மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 4 டிச 2021

ஒமிக்ரானால் இதுவரை மரணம் ஏற்படவில்லை!

ஒமிக்ரானால் இதுவரை மரணம் ஏற்படவில்லை!

கொரோனா வைரஸின் மாறுபாடான ஒமிக்ரானால் இதுவரை எந்த இறப்பும் பதிவாகவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

‘கவலைக்குரிய திரிபு’ என்று உலக சுகாதார அமைப்பினால் வகைப்படுத்தப்பட்ட ஒமிக்ரான் பல்வேறு நாடுகளுக்கு பரவ ஆரம்பித்துவிட்டது. வைரஸ் பரவலை தடுப்பதற்காக அந்தந்த நாடுகள் தங்களுக்கு ஏற்றவாறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டியன் லின்ட்மெயர் நேற்று(டிசம்பர் 3) செய்தியாளர்களை சந்தித்தபோது, ”ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

தற்போதைய சூழ்நிலையில் டெல்டா வகை வைரஸ்தான் 99% ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஒமிக்ரான் வேகமாக பரவினாலும் டெல்டாவை முறியடிக்குமா என்பதை இப்போதைக்கு கணிக்க முடியவில்லை. டெல்டா உள்ளிட்ட பிற வைரஸ்களைக் காட்டிலும் இது அதிகமாகப் பரவக்கூடியதா, அதிக ஆபத்தானதா அல்லது தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகளுக்கு கட்டுபடுமா என்பதை தீர்மானிக்க கூடுதல் ஆய்வு தேவைப்படுகிறது.நாங்களும் தொடர்ந்து ஆதாரங்களை சேகரித்து வருகிறோம்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு டெல்டா வைரஸ் தொற்று அதிகரிப்பு காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்துமஸ் சந்தைகள் மூடல் உள்ளிட்ட நடவடிக்கைகள் ஒமிக்ரான் வைரஸூக்கு முன்பே எடுக்கப்பட்டது. அதை விட்டுவிட வேண்டாம்.

டெல்டா வைரஸிலிருந்து தற்காத்துக் கொள்ள என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டதோ, ஒமிக்ரானில் இருந்து தற்காத்துக் கொள்ளவும், அதே வழிமுறையை பின்பற்ற வேண்டும். இதுவரை எங்கும் ஒமிக்ரானால் இறப்பு ஏற்படவில்லை. அதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமே தவிர பீதியடைய வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுவரை வெளிநாட்டில் இருந்து வந்து கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளான 3 பேர் உள்பட 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

விமான நிலையங்கள் மூலம் தமிழகத்துக்கு வருபவர்களை சோதிப்பதுபோன்று, கர்நாடகாவில் இருந்து சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரயில் மூலம் வரும் பயணிகளையும் பரிசோதனை செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று கர்நாடகாவில் இருந்து சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் அனைவரும் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 6 பேர் என மொத்தம் 8 பேர் சென்னை கிண்டி கிங் கொரோனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை நேற்று மாலை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முழு கவச உடை அணிந்து நேரில் சென்று நலம் விசாரித்தார். உடன் சுகாதாரத் துறை செயலாளரும் இருந்தார்.

கர்நாடகா

இந்தியாவில் முதன் முறையாக ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்ட கர்நாடகாவில் புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன.

வணிக வளாகம், திரையரங்குகள், பூங்கா உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்ல தடுப்பூசியின் இரண்டு தவணையும் செலுத்தியிருக்க வேண்டும். பொது நிகழ்ச்சிகள், ஆர்ப்பாட்டம், அரசியல் நிகழ்ச்சிகள், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் 500 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது. கேரளா, மகாராஷ்டிரா ஆகிய வெளிமாநிலங்களில் இருந்து வருவோரும் கொரோனா நெகட்டிவ், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ்களை கொண்டுவர வேண்டும். அதுபோன்று கல்வித் துறையிலும் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்படுகிறது. ஜனவரி 15ஆம் தேதிவரை இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

-வினிதா

திமுகவில் இருந்து பாஜகவில் இணைவது இப்படித்தானா?

7 நிமிட வாசிப்பு

திமுகவில் இருந்து பாஜகவில் இணைவது இப்படித்தானா?

அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: உச்ச நீதிமன்றம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழுவுக்கு  தடையில்லை: உச்ச நீதிமன்றம்!

கொடநாடு வழக்கு - முதல்வர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?: சசிகலா

3 நிமிட வாசிப்பு

கொடநாடு வழக்கு - முதல்வர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?: சசிகலா

சனி 4 டிச 2021