மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 4 டிச 2021

அன்வர் அமைதி அர்த்தம் என்ன?

அன்வர் அமைதி அர்த்தம் என்ன?

டிசம்பர் 1 ஆம் தேதி அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் நடக்க இருந்த நிலையில் நவம்பர் 30 ஆம் தேதி மாலை வாக்கில் அக்கட்சியின் முன்னாள் எம்பியும், முன்னாள் அமைச்சரும், சிறுபான்மை பிரிவு மாநில செயலாளருமான அன்வர் ராஜாவுக்கு சென்னையில் இருந்து ஒரு போன் சென்றிருக்கிறது.

‘அண்ணே...செயற்குழுவுக்கு கிளம்பிட்டீங்களா... இன்னிக்கு ராத்திரி உங்களை கட்சியிலேர்ந்து நீக்கி அறிவிப்பு வரப் போகுதுண்ணே’என்றது அந்த போன் குரல்.

அதைக் கேட்ட அன்வர் ராஜா, ‘ஒருவாரமா எதிர்பார்த்துக்கிட்டிருக்கேன். இன்னிக்குதான் நடக்குதா’என்றபடி சிரித்திருக்கிறார். தனக்கு தகவல் சொன்னவர் மிக நம்பகமான நபர் என்பதால் சென்னை பயணத்தை ரத்து செய்துவிட்டு ராமநாதபுரம் வீட்டிலேயே இருந்துவிட்டார் அன்வர் ராஜா.

அந்த நம்பக நபர் சொன்னபடியே நவம்பர் 30 இரவு 10.45 மணிக்கு அதிமுகவின் தலைமைக் கழகம் அன்வர் ராஜாவை நீக்கி அறிவிப்பு வெளியிட்டது. அந்த இரவில் இருந்து அன்வர் ராஜாவுக்கு பல போன்கள். ஆனால் தனக்கு நம்பகமான சிலரது போன் கால்களை மட்டுமே எடுத்துப் பேசும் அன்வர் ராஜா, ‘அதெல்லாம் பாத்துக்கலாம். யாராச்சும் போன் பண்ணி ரெக்கார்டு பண்ணி வெளிய விட்டுடறாங்க. அதனாலதான் யார்கிட்டையும் கொஞ்ச நாளைக்கு பேசக் கூடாதுனு முடிவுல இருக்கேன். சென்னைக்கு வர்றேன். வந்ததும் நேர்ல பேசுவோம். வச்சிடட்டுமா?’ என்று சொல்லி வைத்துவிடுகிறார்.

டிசம்பர் 1 ஆம் தேதி அதிமுக செயற்குழுவில் கலந்துகொள்ள வேண்டிய அன்வர் ராஜா முதல் நாளே நீக்கப்பட்டதால் செயற்குழு பற்றிய தகவல்களை தொலைக்காட்சிகளில் பார்த்துக் கொண்டிருந்தார். அதிமுகவின் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் பலர் அன்வர் ராஜாவுக்கு போன் பண்ணி கிடைக்காமல் அவரது செயலாளர் சிவகுமாருக்கு போன் பண்ணியிருக்கிறார்கள். சிலரிடம் மட்டும் பேசிய அன்வர் ராஜா, பலரது போன் கால்களை தவிர்த்துவிட்டார்.

ராமநாதபுரம் பாரதி நகரில் எம்.ஜி.ஆர். இல்லம் என பெயரிடப்பட்ட தன் வீட்டில்தான் மூன்று நாட்களாக இருக்கிறார் அன்வர் ராஜா.

தான் நீக்கப்பட்டதற்கு காரணம் என்று என்ன நினைக்கிறார், அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பதுபற்றியெல்லம் அன்வர் ராஜாவுக்கு நம்பகமான வட்டாரத்தில் பேசினோம்.

“புதுக்கோட்டை மாவட்டம் கடம்பக்குடி ஒன்றியத்தைச் சேர்ந்த அதிமுகவின் நீண்ட கால விசுவாசி என்னின் தாய் பாஸ்கரன் அக்டோபர் மாதம் அன்வர் ராஜாவுக்கு போன் செய்திருக்கிறார். அன்வர் ராஜாவுக்கு அதிமுக தொண்டர்கள் பலரும் போன் செய்து தங்கள் கருத்துகளை தெரிவிப்பது வழக்கம். அந்த வகையில் அன்வர் ராஜாவிடம் எடப்பாடியை பற்றி கோபமாக என்னின் தாய் பாஸ்கரன் பேச, ‘இந்தத் தேர்தல்ல ஜெயிச்சிருந்தா நான் தான் எம்.ஜி.ஆர்னு சொல்லியிருப்பான்’ என்று எடப்பாடியை குறிப்பிட்டு பேசினார் அன்வர் ராஜா. பாஜகவின் நெருக்கடியால்தான் அதிமுக இப்படி ஆகிவிட்டதோ என்று பேச்சு வரும்போது, ‘மோடிய ஆண்டவன் தண்டிப்பான்னு பார்லிமென் ட்லயே நான் பேசினேன். குஜராத் அசாசினேஷனை வச்சிதான் மோடி பிரதமர் வேட்பாளராகவே ஆனாரு’என்றெல்லாம் பேசினார் அன்வர் ராஜா. இதை பதிவு செய்து சமூக தளங்களில் வெளியிட்டு விட்டார் என்னின் தாய் பாஸ்கரன்.

இது நடந்து மூன்று வாரங்கள் கழித்து நவம்பர் 24 ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் அன்வர் ராஜா, ‘உள்ளாட்சித் தேர்தல் என்பது தொண்டர்களுக்கான தேர்தல். இதில் அதிமுக தனித்துப் போட்டியிட்டால்தான் தொண்டர்களுக்கு முழு பலனும் கிடைக்கும். எனவே இதில் கூட்டணி வேண்டாம்’ என்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி கே.பி.முனுசாமியைப் பார்த்தார். அதையடுத்து முனுசாமி திரும்பி சி.வி. சண்முகத்தைப் பார்த்தார். அதைப் புரிந்துகொண்ட சி.வி. சண்முகம் எழுந்து அன்வர் ராஜாவை நோக்கி சரமாரியாக பேச ஆரம்பித்தார். ‘முன்னாள் முதல்வரை ஏக வசனத்தில் பேசினவனை எல்லாம் இங்க பேச விடுறீங்கள?’ என்று அன்வர் ராஜாவை பார்த்து கத்தினார் சண்முகம். அப்போது அன்வர் ராஜா, ‘அந்த அலைபேசி உரையாடலுக்காக ஏற்கனவே நான் இணை ஒருங்கிணைப்பாளரிடம் வருத்தம் தெரிவிச்சுட்டேன். ஆனாலும் இப்ப எல்லார் முன்னிலையிலும் மன்னிப்புக் கேட்டுக்குறேன்’ என்று பேசினார். ஆனாலும் சண்முகத்தின் முகத்தில் கடுகு போட்டால் பொரியும் அளவுக்கு கொதிப்பு தொடர்ந்தது.

இந்த கூட்டத்துக்குப் பிறகு அன்வர் ராஜாவுக்கு சில தகவல்கள் கிடைத்தன. ‘இந்த அலைபேசி உரையாடலை எடப்பாடி சீரியசாக எடுத்துக்கொள்ளாவிட்டாலும், பாஜக ரொம்பவே சீரியசாக எடுத்துக் கொண்டிருக்கிறது. அதனால் அன்வர் ராஜா மீது நடவடிக்கை எடுக்குமாறு பாஜகவில் இருந்து எடப்பாடிக்கும், பன்னீருக்கும் அழுத்தம் தரப்பட்டிருக்கிறது. இந்த நிலையில்தான் எடப்பாடியை சந்தித்த முன்னாள் அமைச்சர்கள் சிலர், ‘பாஜக தயவு நமக்கு இப்ப ரொம்ப தேவை. நம்ம மேல திமுக கை வைக்க யோசிக்கறதுக்குக் காரணம் மேல நமக்கு அவங்க சப்போர்ட் இருக்கறதாலதான். ஆனால் இதெல்லாம் அன்வர் ராஜாவுக்கு புரிஞ்சும் அவர் வேற மாதிரி பேசிக்கிட்டிருக்காரு. அதனால அவர் மேல நடவடிக்கை எடுக்கணும்’ என்று எடப்பாடியிடம் அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள். ஒருகட்டத்தில் தன்னை தனிப்பட்ட முறையில் தாக்கிய கோபம் ஒரு பக்கம்,பாஜகவின் அழுத்தம், முன்னாள் அமைச்சர்களின் அழுத்தம் ஆகியவற்றால் அன்வர் ராஜாவை நீக்க முடிவெடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதுகுறித்து அவர் ஓ.பன்னீர் செல்வத்திடம் பேசியிருக்கிறார். ஆனால் பன்னீரோ, ‘அவர் எம்.ஜி.ஆர்.காலத்து ஆளுங்க. அவரை நீக்கினா நமக்குதான் பிரச்சினை. வேணும்னா அவரை பேசாம இருக்கச் சொல்லுவோம்’ என்று கூறியிருக்கிறார் ஓ.பன்னீர்.

இதையடுத்து எடப்பாடி சார்பில் சில முன்னாள் அமைச்சர்கள் அன்வர் ராஜாவிடம் பேசியிருக்கிறார்கள். ‘அண்ணே... உங்களுக்கு மாசம் என்ன செல்வாகும்னு சொல்லுங்க. பாத்துக்கலாம். அதை வச்சிட்டு நிறைவா கட்சிப் பணி பாருங்க. சசிகலா ஆதரவு, பிஜேபி எதிர்ப்புனு ரொம்ப இறங்க வேணாம்’ என்று மறைமுகமாக அன்வர் ராஜாவிடம் பேசியிருக்கிறார்கள். ஆனால் அதற்கு அன்வர் ராஜா மசியாததோடு, ‘என்னைக் காப்பத்திக்க எனக்குத் தெரியும். போயிட்டு வாங்க’ என்று சொல்லிவிட்டார். இதன் பின் அந்த முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடியிடம் பேசியிருக்கிறார்கள்.

இந்த சம்பவத்துக்குப் பிறகுதான் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து, ‘எடப்பாடிக்கும் பன்னீருக்கும் மனக் கசப்பு. சசிகலாவை சேர்த்துக் கொண்டிருந்தால் அதிமுக ஆட்சிக்கு வந்திருக்கும். பாஜகவுடனான கூட்டணியை அதிமுகவின் ஒரு தொண்டன் கூட விரும்பவில்லை’ என்று கிழித்திருக்கிறார் அன்வர் ராஜா. அதிமுகவின் செயற்குழு கூட்டத்துக்கு முந்தைய சில நாட்கள் முழுவதும் அதிமுகவுக்குள் அன்வர் ராஜாவின் பேட்டி பரபரப்பையும் சர்ச்சைகளையும் கிளப்பியது. இந்த நிலையில் கோபமான எடப்பாடி செயற்குழு கூட்டத்துக்கு முதல் நாள் ஓ.பன்னீரிடம், ‘சேனல்ல இப்படி எல்லாத்தையும் போட்டு உடைக்குறாரு. நாளைக்கு செயற்குழுவுலயும் இப்படித்தான் பேசுவாரு. அதுக்கு ஆதரவு தெரிவிக்கவும் ஆளுங்க இருப்பாங்க. அதெல்லாம் நல்லா இருக்காது’ என்று கடுமையாகவே பேசியிருக்கிறார். அதன் பிறகுதான் அன்வர் ராஜாவின் நீக்க கடிதம் தயார் செய்யப்பட்டிருக்கிறது. அன்று மாலையே அது அன்வர் ராஜாவுக்கும் தெரியப்படுத்தப்பட்டது. இதன் மூலம் செயற்குழுவில் அன்வர் ராஜா கிளப்ப இருந்த எரிமலையை தவிர்த்துவிட்டார் எடப்பாடி” என்றவர்கள் மேலும் தொடர்ந்தனர்.

“அன்வர் ராஜா ஒரு முஸ்லிம் என்பதை விட அதிமுக காரர் என்ற அடிப்படையில்தான் பாஜகவை எதிர்க்கிறார். அம்மா இருக்கும்போது அன்வர் ராஜாவுக்கு சீட் என்று முடிவெடுத்துவிட்டால் அவருக்கு மட்டும் நேர்காணலே வைக்க மாட்டார்கள். ஏனென்றால் எம்.ஜிஆ.ரால் ஆட்சிமன்றக் குழுவில் அன்வர் ராஜாவோடு நியமிக்கப்பட்டவர் அம்மா. அவருக்கு அன்வர் ராஜா பற்றி தெரியும். ஆனால் ஓபிஎஸ்- எடப்பாடி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியை பாஜகவின் கட்டளையின் பேரில் அன்வர் ராஜாவுக்கு தர மறுத்தனர். பாஜக திட்டமிட்டு அதை தனக்குப் பெற்றது. அங்கே நயினார் நாகேந்திரனை வேட்பாளராக நிறுத்தியது. ஆனால்...அதிமுக தலைமையின் உத்தரவை ஏற்று கட்சி நிர்வாகியாக நயினார் நாகேந்திரனுக்கு வேலை பார்த்தார் அன்வர் ராஜா. தன் வீட்டில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு விருந்து வைத்து பிரச்சாரத்தை துவக்கினார். அதேபோல கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் பாஜக வேட்பாளர் குப்புராமுக்கு கடுமையாக தேர்தல் வேலை பார்த்தார் அன்வர் ராஜா. இப்படிப்பட்ட அன்வர் ராஜாவை பாஜகவின் அழுத்தம், முன்னாள் அமைச்சர்களின் அழுத்தத்தால் ஓபிஎஸ்சின் எதிர்ப்பையும் மீறி நீக்கியிருக்கிறார் எடப்பாடி.

வீட்டில் இருந்த அன்வர் ராஜாவை அவரது நெருங்கிய நண்பரும் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்றவருமான முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி தொடர்புகொண்டிருக்கிறார். ‘அண்ணே வர்ற தேர்தலுக்கு பாஜகவுக்கு எதிரான பிரச்சார பீரங்கியா நீங்க இருக்கப் போறீங்க. திமுகவுக்கு வந்துடுங்க. அமைச்சர் (ராஜ கண்ணப்பன்) பேசச் சொன்னாரு. ராஜ்ய சபாவுல போய் மறுபடியும் நீங்க பேச வாய்ப்பு கிடைக்கலாம்’ என்று கூறிருக்கிறார். ஆனாலும் அன்வர் ராஜா அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார்.

செயற்குழு முடிந்த கையோடு அன்வர் ராஜாவோடு கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வம் பேசியிருக்கிறார். ‘அண்னே என்ன நடக்குதுனு உங்களுக்கு தெரியும். கொஞ்ச நாள் அமைதியா இருங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும்’ என்று சொல்லியிருக்கிறார் பன்னீர். இதற்கிடையில் சசிகலா தரப்பில் இருந்தும் அன்வர் ராஜாவை சிலர் தொடர்புகொண்டிருக்கிறார்கள். அன்றே சசிகலா வெளியிட்ட அறிக்கையிலும், ’ அண்மைக்காலமாக எந்தவித காரணமும்‌ இல்லாமல்‌ காழ்புணர்ச்சியின்‌ காரணமாக உதாசீனப்படுத்தப்பட்டவர்கள்‌, ஒதுக்கப்பட்டவர்கள்‌ மற்றும்‌ தாங்களாக ஒதுங்கிக் கொண்டு செயல்படாமல்‌ இருப்பவர்கள்‌ அனைவரும்‌ கவலைப்படாமல்‌ சிறிது காலம்‌ பொறுத்து இருங்கள்‌. உங்கள்‌ மக்கள்‌ பணிகளை தொடர்ந்து செய்யுங்கள், விரைவில்‌ அதிமுக‌ நிலை மாறும்‌, தலை நிமிரும்‌, இது உறுதி’ என்று கூறியிருந்தார். உங்களுக்காகத்தான் அந்த வரிகள் என்று அன்வர் ராஜாவிடமே சசிகலா தரப்பில் இருந்து தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான் அமைதியாக சில நாட்களாக ராமநாதபுரத்தில் இருக்கும் தனது எம்.ஜி.ஆர். இல்லத்திலேயே இருக்கிறார் அன்வர் ராஜா.

-ஆரா

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

சனி 4 டிச 2021