மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 28 அக் 2021

மோடியைத் தூக்கி எறிந்தாலும் பாஜகவை வீழ்த்த முடியாது: பிரசாந்த் கிஷோர்

மோடியைத் தூக்கி எறிந்தாலும் பாஜகவை வீழ்த்த முடியாது: பிரசாந்த் கிஷோர்

பாஜக இன்னும் பல பத்தாண்டுகளுக்குச் சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்று தேர்தல் யுக்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

பிரசாந்த் கிஷோர் நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்து வெற்றிக்கு வழி வகுத்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலில், தமிழகத்தில் திமு,க மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளின் வெற்றிக்கு பிரசாந்த் கிஷோரின் ஐ.பேக் நிறுவனம் பணியாற்றியது.

அடுத்த ஆண்டு கோவாவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இதற்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு உதவுவதற்காக பல்வேறு உத்திகளை பிரசாந்த் கிஷோர் வகுத்து வருகிறார்.

இந்நிலையில் கோவா அருங்காட்சியகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கலந்துரையாடினார்.

அப்போது அவர், “இந்திய அரசியலில் பாஜக இன்னும் பல பத்தாண்டுகளுக்குச் சக்தி வாய்ந்ததாக இருக்கும். பாஜகவை எதிர்த்துப் பல தசாப்தங்களுக்கு போராட வேண்டியிருக்கும்” என்று கூறினார்.

மேலும் அவர், “அடுத்து வரும் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் தேசிய அரசியலில் அந்த கட்சி மையமாக இருக்கும். கடந்த 40 ஆண்டுக்கால இந்திய அரசியலில் காங்கிரஸ் சந்தித்த வெற்றி தோல்வியைப் போல பாஜகவும் இருக்கும். பாஜக எங்கும் செல்லப் போவதில்லை. நாட்டில் 30 சதவிகித வாக்குகளைப் பெற்று விட்டாலே அந்த கட்சி எங்கும் செல்லாது.

எனவே மக்கள் கோபமடைந்து பிரதமர் மோடியைத் தூக்கி எறிவார்கள் என்ற வலையில் ஒருபோதும் சிக்கிக் கொள்ள வேண்டாம். ஒருவேளை மோடியைத் தூக்கி எறிந்தால் கூட பாஜக எங்கும் செல்லாது. மக்கள் பிரதமர் மோடியைத் தூக்கி எறிந்து விடுவார்கள் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நினைக்கிறார். அங்குதான் பிரச்சினையே இருக்கிறது.

மோடியின் வலிமை என்ன என்பதை அறிந்து புரிந்து கொள்ளாதவரை நிச்சயமாக அவரின் இடத்திற்கு ராகுல் காந்தியால் ஒருபோதும் போட்டியிட முடியாது.

நான் பார்த்தவரைப் பிரச்சினை என்னவென்றால் பெரும்பாலானோர் பிரதமர் மோடியின் பலத்தையும், அவர் பிரபலமாகக் காரணம் என்ன என்பதையும் புரிந்து கொள்ள போதுமான நேரத்தைச் செலவிடுவதில்லை. இதைத் தெரிந்து கொண்டால் மட்டுமே, மோடிக்கு எதிராகப் போட்டியை ஏற்படுத்த முடியும்.

காங்கிரஸில் உள்ள எந்த தலைவர் அல்லது மாநில தலைவரிடம் சென்று பிரதமர் மோடியின் எதிர்காலம் மற்றும் பாஜகவின் எதிர்காலத்தைப் பற்றிக் கேளுங்கள். இதற்கு அவர்கள், ‘எல்லாம் காலம் பார்த்துக் கொள்ளும், பாஜக ஆட்சி மீது மக்கள் வெறுப்படைந்து விட்டார்கள். அரசுக்கு எதிராக அதிருப்தி உருவாகி மக்கள் அவர்களைத் தூக்கி எறிவார்கள்’ என்று தான் கூறுவார்கள். ஆனால் மக்கள் ஒருபோதும் பாஜகவையும் மோடியையும் தூக்கி எறிய மாட்டார்கள்.

சமீப நாட்களாக மோடி அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது. அதனால் மக்கள் மத்தியில் பிரதமர் மோடிக்கு எதிராக ஏதேனும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதா? என்ன?

நாட்டிலுள்ள வாக்காளர்களில் மூன்றில் ஒரு பங்கு பேர் பாஜகவுக்கு வாக்களித்தால் போதும்.. மற்ற இரு பங்கு மக்கள் 10 முதல் 15 கட்சிகளுக்குத் தான் பிரித்து வாக்களித்திருப்பார்கள். எனவே பிரதமர் மோடிக்கு எதிராக, பாஜகவுக்கு எதிராக எந்த உறுதியான கூட்டணியும் உருவாகாது. 10 முதல் 15 கட்சிகளாக வாக்குகள் பிரிவதற்குக் காரணமே காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிதான்” என்று கூறினார்.

-பிரியா

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

வியாழன் 28 அக் 2021