தொடங்கும் சஷ்டி திருவிழா… தொடரும் தடை உத்தரவுகள்!

politics

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா வரும் நவம்பர் மாதம் 4ஆம் தேதி தொடங்கி 15ஆம் தேதி வரை நடைபெறும் நிலையில் முக்கிய நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூரில் வெகு விமரிசையாக நடைபெறும் கந்தசஷ்டி திருவிழாவில் வருடம்தோறும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு மேலாக கலந்து கொள்வர். கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பக்தர்களுக்கு அனுமதியின்றி நடைபெற்றது. இந்த ஆண்டும் கொரோனா காரணமாக, பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கந்தசஷ்டி திருவிழாவின் முன்னேற்பாடுகள் குறித்த கூட்டம் நேற்று (அக்டோபர் 27) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், மீன்வளத் துறை மற்றும் கால்நடை துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்டக் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக 9ஆம் தேதி நடைபெறும் சூரசம்ஹாரம் மற்றும் 10ஆம் தேதி நடைபெறும் திருக்கல்யாணம் ஆகிய நிகழ்ச்சிகளில் பக்தர்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற நாட்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் 10,000 பேர் கலந்து கொள்ளலாம் எனவும் கொரோனா பரிசோதனை செய்த சான்றிதழைக் காண்பித்த பிறகே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கந்தசஷ்டி திருவிழாவில் தனிநபர் அன்னதானத்துக்குத் தடை விதிக்கப்படுவதாகவும் கோயில் நிர்வாகம் மூலம் வழங்கப்படும் அன்னதானத்துக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயில் சுற்று வட்டாரத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கியிருந்து சாமி தரிசனம் செய்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த கந்தசஷ்டி திருவிழாவில் உள்ளூர் போலீஸார் 1,500 பேர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவார்கள் எனவும் சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணம் ஆகிய நிகழ்ச்சிகளை உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் சேனல்கள் மூலமாக கண்டுகளிக்குமாறு பக்தர்களுக்கு மாவட்டம் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

தற்போது வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களைத் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில், திருச்செந்தூரில் நடைபெறவிருக்கும் சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் நிகழ்ச்சிகளுக்கும் பக்தர்கள் அனுமதி அளிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தத் தடைகள் பக்தர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

**-ராஜ்**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *