மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 8 டிச 2021

பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்ட மூதாட்டி: முதல்வர் கண்டனம்!

பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்ட மூதாட்டி: முதல்வர் கண்டனம்!

கன்னியாகுமரியில் மீன் விற்பனை செய்யும் பெண்ணை பேருந்திலிருந்து இறக்கி விட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே வாணியக்குடியைச் சேர்ந்தவர் செல்வமேரி. இவர் மீன் விற்பனை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் மீன் விற்பனை செய்துவிட்டு தன்னுடைய வீட்டுக்குச் செல்வதற்காக குளச்சல் பேருந்து நிலையத்தில் நாகர்கோவிலில் இருந்து கோடிமுனை செல்லும் பேருந்தில் ஏறினார். அப்போது “மீன் வித்துட்டு வர்றியா… நாறும்…இறங்கு... இறங்கு” என்று கூறி நடத்துநர் மூதாட்டி செல்வமேரியை பேருந்தில் இருந்து இறக்கிவிட்டுள்ளார்.

இதுகுறித்து மூதாட்டி, குளச்சல் பேருந்து நிலையத்தில் இருந்த நேரக் காப்பாளர் ஜெயக்குமாரிடம் புகார் செய்தார். ஆனால் அவரும் அதனை கண்டுகொள்ளவில்லை. “மீன் நாறுகிறது என்று சொல்லி பேருந்தில் ஏறிய பொம்பளைய இறக்கிவிடுவது என்ன நியாயம்? நான் எப்படி வாணியக்குடிக்கு நடந்து செல்வேன்?” என்று மூதாட்டி செல்வமேரி ஆதங்கத்துடன் கதறி கண்ணீர் விட்டு அழும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

இதையடுத்து, மூதாட்டி செல்வமேரியை பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட ஓட்டுநர் மைக்கேல், நடத்துநர் மணிகண்டன் மற்றும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நேரக் காப்பாளர் ஜெயக்குமார் ஆகிய மூன்று பேரையும் பணியிடை நீக்கம் செய்து நாகர்கோவில் அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் அரவிந்த் உத்தரவிட்டார் .

இதற்கிடையில் இதுகுறித்து தகவல் அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டரில், “குமரி மாவட்டத்தில், மீன் விற்பனை செய்து வந்த தாய் ஒருவரைப் பேருந்து நடத்துநர் இறக்கிவிட்டதாகக் கூறப்படும் நிகழ்வானது என்னை அதிர்ச்சி அடைய வைத்தது. மகளிர் மேம்பாட்டுக்காகக் கட்டணமில்லா உரிமைச்சீட்டை வழங்கி, அதை நடத்துநர்கள் திறம்படச் செயல்படுத்தி வரும் இக்காலத்தில், ஒரு நடத்துநரின் இச்செயல் கண்டிக்கத்தக்கதாக உள்ளது. எல்லோரும் சமம் என்ற பரந்த உள்ளத்துடன் நம் அனைவரது எண்ணமும் செயலும் அமைய வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ட்விட்டரில், “குமரி மாவட்டம் குளச்சல் பேருந்து நிலையத்தில் மூதாட்டி ஒருவர் பேருந்தில் இருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுநரால் இறக்கி விடப்பட்டதாக வெளியான செய்தியை அறிந்து உடனடியாக போக்குவரத்து துறை அலுவலர்களிடம் தகுந்த நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியதன் பெயரில் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக போக்குவரத்து துறையின் குமரி மாவட்ட துணை இயக்குநர் (இயக்கம் மற்றும் ஆய்வு) ஜெரோலின் மூதாட்டியை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி அதிகாரி ஜெரோலின், மூதாட்டி செல்வமேரியை நேரில் சென்று விசாரித்து, சம்பந்தப்பட்ட ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

அப்போது அந்த மூதாட்டி, “அவர்களுக்கு தண்டனை எல்லாம் கொடுக்க வேண்டாம். ஏதோ தெரியாமல் செய்துவிட்டார்கள். எனது மகன்களைப் போன்றுதான் அவர்களும். ஆனால், என்னைப் போன்று மற்றவர்கள் பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.

-வினிதா

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

புதன் 8 டிச 2021