மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 28 அக் 2021

வழக்கைத் திசை திருப்பும் அப்போலோ: தமிழக அரசு!

வழக்கைத் திசை திருப்பும் அப்போலோ: தமிழக அரசு!

ஜெயலலிதா மரண வழக்கில் விசாரணை முடிந்து அறிக்கை தாக்கல் செய்யும் முன்பே, ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைபட்சமாகச் செயல்படுகிறது என்று எப்படிச் சொல்ல முடியும் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் முன் ஆஜராவதிலிருந்து விலக்கு கேட்டு ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்போலோ மருத்துவமனை தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த சமயத்தில் அதிமுக அரசு சொல்லிதான் சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டன என்று கூறி அப்போலோ நிர்வாகம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு ஜெயலலிதா மருத்துவமனைக்கு அனுமதிக்க அழைத்து வரும்போது மயக்கநிலையில் மட்டுமின்றி காயங்களுடன் இருந்தார் என்று தெரிவித்தது.

இந்த நிலையில் வழக்கு இரண்டாவது நாளாக நேற்று (அக்டோபர் 27) நீதிபதி அப்துல் நசீர் மற்றும் நீதிபதி கிருஷ்ணமுராரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் அரிஸ்டாட்டில் ஆஜரானார்.

அவர் தன் வாதத்தில், ஆறுமுகசாமி ஆணையம் அனைத்து விசாரணையையும் முடித்த பின்பு முதலில் அறிக்கையைச் சமர்ப்பிக்கும். அதுவும் சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு முழுமையாக அரசால் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அதன் பிறகுதான் பொதுவெளியில் வெளியிடப்படும். ஆனால், அதற்கு முன்னதாகவே ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைபட்சமாகச் செயல்படுகிறது என்ற அப்போலோ மருத்துவமனையின் குற்றச்சாட்டை எப்படி ஏற்க முடியும். இது போன்ற வாதங்களை தற்போது நீதிமன்றத்தில் முன்வைப்பது வழக்கைத் திசை திருப்பும் செயலாகும்.

முதலில் ஆணையத்தில் மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும் என்று அப்போலோ சார்பில் கேட்கப்பட்டது. இப்போது ஒருதலைபட்சமாகச் செயல்படுகிறது என்று கூறுகிறது. இந்த விவகாரத்தில் அப்போலோவின் பதில்கள் எல்லாம் முன்னுக்குப்பின் முரணாக இருக்கிறது.

குறிப்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு ஓராண்டு விசாரணைக்கு ஆஜரான பின்னர்தான் அப்போலோ சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் அப்போலோ மருத்துவர்கள் 50க்கும் மேற்பட்டோர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக விசாரிக்கப்பட்டனர் என்று தெரிவித்தார்.

இதை விசாரித்த நீதிபதிகள் ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைபட்சமாகச் செயல்படுகிறது என விசாரணை முடியும் முன்பே நீங்கள் எப்படிக் கூற முடியும். ஆணையம் தனது விசாரணையை நடத்தி முடித்து அறிக்கையைச் சமர்ப்பித்த பிறகுதான் என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். அப்போதுதான் ஒருதலைபட்சமென்ற விவகாரத்தைக் கொண்டுவர முடியும். எனவே மருத்துவமனை தரப்பில் இப்போதே ஒருதலைபட்சம் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.

-பிரியா

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

வியாழன் 28 அக் 2021