான சாதியப் பிரிவுகள் நம்மிடம் இருப்பதைப்போல.

பொதுவாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்களின் திறனும், அவர்கள் உற்பத்தி செய்யும் சமூக செல்வமும் (Social Wealth) எந்த அளவு மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கிறதோ, அந்த அளவு இந்த இனக்குழு கட்டமைப்பு வலுவுடனும் பெண்களின் மீதான அந்தக் குழுவைச் சேர்ந்த ஆண்களின் ஆதிக்கமும் அடக்குமுறையும் இறுக்கமாக இருக்கும். ஆப்கானிஸ்தானின் தற்போதைய ஜிடிபி 20 பில்லியன் டாலர்கள். இதில் 75 விழுக்காட்டுக்கும் மேலாக வெளிநாடுகள் கொடுக்கும் உதவியாக (Aid) இருக்கிறது. கிட்டத்தட்ட நாற்பது மில்லியன் மக்கள் ஐந்து பில்லியன் பெறுமான பொருட்களையே உற்பத்தி செய்கின்றனர். முன்பு நமது ஊரில் நிலையற்ற வாழ்வு வாழ்ந்த குறவர் இனமக்களைப் போன்று இன்றும் ஆப்கனில் 20 விழுக்காடு மக்கள் நாடோடிகளாகவும், எல்லைப் பகுதிகளில் வாழும் மக்களிடையே பண்டமாற்று முறை நடைமுறையில் இருப்பதையும் கொண்டு ஆப்கனின் பொருளாதார வளர்ச்சியைப் புரிந்துகொள்ளலாம்.

அடிப்படைவாதத்தின் ஆணிவேர்!

அதேபோல ஊர்ப்புறங்களில்தான் 70 விழுக்காட்டுக்கும் மேலான மக்கள் வாழ்கிறார்கள். இன்றும் எழுதப் படிக்க தெரிந்தவர்களின் அளவு 43 விழுக்காடுதான் என்பதையும் மனதில்கொண்டால், இந்தியாவில் கல்வியறிவு குறைவாக இருக்கும் இந்திபெல்டில் இந்து அடிப்படைவாதிகள் வலுவுடன் இருப்பதைப்போல இந்த மக்கள் வாழும் ஊர்ப்பகுதிகளில் ஏன் தாலிபான்கள் வலுவாக இருக்கிறார்கள் என்ற காரணத்தையும் கண்டுகொள்ள முடியும். அவர்களின் காட்டுமிராண்டித்தனத்துக்கான காரணத்தையும் புரிந்துகொள்ள முடியும். எண்பதுகளில் கிட்டத்தட்ட ஐந்து கோடி மக்களும், 54 விழுக்காடு கல்வியறிவும், ஒரு பில்லியன் டாலர் ஜிடிபியும், கிராமங்களில் நெல்லை கொடுத்து உப்பும் வாங்கிக்கொண்டிருந்த தமிழ்நாட்டில் சாதி மாறி திருமணம் செய்ததற்காக பெண்ணைக் கொளுத்திய சம்பவங்களை இன்று தாலிபான்களை திட்டும் நாம் மறந்து விடலாகாது.

அதேபோல பல இனம், பல இனக்குழுக்களாகப் பிரிந்திருந்தாலும் ஆப்கானியர்கள் அவ்வளவு வலுமிக்க இங்கிலாந்து, சோவியத் ரஷ்யா, அமெரிக்கா என அத்தனை ஏகாதிபத்தியங்களையும் ஒற்றுமையாக எதிர்த்து நின்று வீழ்த்தும் அதிசயத்தையும் நிகழ்த்துகிறார்கள். இதை தமிழக உதாரணம் கொண்டு புரிந்துகொள்ள முயலலாம். எண்பதுகளில் கிராமங்களில் வாழ்ந்தவர்களுக்குத் தெரியும் வரப்பு சண்டைக்கு வெட்டிக்கொள்ளும் பங்காளிகள் தங்களது வகையறாவை, வேறொரு வகையறாவைச் சேர்ந்தவர் கைவைத்து விட்டால் இவர்கள் தமது பகையை ஒதுக்கி வைத்துவிட்டு கும்பலாகச் சென்று அவர்களுடன் சண்டையிடுவார்கள். அதுவே வேறு சாதியைச் சேர்ந்தவர், இவர்களின் சாதியைச் சேர்ந்தவர்மீது கைவைத்து விட்டால் இவர்கள் அனைவரும் கும்பலாகச் சென்று அவர்களின் வீடுகளைக் கொளுத்தி வெறியாட்டம் ஆடுவார்கள்.

இனக்குழுக்களின் இயல்பு!

ஒன்றிய பார்ப்பனிய அரசு நம்மீது இந்தியைத் திணிக்க எத்தனித்தபோதும், தமிழினத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை தடைசெய்ய முயன்றபோதும் சாதி பேதமின்றி தமிழர்கள் அனைவரும் ஓரினமாக ஆர்ப்பரித்து தெருவில் இறங்கி போராடியதைக் கண்டோம். இதேபோல அந்நியர்கள் தமது மண்ணை ஆக்கிரமிப்பு செய்தால் அனைத்து வேற்றுமைகளையும் மூட்டைகட்டி வைத்துவிட்டு ஆப்கானியர்கள் ஒன்றாக இணைந்து சண்டையிட்டு வீழ்த்துகிறார்கள். சுன்னி பிரிவு பஷ்டூன்கள், ஷியா பிரிவு ஹசாராக்கள், தஜிக்குகள், உஸ்பெக்குகள் ஆகிய அனைவரும் தங்கள் இன, மதப்பிரிவு மக்கள் வாழும் அண்டை நாடுகளின் ஆதரவைப் பெற்று சண்டையிட்டாலும் அனைவரும் அந்நியரை விரட்டுவது என்ற நோக்கத்தில் ஒன்றாகிறார்கள். இவர்களை ஆதரிக்கும் நாடுகள் இவர்களின் மீது செல்வாக்கு செலுத்த அனுமதிக்கும் அதேவேளை, அந்த நாடுகள் இவர்களின் மண்ணில் நுழைய எத்தனித்தால் விளைவு மோசமானதாக இருக்கும். அதுதான் இவர்களின் எல்லைக்கோடு (Red Line).

அதேபோல பொதுவான எதிரி வெளியேறிய மறுகணமே இவர்களின் ஒற்றுமை சுக்குநூறாக உடைந்து விடுகிறது. ஓரினமாகத் திரண்டு எதிரியை வீழ்த்தும் இனக்குழு மனநிலை மறைந்து, வர்க்க சிந்தனைக்கு மாறிவிடுகிறார்கள். ஆட்சியைக் கைப்பற்ற அடித்துக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள். அதன்பிறகு தான், தன் குடும்பம், தனது குலக்குழு, தனது இனக்குழு என நம்மிடம் இருப்பது போலவே தனது நலனையும், தன்னை சேர்ந்தவர்களின் நலனையும் முன்னிலைப்படுத்தி சிந்திக்கும் சுயநலம் அவர்களின் மூளையை ஆக்கிரமித்து விடுகிறது. இசையமைப்பாளர் யுவனின் ‘இந்தி தெரியாது போடா’ என்ற சட்டை வாசகம் தமிழ்நாட்டில் பெரிய அளவு வரவேற்பைப் பெற்று இந்திய அளவில் பரபரப்பாகப் பேசும் அளவுக்குச் சென்றது. அதை அடுத்து ‘சாதி கிடையாது போடா’ என்று சொன்னதும் தமிழர்கள் தனது சத்தத்தை அடக்கிக்கொண்டது பலருக்கும் நினைவிருக்கலாம். அதேபோல வாய்ப்பு கிடைக்கும்போது ஆப்கானியர்கள் தமது குழுவின் நலனை பலிகொடுத்து தன் நலனை முன்னிறுத்தும் துரோகமும் அரங்கேறுகிறது... நமது ஊரில் சாதிப் பெயரைச் சொல்லி அரசியலுக்கு அணி திரட்டும் அரசியல்வாதிகள், அந்தச் செல்வாக்கைப் பயன்படுத்தி தனது குடும்ப நலனை முன்னெடுப்பதைப்போல. இதில் வேறுபாடு என்னவென்றால் நமது ஊரைப் போல துரோகம் செய்துவிட்டு அங்கேயே வாழ முடியாது. அஸ்ரப் கானியைப் போல ஊரைவிட்டு ஓடிவிட வேண்டும்; இல்லையேல் உயிரைவிட வேண்டும்.

ஆப்கன் வேறுபடும் இடம்!

நம்மிடம் இருந்து அவர்கள் வேறுபடும் மற்றுமொரு முக்கியப் புள்ளி அந்நிய ஆக்கிரமிப்பை அனுமதிக்காத அந்த ஒற்றுமை. ஏனெனில் அவர்கள் பல இனமாகவும், இனக்குழுவாகவும் பிரிந்திருந்தாலும் அவர்களுக்குள் நம்மிடம் இருப்பதைப் போன்ற ஏற்றத்தாழ்வு இல்லை. இனக்குழுக்களுக்குள் ஏற்படும் சண்டையைத் தீர்க்க உருவான பெரியோர்கள், மதகுருமார்களைக் கொண்ட லோயா ஜிர்கா (Loya Jirga) கூட்டத்தில் வட்டமாக, சமமாக அமர்ந்து பேசியே முடிவெடுக்கிறார்கள். தங்களுக்குள்ளான பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக் கொள்கிறார்கள். நமது ஊரில் முத்துராமலிங்கத்தின் முன்பு சமமாக உட்கார்ந்து பேச முற்பட்ட இம்மானுவேல் சேகரனுக்கு நேர்ந்த கதியை தமிழகம் கண்டது. முன்பு பஷ்டூன்கள் மட்டுமே இடம்பெற்ற இந்தக் குழுவில் தற்போது எல்லா இனக்குழு தலைவர்களும் பங்கேற்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஆனால், இந்தியாவில் ஜனநாயக முறையில் மக்கள் வாக்கு செலுத்தி தனது உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறார்களே... ஆனால், ஆப்கனில் அப்படியா நடக்கிறது எனக் கேள்வி எழுப்பலாம். இந்தியாவில் வாக்களிக்கும் ஒவ்வொரு வாக்காளரும் தனது வாக்கை எதன் அடிப்படையில், எந்த நோக்கத்தை மனதில் கொண்டு வாக்களிக்கிறார் என்பது இங்கே தங்கமலை ரகசியம் அல்ல. சாதியைத் தவிர்த்த அரசியல் என்ற ஒன்று இங்கில்லை. மக்களின் இசைவை வாக்குகளின் வழியாகப் பெறுகிறோம் என்பதால் அது வளர்ந்த நாடுகளின் உள்ளதைப் போன்ற ஜனநாயக வடிவமைப்பைப் பெற்றிருக்கலாம். அதனாலேயே இப்படி உருவாகும் அரசின் உள்ளடக்கம் வளர்ந்த நாடுகளின் சமூக மக்களின் அரசியல் கட்டமைப்பை ஒத்தது என்று கூறிவிட முடியாது. அதேபோல வாக்குகளின் வழி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை என்பதாலேயே இந்த முறையில் தேர்ந்தெடுக்கப்படாத மற்ற நாட்டு அரசுகள் எல்லாம் ஜனநாயகமற்றதும் ஆகிவிடாது.

அந்தந்தப் பகுதிகளில் பெரும்பான்மை மக்களின் இசைவையும், பங்களிப்பையும், ஆதரவையும் பெற்று நடக்கும் ஆட்சிகள் ஜனநாயகத் தன்மை கொண்டதாகவும் அது தவிர்த்தவை - ஆதிக்க, சர்வாதிகார தன்மை கொண்டதாகவும் இருப்பது இயல்பு. ஆனால், இந்த ஜனநாயகத் தன்மையின் வரம்பும், இப்படி அமையும் அரசுகளின் உள்ளடக்கமும் அந்தந்த நாட்டு மக்களின் வரலாற்று வளர்ச்சியைப் பொறுத்ததாகவே இருக்கும். இந்தியா முழுக்க வாழும் மக்களின் வரலாற்று வளர்ச்சி ஒன்று அல்ல. இந்த அனைத்து சாதிய - இனக்குழுக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக்கொண்ட இந்திய அரசின் உள்ளடக்கம் என்னவாக இருந்தது, இருக்கிறது, இருக்கப் போகிறது, அது யாரை பிரதிநிதித்துவப்படுத்தி வந்திருக்கிறது, என்ன மாற்றத்தைக் கண்டிருக்கிறது, என்னென்ன நெருக்கடிகளைக் கண்டு கொண்டிருக்கிறது என்பது தனி ஆய்வுக்கும் விவாதத்துக்கும் உரியது.

சரி, இந்தச் சிக்கலான இறுக்கமான சாதிய - இனக்குழுக் கட்டமைப்பும் பெண்களின் மீதான அடக்குமுறையும் எப்போது மாறும், மறையும்?

பகுதி 1 / பகுதி 2

நாளை காலை 7 மணி பதிப்பில் பார்ப்போம்.

பாஸ்கர் செல்வராஜ்

தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் - அரசியல் - பூகோள அரசியல் - சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்

தொடர்புக்கு [email protected]

.

டெல்லி பயணம்: பன்னீரின் அடுத்த திட்டம்!

3 நிமிட வாசிப்பு

டெல்லி பயணம்:  பன்னீரின் அடுத்த திட்டம்!

வேலுமணியோடு சிக்கப் போகும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்? அடித்தளம் போட்ட ...

7 நிமிட வாசிப்பு

வேலுமணியோடு சிக்கப் போகும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்? அடித்தளம் போட்ட அறப்போர்!

சசிகலாவை எடப்பாடி எதிர்த்தது பன்னீரால்தான் - உதயகுமார் புது ...

3 நிமிட வாசிப்பு

சசிகலாவை எடப்பாடி எதிர்த்தது பன்னீரால்தான் - உதயகுமார் புது ட்விஸ்ட்!

வெள்ளி 15 அக் 2021