மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 7 டிச 2021

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடுகளை தவிர்க்க, விடைத்தாள் ஏற்றிவரும் லாரிகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தி கண்காணிக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான பணியாளர்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் ஆண்டுதோறும் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் முன்கூட்டியே திட்ட அறிக்கை வெளியிடப்படும். கொரோனா காரணமாக குரூப்-2, குரூப்-4 தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது.

இதற்கிடையில் டிஎன்பிஎஸ்சி நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் , தமிழ் மொழிதேர்வை கட்டாயப்படுத்தி தமிழ்நாடு அரசு கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரசாணை வெளியிட்டது. அந்த சந்தோஷத்துடன், டிஎன்பிஎஸ்சி கால அட்டவணை எப்போது வெளியாகும் என அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று 2022ஆம் ஆண்டில் மேற்கொள்ள உள்ள பணி நியமனங்கள் போட்டித் தேர்வுகள் மற்றும் தேர்வு விதிமுறைகள் குறித்த திட்ட அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து இன்று(டிசம்பர் 7) சென்னை பிராட்வேயில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்தின் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “2022ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டது. குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணை 2022 பிப்ரவரியிலும், குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதத்திலும் வெளியாகும். அட்டவணை வெளியான 75 நாட்களுக்கு பிறகு தேர்வு நடைபெறும். அடுத்த ஆண்டில் மொத்தம் 32 தேர்வுகள் நடைபெறவுள்ளன.

தற்போதைய நிலவரப்படி, குரூப் 2 மற்றும் 2ஏ நிலை பதவிகளுக்கு 5831 காலி பணியிடங்களும், குரூப் 4 நிலை பதவிகளுக்கு 5255 பணியிடங்களும் காலியாக உள்ளன. இது தோராயமானதுதான். காலியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குரூப் 2 தேர்வுக்கான மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டம் வரும் வாரங்களில் இணையதளத்தில் வெளியாகும். தேர்வுக்கான அறிவிக்கப்படுவதற்கு முன், மாதிரி வினாத்தாள் வெளியிடப்படும்.

தேர்வில் முறைகேடுகளை தவிர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடுகள் நிகழாதவாறு ஓஎம்ஆர் தாள்கள், மை, விடைத்தாள் பாதுகாப்பு ஆகியவை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்வர்களுக்கு ஆதார் கார்டு பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஓஎம்ஆர் தாள்கள் புதிய முறையில் வடிவமைக்கப்படும். தேர்வின்போது கருப்பு மை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஓஎம்ஆர் விடைத்தாளில் உள்ள தேர்வரின் தனிப்பட்ட விவரத்தைக் கொண்டே விடைத்தாள்கள் திருத்தும் மையங்களுக்கு கொண்டு வரும் வழியில், விடைத்தாளை திருத்தி முறைகேடு செய்யப்பட்டது. அதனால் இனி ஓஎம்ஆர் விடைத்தாளில் உள்ள தேர்வரின் தனிப்பட்ட விவரத்தை தேர்வு முடிந்தபின் தனியாக பிரித்தெடுக்கப்படும்.தேர்வு எழுதுபவர்களுக்கு வழங்கப்படும் ஓஎம்ஆர் தாள் எண்ணைக் கொண்டு தாள் திருத்தப்படும்.

தேர்வு அறையிலேயே எத்தனை கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டது என்பதை உறுதி செய்ய தேர்வரும், தேர்வறை கண்காணிப்பாளரும் பதிலளிக்கப்பட்ட கேள்விகளின் மொத்த எண்ணிக்கையை குறிப்பிட்டு கையெழுத்து இட வேண்டும். டிஎன்பிஎஸ்சி விடைத்தாள் ஏற்றிவரும் லாரிகளை ஜிபிஎஸ் கருவி பொருத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும். முறைகேடு செய்தவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் யாரும் மீண்டும் டிஎன்பிஎஸ்சி துறைக்குள் கொண்டு வரப்படவில்லை.

குரூப்-4 தேர்வில் தமிழ்தாளில் 40 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே அடுத்த விடைத்தாள் திருத்தப்படும். தமிழ்தாளில் கூடுதல் மதிப்பெண் பெற்றால் அதுவும் கணக்கிடப்படும்” என்று கூறினார்.

-வினிதா

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

செவ்வாய் 7 டிச 2021