மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 7 டிச 2021

உட்கட்சி தேர்தலில் தேர்தல் ஆணையத்துக்கு என்ன பங்கு?

உட்கட்சி தேர்தலில் தேர்தல் ஆணையத்துக்கு என்ன பங்கு?

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் வழக்கில் தேர்தல் ஆணையத்தின் பங்கு என்ன என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தலை எதிர்த்து அக்கட்சியின் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி, தொடர்ந்த வழக்கில் தேர்தலுக்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்நிலையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி அதிமுக உறுப்பினரான ஓசூரைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், 'அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு டிசம்பர் 7ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கட்சி விதிப்படி 21 நாட்கள் அவகாசம் அளிக்கப்படாமல் தேர்தல் நடத்தப்படுவதால் தேர்தல் முடிவுகளை அறிவிக்கத் தடை விதிக்க வேண்டும்' என்று வலியுறுத்தியிருந்தார்.

'தேர்தலில் போட்டியிட யாருக்கும் வாய்ப்பு வழங்கவில்லை என்றும், 1.50 கோடி உறுப்பினர்கள் உள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவில்லை என்றும், போட்டியின்றி தேர்ந்தெடுக்க ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவரும் செயல்படுவதாகக் கூறி தேர்தல் ஆணையத்துக்குப் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும்’ குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு முன்பு மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர் பிரசாத் முறையீடு செய்தார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் நாளை (இன்று) விசாரிப்பதாகத் தெரிவித்தனர். பின்னர் மனுதாரர் தரப்பில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரையும் போட்டியின்றி தேர்வு செய்யப்போவதாக அறிவிக்கப் போகிறார்கள். எனவே வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மீண்டும் முறையீடு செய்யப்பட்டது.

இதையும் ஏற்க மறுத்த நீதிபதிகள் அவ்வாறு தேர்வு செய்யப்பட்டால் அதையும் எதிர்த்துக் கூடுதல் மனு தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தினர். இந்தச்சூழலில் நேற்று ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் போட்டியின்றி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராகத் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் ஜெயச்சந்திரன் தாக்கல் செய்த மனு இன்று (டிசம்பர் 7) தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, உட்கட்சி தேர்தலில் தேர்தல் ஆணையத்திற்கு என்ன பங்கு உள்ளது என்றும் எந்த பங்கும் இல்லாமல் தேர்தல் ஆணையத்தைச் சேர்த்தால் வழக்கு விசாரணைக்கு உகந்ததா என ஆராய வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதற்,கு மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் என்.ஜி.ஆர் பிரசாத், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி பதிவு செய்யப்பட்ட கட்சியில் நடந்த தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கவில்லை என்பதாலும் ஜனநாயகம் சம்பந்தப்பட்டுள்ளதாலும் வழக்கு விசாரணைக்கு உகந்தது. அரசியல் சாசனத்தின் ஜனநாயக உரிமையை மீறிச் செயல்படும் போது அதை எதிர்த்து வழக்கு தொடரலாம் என பிசிசிஐ வழக்கில் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

கட்சி அடிப்படை உறுப்பினர்களும் தேர்தலில் போட்டியிட அனுமதி எனத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்றும் தேர்தலுக்கு முந்தைய நாள் போட்டியின்றி இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் கூறினார்.

இதை விசாரித்த நீதிபதிகள் உட்கட்சி தேர்தல் தொடர்பான வழக்கில், இந்தியத் தேர்தல் ஆணையத்தைச் சேர்த்துள்ளதால் வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்த தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இந்த தேர்தல் குறித்து ஓபிஎஸ் கூறுகையில், “கட்சியின் அமைப்புத் தேர்தல் முறையாக நடைபெற ஆரம்பித்திருக்கிறது. ஒருங்கிணைப்பாளார், இணை ஒருங்கிணைப்பாளார் தேர்தல் கழக சட்டவிதியின் படி, தர்மத்தின் படி நடந்து முடிந்திருக்கிறது. பொதுவாகவே நீதிமன்ற தீர்ப்பை மதிப்பவன் நான். அதுபோன்று அதிமுக உறுப்பினர் அட்டைகளை உரியவர்களிடம் ஒப்படைக்கத் தலைமை கழகம் அறிவுறுத்தியுள்ளது” என்றார்.

-பிரியா

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

செவ்வாய் 7 டிச 2021