மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 4 டிச 2021

மகளிர் சுய உதவிக் குழு கடன்கள் தள்ளுபடி!

மகளிர் சுய உதவிக் குழு கடன்கள் தள்ளுபடி!

கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடனை தள்ளுபடி செய்வதாகத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி கொடுத்திருந்தது. அதன்படி, கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை 2,756 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் எனக் கடந்த ஆகஸ்ட் மாதம் பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தற்போது அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

அந்த அரசாணையில், “கூட்டுறவு நிறுவனங்கள் பொதுமக்களிடம் இருந்து திரட்டும் குறுகிய கால வைப்புத் தொகையிலிருந்தும், சங்கங்களின் சொந்த நிதியிலிருந்தும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், நபார்டு, டாப்செட்கோ, டாம்கோ, நிறுவனங்களிடமிருந்தும் நிதி உதவி பெற்று 11.50 சதவிகிதம் வரையிலான வட்டி விகிதத்தில் சுய உதவிக் குழுக்களுக்குக் கடன் வழங்கப்படுகின்றன. கடந்த மார்ச் 31ஆம் தேதி வரை கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன்களின் நிலுவை 2755.99 கோடி ரூபாயாக உள்ளது.

இந்த நிலுவைத் தொகையில் அசல் தொகை 2459.57 கோடி ரூபாயாக உள்ளது. இந்த அசல் தொகையில் கூட்டுறவு நிறுவனங்களின் சொந்த நிதியிலிருந்து 1,092.47 கோடி ரூபாயும், உயர் கூட்டுறவு நிறுவனங்களிடமிருந்து 1,367.10 கோடி ரூபாயும் கடன் பெற்று சுய உதவிக் குழுக்களுக்குக் கடன் வழங்கப்பட்டுள்ளது. எனவே மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் நிலுவை தொகை 2755.99 கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்யுமாறும், அவ்வாறு தள்ளுபடி செய்யும் தொகையினை ஒரே தவணையில் கூட்டுறவு நிறுவனங்களுக்கு வழங்குமாறும் ஏப்ரல் 1ஆம் தேதி 2021, முதல் அரசாணை வெளியிடப்படும் நாள் வரையிலான மேற்படி தள்ளுபடி செய்யப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு கடன்களுக்கான வட்டி, அபராத வட்டி, இதர செலவினங்கள் உள்ளிட்ட நிலுவைத் தொகை முழுவதையும் அரசே ஏற்றுக் கொண்டு உரிய வழிகாட்டு நெறிமுறைகள் கூட்டுறவு நிறுவனங்களுக்கு வழங்குமாறும் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதன்படி மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன்களில் மார்ச் 31ஆம் தேதி வரையிலான நிலுவைத் தொகையில் அபராத வட்டி மற்றும் இதர செலவினங்கள் தவிர்த்து அசல் தொகையான 2459.57 கோடி ரூபாயும் மற்றும் வட்டி தொகையான 215.07 கோடி ரூபாயும் சேர்த்து மொத்தம் 2674.64 கோடியைத் தள்ளுபடி செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.

இதில் முதல் கட்டமாக இந்த நிதியாண்டில் 600 கோடி ரூபாய் விடுவிக்கவும், மீதமுள்ள தொகை 7 சதவீத வட்டியுடன் 4 ஆண்டுகளில் விடுவிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பிரியா

திமுகவில் இருந்து பாஜகவில் இணைவது இப்படித்தானா?

7 நிமிட வாசிப்பு

திமுகவில் இருந்து பாஜகவில் இணைவது இப்படித்தானா?

அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: உச்ச நீதிமன்றம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழுவுக்கு  தடையில்லை: உச்ச நீதிமன்றம்!

கொடநாடு வழக்கு - முதல்வர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?: சசிகலா

3 நிமிட வாசிப்பு

கொடநாடு வழக்கு - முதல்வர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?: சசிகலா

சனி 4 டிச 2021