இலவசத் திட்டங்கள் குறித்து விவாதம் தேவை: வெங்கையா நாயுடு

“ நாட்டில் தட்டுப்பாடாக உள்ள வளங்களை மிகவும் சிக்கனமாகவும் பயனுள்ள வகையிலும் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, இலவசத் திட்டங்கள் குறித்து விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும்” என்று குடியரசு துணைத்தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான எம்.வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று (டிசம்பர் 4) நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் 100-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவோடு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்துகொண்டார். அதில் உரையாற்றிய அவர்,
“ குறிப்பிட்ட சமூக-பொருளாதார தாக்கங்களை ஏற்படுத்துவதற்காக நாடாளுமன்றத்தால் ஒதுக்கப்படும் நிதியின் ஒவ்வொரு ரூபாயும், ஆக்கப்பூர்வமான, நம்பிக்கையான மற்றும் சிக்கனமாக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மிகவும் பழமையானதும், நாடாளுமன்றத்தின் அனைத்துக் குழுக்களுக்கும் தாய் போன்றதுமான பொதுக்கணக்கு குழுவிற்கு, நாட்டின் வளங்கள் திறம்பட பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யும் பொறுப்பு உள்ளது.
இலவசத் திட்டங்களுக்கான செலவினம் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. பல்வேறு அரசுகளும் தெளிவான காரணங்களுக்காக இலவசங்கள் வழங்குவதை, தற்போது நாம் பார்த்து வருகிறோம். தேவைப்படும் மக்களுக்கு நலத்திட்டங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு கிடைப்பதை அரசாங்கங்கள் உறுதி செய்யும் வேளையில், நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சியின் நோக்கங்கள் பொருத்தமானதாக அமைய வேண்டும். செலவினங்களைக் கவனமாக கையாண்டால் தான், குறுகிய கால மற்றும் நீண்டகால வளர்ச்சியின் நோக்கங்கள் சம கவனத்தைப் பெறும். எனவே, சமூக-பொருளாதார நோக்கங்களுக்காக நாட்டின் வளங்கள் திறம்பட பயன்படுத்தப்படுகிறதா என்பதை நாடாளுமன்ற பொது கணக்குக் குழு ஆராய வேண்டும். இந்த இரண்டு நோக்கங்களையும் சமநிலைப்படுத்துவது குறித்து விரிவாக பரிசீலிப்பது குறித்து இக்குழு ஆராய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
மேலும், “நாட்டில் பற்றாக்குறையாக உள்ள வளங்கள், வீணடிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அரசால் ஒதுக்கப்படும் ஒரு ரூபாயில், 16காசுகள் மட்டுமே மக்களைச் சென்றடைகிறது என, 35 ஆண்டுகளுக்கு முன்பே அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி கூறியதையும் நினைவுகூர்ந்ததுடன், இதுகுறித்து புதிதாக ஆராய வேண்டியது அவசியம்.
அரசாங்கங்களின் நலத்திட்ட கடமை என்ற பெயரில் இலவசங்களுக்கு செலவிடுவதை, வளர்ச்சிப்பணிகளின் தேவைக்கு பொருந்தும்படி செய்வதுடன், இதுகுறித்து விரிவான பொது விவாதம் நடத்துவது குறித்து நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழு ஆராய வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா.
-வேந்தன்