மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 16 ஜன 2022

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

”தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக எங்கே சாலைகள் அமைக்கப்பட்டாலும் ஏற்கனவே உள்ள சாலை மட்டத்திலிருந்து அப்படியே உயர்த்திப் போடாமல், ஏற்கனவே அமைக்கப்பட்ட மேல் தளக் கட்டுமானத்தை சுரண்டி எடுத்துவிட்டு... அதே அளவுக்கு மேல் தளம் இட வேண்டும். இதனால் சாலைகள் மேலும் மேலும் உயரமாகி வீடுகளுக்குள் மழை நேரத்தில் தண்ணீர் செல்வதைத் தடுக்கும்” என்று திமுக ஆட்சி அமைந்த புதிதில் அதாவது 12-05-2021அன்று தமிழகத்தின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு உத்தரவு பிறப்பித்தார்.

ஆனால் ஆட்சி அமைந்து ஏழு மாதங்கள் நிறைவுபெற்ற பிறகும் தலைமைச் செயலாளரின் உத்தரவை சாலை ஒப்பந்த தாரர்கள் மதிப்பதே இல்லை. இந்த நிலையில்தான் தன் உத்தரவை மீறி போடப்பட்ட சாலையை தலைமைச் செயலாளரே நேரடியாக பார்வையிட்டு அகற்றியிருக்கிறார்.

சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட குரோம்பேட்டை ராதாநகரில் உள்ள கட்டபொம்மன் சாலையில் தான் 14 ஆம் தேதி திடீர் ஆய்வு மேற்கொண்டிருக்கிறார் தலைமைச் செயலாளர் இறையன்பு.

இதுபற்றி குரோம்பேட்டை அறப்போர் இயக்க நிர்வாகியான டேவிட் மனோகரிடம் பேசினோம்.

“குரோம்பேட்டை ராதாநகரில் இருக்கும் கட்டபொம்மன் தெருவில் டிசம்பர் 30 ஆம் தேதி இரவு மழை பெய்துகொண்டிருக்கும்போதே ரோடு போட்டார்கள். அது தலைமைச் செயலாளரின் உத்தரவுக்கு எதிராக இருப்பதை அறிந்து டிசம்பர் 31 ஆம் தேதி அறப்போர் குரோம்பேட் ஃபேஸ்புக் போஸ்ட் போட்டோம். சாலைபோடும்போது ஏற்கனவே அமைக்கப்பட்ட மேல் தள கட்டுமானத்தை சுரண்டி எடுத்துவிட்டு அதன் பிறகே சாலை அமைக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் உத்தரவையும் இணைத்து, வழக்கம்போல அனைத்து அதிகாரிகளுக்கும் அனுப்பினோம். முனிசிபல் இன்ஜினியர் மேடத்தை செல்லில் அழைத்தும் கூறினேன். ‘சரி சார்...நான் ரோட்டை எடுத்துட்டு போடச் சொல்றேன்’என்று சொன்னார்கள். சுமார் பத்து நாட்களாக எந்த நடவடிக்கையும் இல்லை. ஜனவரி 12ஆம் தேதி கட்டபொம்மன் தெருவில் பழையபடியே ரோடு வேலைகளை முடித்துவிட்டுப் போய்விட்டார்கள்.

ஏற்கனவே இத்தனை அதிகாரிகளுக்கு புகார் கொடுத்து, போன் செய்து சொல்லியும் பழையபடியே சாலையை உயர்த்திப் போட்டுவிட்டார்கள் என்று மீண்டும் அறப்போர் பேஜில் 13 ஆம் தேதி போட்டோக்களோடு போஸ்ட் போட்டோம். அன்று இரவு 9.30 மணியளவில் தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் இருந்து இதுபற்றிய விவரங்களை கேட்கிறார்கள் என்று எங்கள் அறப்போர் ஒருங்கிணைப்பாளர் கேட்க, நான் கூடுதல் விவரங்கள் போட்டோக்களை அனுப்பி வைத்தேன்.

ஜனவரி 14 ஆம் தேதி பொங்கலன்று காலை எட்டு மணிக்கெல்லாம் நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் பொன்னையா போன் செய்தார். ‘உங்க புகார் பார்த்தோம். இது மாதிரி ஆயிடுச்சு. நான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சஸ்பெண்ட் பண்ண சொல்லியிருக்கேன். கான்ட்ராக்டர் கிட்ட புதுசா ரோடு போட சொல்லியிருக்கேன்’ என்று கூறினார். கொஞ்ச நேரத்தில் தாம்பரம் மாநகராட்சி கமிஷனரும் போன் செய்து இதையே தான் கூறினார்.

இந்த நிலையில்தான் அன்று மதியம் 4 மணிக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கட்டபொம்மன் தெருவுக்கே அதிகாரிகளோடு வந்துவிட்டார். அவரோடு நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, தாம்பரம் மாநகராட்சி ஆணையர், நகராட்சி பொறியாளர், நகராட்சி துணைப் பொறியாளர் என சம்பந்தப்பட்ட அத்தனை அதிகாரிகளும் கட்டபொம்மன் தெருவுக்கு வந்துவிட்டனர். கட்டபொம்மன் தெரு சாலையை மட்டுமல்லாது அருகே மற்ற சாலைகளையும் ஆய்வு செய்தனர்.

அங்கே பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் நடந்தே சென்று அந்த சாலையை ஆய்வு செய்த தலைமைச் செயலாளர், ‘இதையெல்லாம் எடுத்துட்டு ஆர்டர் படி மறுபடியும் ரோடு போடச் சொல்லுங்க’ என்று சொல்ல எம்.இ. தலையசைத்தார். அதன் பின் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார் தலைமைச் செயலாளர்.

அவரது உத்தரவுப்படியே 14 ஆம் தேதியே உயர்த்திப் போடப்பட்ட சாலையை சுரண்டி எடுக்கும்பணியைத் தொடங்கி நேற்று அதை முடித்திருக்கிறார்கள். அறப்போரின் கோரிக்கையை பரிசீலித்து களத்தில் இறங்கி ஆய்வு செய்த தலைமைச் செயலாளருக்கு நன்றிகள்.

இது முதல் வெற்றி. தமிழகம் முழுவதும் எங்கே சாலை உயரங்கள் அதிகரிக்கப்பட்டாலும் நாம் ஒன்றாக இணைந்து எதிர்த்து குரல் கொடுத்தால் அதற்கு தீர்வு கிடைக்கும் என்பதற்கு சரியான உதாரணம் இது. புதிய சாலையை அகற்றி மீண்டும் பழைய சாலை உயரத்திற்கு புதிய சாலை அமைத்தால் மட்டுமே இந்த விஷயத்தில் முழுமையான வெற்றி கிடைக்கும். அது வரை அறப்போர் தொடரும்” என்கிறார் அறப்போர் இயக்க நிர்வாகியான டேவிட் மனோகர்.

கட்டபொம்மன் தெருவில் நீண்ட காலமாக வசிக்கும் சில சீனியர்களிடம் பேசினோம். “ பல வருடங்களுக்கு முன்பு இந்தத் தெருவில்தான் தலைமைச் செயலாளர் இறையன்பு வசித்து வந்தார். இங்கே இருந்த அவரது உறவினர் வீட்டில் தங்கிதான் அவர் ஐஏஸ் பரிட்சைக்கு தயார் செய்து வந்தார். அப்போது இதே சாலையில் நடந்து சென்று வருவார். இன்று தலைமைச் செயலாளர் ஆனபோதும் கட்டபொம்மன் தெருவை மறக்காமல் வந்து நடவடிக்கை எடுத்திருக்கிறார்” என்கிறார்கள்.

தலைமைச் செயலாளரே களத்தில் இறங்கி ஒரு சிறிய தெருவுக்கு வந்து ஆய்வு செய்கிறார் என்பது அரசுக்கு பெருமையான விஷயமாக இருக்கலாம். ஆனால் அவர் ஏன் அவ்வாறு வருகிறார்? அவரது உத்தரவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாருமே நிறைவேற்றவில்லை என்பதால்தான் அவர் நேரில் ஆய்வு செய்ய வந்திருக்கிறார் என்பதே நிஜம்!

-ஆரா

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை! ...

3 நிமிட வாசிப்பு

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை!

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ...

5 நிமிட வாசிப்பு

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ஆதீனம்!

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

4 நிமிட வாசிப்பு

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

ஞாயிறு 16 ஜன 2022