மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 17 ஜன 2022

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

மிதமாக பெய்த மழையால் அவ்வப்போது மின்சாரம் போவதும் வருவதுமாக இருந்தது. அதனால், வைஃபை இணைப்பில் சிக்கல் ஏற்பட, மொபைல் டேட்டாவை ஆன் செய்ததும் இன்ஸ்டா கிராம் சில போட்டோக்களை அனுப்பியது.

தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஜனவரி 16 ஆம் தேதி காணும் பொங்கல் தினத்தன்று திடீரென திருப்பதி சென்று ஏழுமலையானை குடும்பத்தோடு வழிபட்டார். தமிழிசையின் திருப்பதி விசிட் போட்டோக்களைதான் இன்ஸ்டாகிராம் அனுப்பியிருந்தது.

ஆளுநர் தமிழிசை கோயிலுக்கு செல்வது புதிதல்லவே என்ன திடீரென இந்த போட்டோக்களை அனுப்பக் காரணம் என்ன? கேள்வியை டெக்ஸ்ட் செய்துகொண்டிருக்கும்போதே வாட்ஸ் அப் மெசேஜ் வந்தது.

“இந்திய குடியரசுத் தலைவராக தற்போது பதவி வகிக்கும் ராம் நாத் கோவிந்தின் பதவிக் காலம் 2022 ஜூலை மாதத்தோடு முடிவடைகிறது. இந்நிலையில் அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்ற கேள்வி தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தற்போதைய துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தீவிரமான அரசியல்வாதியாக இருந்த நிலையில்தான் திடீரென துணைக் குடியரசுத் தலைவராக பாஜகவால் ஆக்கப்பட்டார். தன்னை பாஜக துணைக் குடியரசுத் தலைவருக்கு முன்னிறுத்த முடிவு செய்தபோதே அதை எதிர்த்தார் வெங்கையா நாயுடு. தான் தீவிரமான அரசியலில் இருந்துகொண்டிருக்கும்போதே துணைக் குடியரசுத் தலைவர் என்ற அலங்காரப் பதவியை விரும்பவில்லை என்பதை அவர் பாஜக தலைமைக்கு எடுத்துக் கூறினார். ராஜ்நாத் சிங் போன்றவர்கள் மூலமும் அழுத்தம் கொடுத்தார்.

ஆனால் வாஜ்பாய்க்கு நெருக்கமான டீமைச் சேர்ந்த வெங்கையா போன்ற சீனியர்கள் கட்சி அரசியலில் பலப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே மோடியும் அமித் ஷாவும் அன்று அவரை துணைக் குடியரசுத் தலைவர் ஆக்கினார்கள். அப்போது, ‘அடுத்த குடியரசுத் தலைவர் நீங்கள்தான்’ என்று அவருக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டதாகவும் டெல்லி அரசியல் அரங்கில் பேசப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் வசிக்கும் வெங்கையா நாயுடுவின் குடும்பத்தாரும் தங்களுக்கு நெருக்கமான குடும்ப நண்பர்களிடம், ‘அடுத்து குடியரசுத் தலைவராகி விடுவார்’ என்றே சொல்லி வருகிறார்கள்.

இந்த நிலையில்தான் இந்த வருட மத்தியில் குடியரசுத் தலைவர் தேர்தல் வருகிறது. குடியரசுத் தலைவர் தேர்தலில் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும். அந்த அடிப்படையில் பார்த்தால் உத்திரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநில சட்டமன்றத் தேர்தல்கள் பிப்ரவரி, மார்ச்சில் வருகின்றன. மேலும் இந்த வருடத்தில் 75 ராஜ்யசபா இடங்களுக்கும் ஒன்றன் பின் ஒன்றாக தேர்தல்கள் வருகின்றன. இந்த நிலையில் அகில இந்திய அளவில் பாஜகவின் எம்.எல்.ஏ.க்கள், எம்பிக்கள் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இப்போதைய நிலவரப்படி மேற்கு வங்காளம், தெலங்கானா, தமிழ்நாடு, ஒடிசா, ஆந்திரா, கேரளா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், டெல்லி போன்ற மாநிலங்களில் பாஜகவின் எதிர்க்கட்சிகள் ஆட்சி நடத்துகின்றன. இந்த மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், எம்,பிக்களின் வாக்குகள் குடியரசுத் தலைவர் தேர்தலில் முக்கியத்துவம் பெறுகின்றன.

இந்த நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக முன்னர் எடுத்த முடிவின்படி வெங்கையா நாயுடுவை முன்னிறுத்துமா என்ற விவாதங்களுக்கு இடையே, சில நாட்களாகவே டெல்லியில் இருந்து இன்னொரு தகவலும் கசிகிறது. தற்போது தெலங்கானா ஆளுநராக இருக்கும் தமிழிசை சௌந்தர் ராஜனை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்த பாஜக மேலிடம் பரிசீலித்து வருகிறது என்பதுதான் அந்த தகவல்.

பிரதீபா பாட்டிலுக்குப் பிறகு ஒரு பெண்ணை குடியரசுத் தலைவர் ஆக்கலாம், அதுவும் தமிழிசையை குடியரசுத் தலைவர் வேட்பாளராக்கினால் தமிழ்நாட்டின் மொத்த வாக்குகளும் மண்ணின் மைந்தர் என்ற அடிப்படையில் தமிழிசைக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் பாஜகவை கடுமையாக எதிர்க்கும் தெலங்கானாவின் முதல்வர் சந்திரசேகர ராவ், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஆதரவு தமிழிசைக்கு கிடைக்கலாம். மற்ற மாநிலங்களை பாஜகவின் பலம், தமிழிசையின் தனிப்பட்ட இமேஜை வைத்து சம்மதிக்க வைக்கலாம் என்று பாஜக தலைமையில் விவாதங்கள் நடைபெற்று வருவதாக அக்கட்சியிலேயே கூறுகின்றனர். எப்படி இருந்தாலும் ஐந்து மாநில தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரே குடியரசுத் தலைவர் தேர்தல் பற்றிய வெளிப்படையான நடவடிக்கைகளில் பாஜக இறங்கும்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் சென்றது வாட்ஸ் அப்.

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை! ...

3 நிமிட வாசிப்பு

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை!

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ...

5 நிமிட வாசிப்பு

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ஆதீனம்!

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

4 நிமிட வாசிப்பு

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

திங்கள் 17 ஜன 2022