மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 4 டிச 2021

கொடநாடு: பொங்கலுக்குள் எடப்பாடிக்கு சம்மன் - தயாராகும் போலீஸ்!

கொடநாடு:  பொங்கலுக்குள் எடப்பாடிக்கு சம்மன் - தயாராகும் போலீஸ்!

கொடநாடு கொலை. கொள்ளை வழக்கு விசாரணையில் சுணக்கம் ஏற்பட்டிருக்கிறதோ என்ற பேச்சு அரசியல் வட்டாரங்களில் எழுந்த நிலையில்.... இந்த வழக்கு சம்பந்தமாக கொடநாடு எஸ்டேட் ஊழியர்கள் முதல் அரசு உயர் அதிகாரிகள் வரையில் மூன்று நாளில் 22 மணி நேரம் விசாரணை நடந்துள்ளது என்கிறார்கள் நீலகிரி மாவட்ட போலீஸார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோட்டையான கொடநாடு பங்களாவில் 2017 ஏப்ரல் 23 ஆம் தேதி, இரவு ஓம்பகதூர் என்ற செக்யூரிட்டியை கொலை செய்துவிட்டு, கிருஷ்ணாதாபா என்ற செக்யூரிட்டியை அடித்து மிரட்டி கட்டிப்போட்டுவிட்டு பங்களாவில் உள்ள மூன்று அறைகளை உடைத்து முக்கிய டாக்மெண்ட்டுகள், ஜெயலலிதா விரும்பிய வாட்ச்சுகள், படிகத்தால் செய்யப்பட்ட இரண்டு யானை பொம்மைகள் மற்றும் சில பொருட்களை கொள்ளையடித்துக்கொண்டு தப்பியபோது கேரளா மாநில எல்லையில் பிடிபட்ட சிலரைத் தமிழக காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர் கேரளா போலீஸார்.

கொடநாடு கொலை கொள்ளை சம்பவத்தைப் பற்றி நமது மின்னம்பலம்.காம் தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிகையில் தொடர்ந்து புலனாய்வு செய்தியாக வெளியிட்டு வருகிறோம்.

கடந்த சில வாரங்களாக கொடநாடு கொலை வழக்கு சைலண்ட் ஆகிவிட்டது. எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை என்ற செய்திகள் உலாவிவந்தது.

இந்த நிலையில், நாம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய போலீஸ் அதிகாரிகளிடம் விசாரித்தோம். வழக்கு இப்போதுதான் சூடு பிடித்துள்ளது என்கிறார்கள்.

“விசாரணை வெளியில் கசியாத அளவுக்கு ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் ஐபிஎஸ். கோவை மாவட்டத்தில் ஒதுக்குப் புறமாக உள்ளது போலீஸ் அகாடமி. அந்த இடத்துக்குக் காக்கா குருவிகூட வராது.

அங்கே நவம்பர் 25ஆம் தேதி, காலை 11.00 முதல் மாலை 6.00 மணி வரையில் விசாரணை, அடுத்த நாள் 26ஆம் தேதி ஒரு நாள் இடைவேளை விட்டு மறுநாள் 27ஆம் தேதி காலை 11.00 மணி முதல் மாலை 6.30 மணி வரையிலும், 28ஆம் தேதி, ஞாயிற்றுக் கிழமை மாலை 4.00 மணி முதல் இரவு 12.30 வரையில் மொத்தம் மூன்று நாட்களில் 22 மணி நேரம் தீவிரமான விசாரணை நடந்தது.

ஐஜி சுதாகர், டிஐஜி முத்துசாமி, எஸ்பி ஆஷீஸ் ராவத், விசாரணை அதிகாரி ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி, டிஎஸ்பி சுரேஷ், சிசிடிவி கேமரா ஆபரேட்டர் தினேஷ் தற்கொலையை விசாரித்து வரும் டிஎஸ்பி சந்திரசேகர், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ,கள் மற்றும் போலீஸார் உட்பட 20 பேர் மாறிமாறி விசாரித்துக் கசக்கிப் பிழிந்துவிட்டார்கள்.

கொடநாடு மேலாளர் நடராஜன், மற்றும் ஊழியர்கள், கொடநாடு சிசி கேமரா ஆபரேட்டர் தினேஷின் சகோதரி மற்றும் உறவினர்கள், கனகராஜ் உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை செய்தனர்.

அதைவிட முக்கியமானவர் ஒருவரிடமும் மணிக் கணக்கில் விசாரணை செய்தனர். அந்த அதிகாரி சைரன் வைத்த அரசு வாகனத்தில் சென்னையிலிருந்து வந்தார். அனேகமாக அவர் ஒரு ஐஏஎஸ் அதிகாரி ரேங்கில்தான் இருப்பார் என நினைக்கிறேன். விசாரணை தீவிரமாக போய்க் கொண்டிருக்கிறது.

விசாரணையில் சிசி கேமரா ஆப்ரேட்டர் தினேஷ் காதல் பிரச்சனையால்தான் தற்கொலை செய்துகொண்டான் என்பதை உறுதி செய்து விட்டனர். கனகராஜ் கொலை வழக்கு விசாரணை தொடர்கிறது.

விசாரணை அறையில் முக்கிய அதிகாரிகளிடம் ஐஜி சுதாகர் சத்தம்போட்டு பேசிக்கொண்டிருந்தார். கொடநாட்டில் சம்பவம் நடந்ததும் விசாரிக்கச் சென்ற போலீஸை அப்போதிருந்த மாவட்ட ஆட்சியர் சங்கர் உள்ளே வரக்கூடாது என்று ஏன் தடுத்தார், எஸ்.பி முரளிரம்பா ஏன் தயங்கினார், அவர்களிடமும் விசாரிக்க வேண்டும் என்று ஆலோசனைகள் செய்துவந்தனர்.

தீவிரமான தொடர் போலீஸ் விசாரணையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வலதுகரமான சேலம் இளங்கோவன் குற்றவாளி வளையத்துக்குள் வருகிறார். அவரை அடிப்படையாக வைத்து எடப்பாடி பழனிசாமியையும் குற்றவாளி வளையத்துக்குள் கொண்டுவர போதுமான முகாந்தரங்கள் உள்ளன. புதுவருடத்தில் பொங்கலுக்கு முன் எடப்பாடி பழனிசாமியை விசாரணைக்கு அழைக்க சம்மன் கொடுக்கவும் திட்டமிட்டுள்ளார் விசாரணை அதிகாரி” என்கிறார்கள் முக்கிய அதிகாரிகள்.

-வணங்காமுடி

திமுகவில் இருந்து பாஜகவில் இணைவது இப்படித்தானா?

7 நிமிட வாசிப்பு

திமுகவில் இருந்து பாஜகவில் இணைவது இப்படித்தானா?

அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: உச்ச நீதிமன்றம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழுவுக்கு  தடையில்லை: உச்ச நீதிமன்றம்!

கொடநாடு வழக்கு - முதல்வர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?: சசிகலா

3 நிமிட வாசிப்பு

கொடநாடு வழக்கு - முதல்வர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?: சசிகலா

சனி 4 டிச 2021