தினகரனுடன் ஓபிஎஸ் தம்பி: பொதுக்குழு ஏற்பாடுகளில் எடப்பாடி!

politics

சசிகலா குடும்பத்தோடு வெளிப்படையாகவே நெருங்க ஆரம்பித்துள்ளார் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வம்.

டிடிவி தினகரனின் மகள் ஜெயஹரிணி-தஞ்சை ராமநாத துளசி திருமண வரவேற்பு விழா நேற்று (அக்டோபர் 27) தஞ்சாவூர் அருகே உள்ள பூண்டி புஷ்பம் கல்லூரியில் கோலாகலமாக நடந்தது. திருமணத்தின் போது ஊரடங்குக் கட்டுப்பாடுகள் இருந்ததால், கட்சி நிர்வாகிகள், மாற்றுக் கட்சி நண்பர்கள், தொண்டர்கள் பலரையும் தினகரனால் அழைக்க முடியவில்லை.

இந்த நிலையில் நேற்று நடந்த பிரம்மாண்டமான திருமண வரவேற்பில் சசிகலா கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் உள்ளிட்ட பல பிரமுகர்கள் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதற்கிடையே அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பியான ஓ.ராஜா நேற்று இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்த்தியிருக்கிறார். டிடிவி தினகரன் அவரை இருகரம் கூப்பி வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்தார். இருவரும் பரஸ்பரம் உடல் நலம் விசாரித்துக் கொண்டார்கள்.

மதுரையில் அக்டோபர் 25 ஆம் தேதி,, “சசிகலா அதிமுகவில் சேர்க்கப்படுவது பற்றி அதிமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகள் கூடி முடிவெடுப்பார்கள்” என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருந்த நிலையில் அதற்கு எடப்பாடி தரப்பில் கே.பி. முனுசாமி, ஜெயக்குமார் ஆகியோர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள்.

ஓபிஎஸ் ஆதரவாளரான அமைப்புச் செயலாளர் ஜே.சி.டி. பிரபாகர், “ சசிகலாவை அதிமுகவில் இணைப்பதில் தலைமைக் கழக நிர்வாகிகள் கூடி முடிவெடுப்பார்கள் என்று ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கூறிய கருத்தில் எந்தத் தவறும் இல்லை. அதற்காக கே.பி. முனுசாமி கூறிய கருத்துகளில் சில குறிப்பாக சிலரை தென் மாவட்ட மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. தலைவர்கள் ஒருவரை ஒருவர் மறைமுகமாக வைத்துப் பேசி பேட்டிகள் அளிப்பதால்தான் நான் இதைச் சொல்கிறேன்” என்று அக்டோபர் 27கூறியிருந்தார்.

திருமணத்துக்காக வந்த டிடிவி தினகரனும், “ஓபிஎஸ் எப்போதும் நிதானமாகப் பேசுபவர், சசிகலா குறித்து அவர் சரியாகப் பேசியுள்ளார். அவருடைய கருத்தை நிதானமாக, சரியாகப் பேசியுள்ளார். அமமுக தொடங்கப்பட்டதே துரோகத்தை வீழ்த்தி அம்மாவின் ஆட்சியை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான். தேர்தல் தோல்வியால் துவண்டுவிட மாட்டோம். எங்கள் போராட்டம் தொடரும்` என்று செய்தியாளர்களிடம் பேசியிருந்தார்.

இந்த நிலையில்தான் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி ராஜா நேற்று தஞ்சாவூர் சென்று தினகரனையும், சசிகலாவையும் சந்தித்துவிட்டு வந்திருக்கிறார். ஓபிஎஸ் சின் பேட்டியால் ஏற்கனவே கொதித்துப் போயிருக்கும் எடப்பாடி பழனிசாமி நேற்று ஓபிஎஸ் சின் தம்பி ராஜா தஞ்சை சென்று தினகரனை சந்தித்ததில் மேலும் டென்ஷன் ஆகியிருக்கிறார்.

“நேற்று முதலே அதிமுகவின் ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களும் அவரவர் மாவட்டங்களில் இருக்கும் பொதுக்குழு உறுப்பினர்களை அணுகி விரைவில் பொதுக்குழுக் கூட்டத்துக்காக தயாராகும்படி சேலத்தில் இருந்து தகவல் சென்றிருக்கிறது. பொதுக்குழுக் கூட்டத்தில் தன்னுடைய பலத்தை காட்டுவதற்கு எடப்பாடி தீவிரமாகிவிட்டார். ஓபிஎஸ் சை நேரடியாக பொதுக்குழுவில் எதிர்த்துக் குரல் எழுப்புவதற்கும் ஏற்பாடுகள் நடக்கின்றன. கட்சிக்குள் ஓபிஎஸ் சுக்கு செல்வாக்கு கிடையாது என்பதை நன்கு அறிந்தும் எடப்பாடி அவரை அனுசரித்துச் சென்றுகொண்டிருக்கிறார். ஆனால் ஓபிஎஸ் தொடர்ந்து இப்படி குழப்பம் விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதால் விரைவில் பொதுக்குழுவைக் கூட்டி அதில் தனது பலத்தை நிரூபிக்க நினைக்கிறார் எடப்பாடி”என்கிறார்கள் எடப்பாடிக்கு நெருக்கமானவர்கள்.

**-வேந்தன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *