மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 28 அக் 2021

கோயில் நகைகளை உருக்கத் தடை!

கோயில் நகைகளை உருக்கத் தடை!

அறங்காவலர்களை நியமிக்கும் வரை கோயில் நகைகளை உருக்க வேண்டாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோயில்களில் பயன்பாட்டில் இல்லாத நகைகளை உருக்கித் தங்க பிஸ்கட்டுகளாக மாற்றி வங்கிகளில் முதலீடு செய்வதற்குத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இன்டிகேட் கலெக்டிவ் என்ற அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதில், கடந்த 11 ஆண்டுகளாகத் தங்க நகைகள் மதிப்பீடு செய்யப்படவில்லை. தற்போது திடீரென மதிப்பீடு செய்யப்பட்டுத் தங்கக் கட்டிகளாக மாற்றப்படும் என்றும் அது வங்கிகளில் முதலீடு செய்யப்படும் என்றும் தெரிவித்திருப்பது அறநிலையத் துறை சட்டத்திற்கு விரோதமானது. அறங்காவலர்கள் பணிகள் பல இடங்களில் காலியாக இருக்கும்போது இந்தப் பணியிடங்களை நிரப்பாமல் நகைகளை மதிப்பீடு செய்வதோ அல்லது உருக்கித் தங்கக் கட்டிகளாக மாற்றுவதோ சட்டவிரோதமானது என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் இன்று (அக்டோபர் 28) விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜரானார். அப்போது அவர், கோயில் நகைகளை உருக்கவில்லை என்றும் காணிக்கையாக வந்த நகைகளை மட்டும் தான் உருக்கப் போவதாகவும் தெரிவித்தார்.

அதுபோன்று காணிக்கையாக வந்த நகைகளை உருக்கும் பணியை மேற் பார்வையிடுவதற்காக உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரும், உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரும் அடங்கிய குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும் அவர்கள் கணக்கெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 11 ஆண்டுகளாக நகைகள் கணக்கு வைக்கப்படவில்லை என்றும் வங்கிகளில் முதலீடு செய்வதன் மூலம் 11.50 கோடி ரூபாய் அளவுக்கு வட்டி வருவாய் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும், அது கோயில்களின் செலவுகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அரசு தரப்பின் வாதத்தைத் தொடர்ந்து அறங்காவலர்களை நியமிக்கும் வரை நகைகளைத் தங்க கட்டிகளாக உருக்கக்கூடாது என்று உத்தரவிட்டு வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

-பிரியா

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

வியாழன் 28 அக் 2021