மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 28 அக் 2021

ஆவினில் விற்பனை அதிகரித்துள்ளது: அமைச்சர் நாசர் மகிழ்ச்சி பேட்டி!

ஆவினில் விற்பனை அதிகரித்துள்ளது: அமைச்சர் நாசர் மகிழ்ச்சி பேட்டி!

கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு ஆவின் ஸ்வீட் விற்பனை 82 சதவீதம் உயர்ந்துள்ளதாக ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறுகின்றனர்.

கடந்த அக்டோபர் 18ஆம் தேதி, ஸ்வீட் வாங்குவதில் கமிஷன்: அமைச்சர் மகன் அதிரடி தீபாவளி என்ற தலைப்பிலும், அக்டோபர் 21ஆம் தேதி ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர் என்ற தலைப்பிலும் மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அரசுப் போக்குவரத்துத் துறை தொழிலாளர்களுக்குத் தீபாவளிக்கு ஸ்வீட் வழங்குவதற்கு 100 டன் ஆர்டரை ஒரே நிறுவனத்துக்கு வழங்குவதற்காக டெண்டர் விதிமுறைகளைத் திருத்தியது தொடர்பாக விரிவாக அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

நமது செய்தியின் எதிரொலியாகத் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலாளர் இறையன்புடன் இதுதொடர்பாக கலந்தாலோசித்தார். இதையடுத்து,

‘போக்குவரத்துத் துறை தொழிலாளர்களுக்கு வாங்கக்கூடிய ஸ்வீட் ஆவினில் வாங்கட்டும், அரசுத் துறையினர் அனைவரும் ஆவின் நிறுவனத்தில் ஸ்வீட் வாங்கவேண்டும்’ என்று சிறப்பு ஆணையை அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்தார் தலைமைச் செயலாளர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் நாசரை தொடர்புகொண்டு நாம் பேசினோம். இந்த வருடம் தீபாவளிக்கு ஆவின் நிறுவனத்துக்கு எவ்வளவு ஸ்வீட் ஆர்டர் கிடைத்தது, கடந்த ஆட்சியில் எவ்வளவு ஸ்வீட் விற்பனை செய்யப்பட்டது, கொள்முதல் செய்யக்கூடிய பால் எவ்வளவு என்று விசாரித்தோம்.

நம்மிடம் பேசிய அமைச்சர் நாசர், “ மின்னம்பலம் பத்திரிகையாலும், முதல்வர் உத்தரவாலும் ஆவின் நிறுவனம் மடுவிலிருந்து மலையாக வளர்ந்துள்ளது” என்றார்.

மேலும் அவர், “ தற்பொழுது தமிழக போக்குவரத்துத் துறை 1.36 லட்சம் அரை கிலோ பாக்ஸ் என 68 ஆயிரம் கிலோ ஆர்டர் கொடுத்துள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ. 7 கோடி ஆகும். அரசுத் துறைகளிலிருந்து இதுவரையில் 70 டன் ஸ்வீட் ஆர்டர் கிடைத்துள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் அது நூறு டன்னாக உயரும் என எதிர்பார்க்கிறோம். கடந்த அதிமுக ஆட்சியில் 2020 தீபாவளிக்கு 18 டன் ஸ்வீட்தான் விற்பனை செய்திருக்கிறார்கள். அதுவும் தரமில்லை, அதிகமான கலப்படம் இருந்துள்ளது. இந்த வருட தீபாவளிக்குக் கலப்படம் இல்லாமல் தரமான ஸ்வீட்டை தயாரித்துக் கொடுத்து வருகிறோம்.

மொத்தம் 25 யூனியன் உள்ளது. அதில் 8 யூனியனில் ஒரு யூனியனுக்கு ஒன்றரை டன் ஸ்வீட் கடந்த ஆட்சியில் திருடிவிட்டார்கள். அதைப்பற்றியும் முதல்வருக்கு ரிப்போர்ட் அனுப்பியுள்ளோம். அவர் அனுமதி கிடைத்த பிறகு அப்போது அதிகமான ஊழல்கள் செய்த அதிமுக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கும் பதிவு செய்யப்போகிறோம்.

தற்போது நடைபெற்றுவரும் ஆட்சியில் ஆவினிலிருந்து யாருக்கும் இலவச ஸ்வீட் வழங்கவும் கூடாது, கேட்கவும் கூடாது. ஆவின் ஊழியர்கள் முதல் எம்டி, ஏன் அமைச்சர்கள் வரையில் பணம் கொடுத்துத்தான் ஸ்வீட் வாங்கவேண்டும் என்று உத்தரவு போட்டுள்ளோம். எம்டி கந்தசாமியும் பணம் கொடுத்துத்தான் வீட்டுக்கு ஸ்வீட் வாங்கி சென்றார். துறை அமைச்சரான நானும் பணம் கொடுத்துத்தான் ஸ்வீட் வாங்கி என்னைச் சந்திக்க வருபவர்களுக்குக் கொடுத்து வருகிறேன்.

கடந்த ஆட்சியில் 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்தனர். தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 41 லட்சம் பால் கொள்முதல் செய்து வருகிறோம். அதாவது பால் கொள்முதல் ஐந்து லட்சம் லிட்டர் அளவுக்கு அதிகரித்துள்ளது. இப்போது அரசுத் துறை அனைத்தும் ஆவினில் தான் ஸ்வீட் வாங்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டதால் ஆவின் மேலும் நன்றாக வளரும், அதனுடைய ஊழியர்களும் சிறப்பாக செயல்படுவார்கள். இதற்காக உங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

-வணங்காமுடி

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

வியாழன் 28 அக் 2021