மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 17 ஜன 2022

உத்திரப் பிரதேசம் ஒரு மாநிலமாக மாற வேண்டும்!

உத்திரப் பிரதேசம் ஒரு மாநிலமாக மாற வேண்டும்!

ராஜன் குறை

ஒரு மாதமாகவே ஊடகங்களில் ”ஐந்து மாநில தேர்தல்”, ”ஐந்து மாநில தேர்தல்” என்று கூறும்போது சிரிக்கத் தோன்றுகிறது. ஒவ்வொரு மாநிலத்தின் மக்களுக்கும் அந்த மாநிலத்தில் நடக்கும் தேர்தல் முக்கியமானதுதான். ஆனால் அந்த மாநிலத்திற்கு வெளியே இருப்பவர்களுக்கு அந்த தேர்தல்கள் அடுத்த ஒன்றிய அரசாங்கத்தை கைப்பற்றப்போவது யார் என்பதை கட்டியம் கூறும் அறிகுறிகளாகத்தான் தோன்றும். அந்த வகையில் ஐந்து மாநிலங்கள் என்று சொல்வது சிரிப்பை வரவழைக்கிறது. உத்திரப் பிரதேச தேர்தலின் முக்கியத்துவத்திற்கு முன்னால் மற்ற மாநிலங்களுக்கு “தேசிய” அளவில் முக்கியத்துவம் எதுவும் கிடையாது. முதல் காரணம் எண்ணிக்கை. அடுத்த மாதம் தேர்தலை சந்திக்கும் ஒவ்வொரு மாநிலமும் எத்தனை நாடாளுமன்ற தொகுதிகளை கொண்டிருக்கிறது என்று பாருங்கள்.

உத்திரப் பிரதேசம் 80 தொகுதிகள்

பஞ்சாப் 13 தொகுதிகள்

உத்திராகண்ட் 5 தொகுதிகள்

மணிப்பூர் 2 தொகுதிகள்

கோவா 2 தொகுதிகள்

மற்ற நான்கு மாநிலங்களை கூட்டினால் வரும் மொத்த எண்ணிக்கை கூட (22 தொகுதிகள்) உத்திர பிரதேசத்தின் கால் பங்குதான் வருகிறது. இந்திய அரசியலின் முக்கிய பிரச்சினை மாநிலங்களிடையே நிலவும் இவ்வகையான சமச்சீரற்ற தன்மைதான். உத்திரப் பிரதேசம் வெகுகாலமாக நாடாளுமன்ற பெரும்பான்மையை தீர்மானிக்கும் சக்தியாக விளங்கி வருகிறது. அதற்கு அடுத்த இரண்டாவது பெரிய மாநிலம் மஹாராஷ்டிரம். ஆனால் அதன் பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 48 தான் (எவ்வளவு பெரிய இடைவெளி; 80 எங்கே? 48 எங்கே?). மேற்கு வங்கம் மூன்றாவது: 41. பீஹார் நான்காவது: 40. தமிழகம் ஐந்தாவது: 39. இப்படி பிற பெரிய மாநிலங்கள் எல்லாம் 40 என்ற அளவில் இருக்க, உத்திரப் பிரதேசம் மட்டும் 80 தொகுதிகளை கொண்டுள்ளது. இது மாநிலங்களின் அரசியல் ஆற்றலில் சமமற்ற சூழலை உருவாக்குகிறது.

இந்த அபத்தமான சமமின்மை பிற மாநிலங்களுக்கு பிரச்சினை என்றாலும், இந்த அரசியல் ஆற்றலால் உத்திரப் பிரதேசம் பலனடைந்துள்ளதா என்று பார்த்தால், அப்படியும் நடந்தது போல தெரியவில்லை. அது வளர்ச்சியில் பின் தங்கிய மாநிலமாகத்தான் உள்ளது. குறிப்பாக மக்கள் நல வளர்ச்சிக் குறியீடுகளில் அது மிகவும் பின்தங்கியுள்ளது. இது ஒரு முக்கியமான முரண்பாடு. இதன் காரணங்கள் என்ன என்பதை சிந்திக்க வேண்டும். ஒரு வேளை தன்னுடைய மக்கள் தொகையாலும், பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையாலும் உத்திரப் பிரதேசம், அதாவது அதன் ஆதிக்க சக்திகள் உருவாக்கும் எண்ணத்தில், தானே தேசத்தின் மையம் என்று எண்ணிக்கொள்கிறதா என்பது கேள்வி. பிற மாநிலங்களைப் போல தேசத்தின் அங்கமாக தன்னை கருதிக்கொள்ளாமல், தானே தேசத்தின் மையம், பிற மாநிலங்களெல்லாம் அதனுடன் சேர்க்கப்பட்டுள்ள உறுப்புகள் என்று எண்ணிக்கொண்டதா, அதனால் அதன் அரசியல் மாநில வளர்ச்சியை முன்னெடுக்கவில்லையா என்ற கேள்வி எழுகிறது.

இப்படி ஒரு மாநிலத்தை ஒரு நபர் போல உருவகப்படுத்தி பேசுவது அதன் அரசியல் சொல்லாடல்கள் கட்டமைக்கும் தன்னுணர்வை குறிப்பிடுகிறது. உதாரணமாக தமிழ் நாடு தன்னை தமிழ் நாடு என்றும், இந்தியாவின் ஒரு மாநிலம் என்றும் எண்ணிக்கொள்வது இயல்பாக உள்ளது. ஆனால் உத்திரப் பிரதேசம் என்றால் பெயரிலேயே ”நாட்டின் வடபகுதி” என்று பொருள் வருகிறது. அதன் அரசியல் அடையாளமே இந்தியாவின் வடபகுதியாக இருப்பதாக உள்ளது. இது போலத்தான் மத்திய பிரதேசமும். நாட்டின் மத்தியில் உள்ள பிரதேசம் என்பதுதான் அதன் அடையாளம். இப்படியான ஒரு அடையாளம் அந்த மாநில மக்களுக்கு எத்தகைய அரசியல் தன்னுணர்வை தருகிறது, இதன் அரசியல் விளைவுகள் என்ன என்பதுதான் நாம் எழுப்ப வேண்டிய கேள்வி.

தேசிய அரசியலும், மாநில அரசியலும்

தேசிய அரசியல் என்பது எப்போதுமே உயர்தட்டு மக்களின், பெரும் நிலச்சுவான்தார்களின், பணக்காரர்களின் அரசியல்; பெருமுதலீட்டியத்தின் அரசியல். மாநில அரசியல் என்பதுதான் சிறு, குறு முதலாளிகளின், தொழிலாளர்களின், அடித்தட்டு மக்களின் அரசியல். ஒன்றிய அரசிடம் அதிகாரங்கள் குவிக்கப்படுவதற்கும், மாநில அரசின் அதிகாரங்கள் குறுக்கப்படுவதற்கும் காரணம் இதுதான். அதிகார குவிப்பு என்பதும், முதலீட்டிய குவிப்பு என்பதும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். கடந்த எட்டாண்டுகளில், நரேந்திர மோடி ஆட்சியில், கெளதம் அதானியின் வளர்ச்சி எத்தகையது என்று பார்த்தால் நான் சொல்வது புரிந்துவிடும். நாட்டின் துறைமுகங்கள், விமான நிலையங்கள், சாலைகள் என அனைத்தையும் அவரிடம் ஒப்படைக்க துடிக்கிறது ஒன்றிய அரசு. அது மட்டுமல்ல, தேசத்தின் அனைத்து உற்பத்தி, விநியோகம் விற்பனை ஆகியவற்றை அதானியும், அம்பானியும் கட்டுப்படுத்த வேண்டும் என்பதுதான் பாரதீய ஜனதாவின் இலட்சியம் என தோன்றுகிறது.

காங்கிரஸ் கட்சியும் தேசிய அரசியல், முதலீட்டிய ஆதரவு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டிருந்தாலும் அவற்றை மக்கள் நலன்கள், மாநில உரிமைகள், ஆகியவற்றுடன் சமநிலையில் பேணவேண்டும் என்ற எண்ணம் கொண்ட கட்சி எனலாம். ஏனெனில் காங்கிரஸ் கட்சியினுள் வெகு நாள் பயின்று வந்த சோஷலிஸ சிந்தனையும் செயல்பட்டுக் கொண்டுதான் உள்ளது. ஆனால் பாரதீய ஜனதா கட்சி துவக்கத்திலிருந்தே இந்து அடையாள தேசியம் என்ற பாசிச தேசியத்தை தீவிரமாக வளர்த்து அதன் துணையுடன் பெருமுதலீட்டிய குவிப்பிற்கு வழிவகுக்கும் நோக்கம் கொண்டது. காங்கிரஸ் வங்கிகளை தேசிய மயமாக்கினால், பாஜக தனியார் மயமாக்கும். இன்னும் பல உதாரணங்களை சொல்லலாம்.

மாநில அரசியல் என்பது அதன் இயல்பிலேயே மக்கள் நல அரசாட்சியை அடிப்படையாகக் கொண்டது. அதிகார பரவலின் களமாக விளங்கக் கூடியது. வளர்ச்சியை பரவலாக்கக் கூடியது. பாரதீய ஜனதாவின் பாசிச தேசியத்திற்கும், மாநில அரசியலின் இன்றியமையாத மக்களாட்சி உள்ளீட்டிற்கும் உள்ள முரண் தீவிரமானது. இதை மறைக்கத்தான் மாநில அடையாளம், மாநில கட்சிகள் ஆகியவற்றை பிரிவினை சக்திகளாக, தேச விரோத சக்திகளாக சித்தரிக்க முனைகின்றன பாஜக-வும் அதன் ஆங்கில ஊடக ஊதுகுழல்களும்.

உதாரணமாக திராவிட கட்சிகளே தங்களுக்குள் போட்டியிட்டு ஐம்பதாண்டுகளாக ஆட்சி செய்யும் தமிழகம் தேசிய நீரோட்டத்திலிருந்து பிரிந்து செல்கிறது என்று சோ ராமசாமி வழித்தோன்றல்கள் புலம்புவதை பார்த்தால், ஏதோ தமிழகம் இந்திய தீபகற்பத்திலிருந்து நகர்ந்து அண்டார்ட்டிகா நோக்கி செல்வது போல தோன்றும். தமிழர்கள் இந்தியா முழுவதும் பல்வேறு தொழில்கள், வர்த்தகங்களில் ஈடுபட்டுள்ளார்கள்; வங்கிகளில், மத்திய அரசு பணிகளில் இருக்கிறார்கள். இந்தி திரைப்படங்களை தயாரிக்கிறார்கள், இயக்குகிறார்கள், ஒளிப்பதிவு செய்கிறார்கள், அவற்றில் நடிக்கிறார்கள். தமிழர்களை நீக்கிவிட்டு இந்தியாவின் எந்த துறையின் வளர்ச்சியையும் பேச முடியாது. ஆனால் அதே சமயம் திராவிட ஆட்சி தமிழகத்தின் வளர்ச்சியை பரவலான சமூக வளர்ச்சியுடன் பிணைத்துள்ளது. மக்கள் நலத் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறது. இதுதான் வித்தியாசம்.

உத்திரப் பிரதேசம் சந்திக்கும் நெருக்கடி

துவக்கத்திலிருந்தே உத்திரப் பிரதேசத்தில் மாநில கட்சிகள் வளராதது மட்டுமல்ல, காங்கிரஸிலேயே கூட மாநில தலைவர்கள் என்று யாரும் நிலைக்கவில்லை. பெரும்பாலான தலைவர்கள் தேசிய அரசியல் அடையாளத்துடன் இயங்கினர். முதலமைச்சர்களாக யாரும் நீடித்து ஆட்சி செய்யவில்லை. பகுகுணா, வி.பி.சிங் என நாமறிந்த தலைவர்கள்கூட இரண்டு ஆண்டு காலம்தான் முதல்வர் பதவியில் இருந்துள்ளனர். ஒப்பிட்டு பார்த்தால், தமிழகத்தில் காங்கிரஸிலேயே கூட காமராஜர் என்று தெளிவான மாநில அடையாளத்துடன் ஒரு வெகுஜன தலைவர் உருவானது போல உத்திரப் பிரதேசத்தில் நிகழவில்லை. உத்திர பிரதேசத்தை சேர்ந்தவர்களே பிரதமராக இருந்ததால் மாநிலமே இந்தியா போல உணர்ந்திருக்கலாம். இதற்கு வரலாற்றுப் பின்னணியும் உள்ளது.

உத்திரப் பிரதேச மாநில உருவாக்கமே பிரிட்டிஷ் ஆட்சியின் நிர்வாக வசதிக்காகத்தான் நிகழ்ந்துள்ளது. யுனைடட் புரொவின்ஸ் ஆஃப் ஆக்ரா அண்ட் அவத் என்ற பெயரில் பிரிட்டிஷ்காரர்களால் உருவாக்கப்படு பின்னர் சுருக்கமாக யுனைடட் புரொவின்ஸ் என்று மாற்றப்பட்ட நிர்வாகப்பகுதி, இந்திய சுதந்திரத்திற்குப் பின்னால் உத்திர பிரதேசம் என்று மாற்றப்பட்டுவிட்டது. வரலாற்றுரீதியாகவோ, மொழி, பண்பாட்டு அடிப்படையிலோ, புவியியலாகவோ மக்களை ஒருங்கிணைக்கக் கூடிய அம்சங்கள் அற்ற ஒரு பிரதேசமாகவே இந்த மாநிலம் உருவாகியுள்ளது. இன்று பதினெட்டு நிர்வாகப் பகுதிகளில் (டிவிஷன்ஸ்) எழுபத்தைந்து மாவட்டங்களையும், இருபது கோடி மக்களையும் கொண்ட, நெல்லிக்காய் சாக்குமூட்டையாகவே இந்த மாநிலம் விளங்குகிறது. எல்லா மக்களும் இந்தி கற்றாலும் பேசினாலும், அவர்களுடைய பாரம்பர்ய பேச்சு மொழியாக அவதி, பிரஜ்பாஷா, புந்தெலி, போஜ்பூரி என்று இருபத்தொன்பது மொழிகள் உள்ளன. இவை இந்தி மொழி என்ற அடையாளத்திற்குள் வரும் பேச்சுவழக்குகளா (dialects) அல்லது தனித்தனி மொழிகளா என்பது நீண்ட விவாதத்திற்கு உரியது.

இதை புரிந்துகொண்டு அவத், புந்தேல்கண்ட் என்று பாரம்பர்ய அடையாளங்களுடன் சிறிய மாநிலங்களை உருவாக்கியிருந்தால் மாநில அரசியல் தன்னுணர்வு வலுவடைந்திருக்கும். அவ்வாறு செய்யாமல் உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம் என்று கூறு போட்டதால் மாநில அரசியல் தன்னுணர்வு உருவாவது மிகவும் சவாலாக இருக்கிறது. பிரேர்ணா சிங் போன்ற ஒப்பீட்டியல் அரசியல் ஆய்வாளர்கள் மாநில தன்னுணர்வு என்பது அரசியல் பங்கேற்பிற்கும், அதிகார பரவலுக்கும், பரவலான சமூக வளர்ச்சிக்கும் அவசியமானது என்பதை கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுடன் வடக்கே இந்தி அடையாளத்தில் தொகுக்கப்பட்ட மாநிலங்களை ஒப்பிட்டு கூறுவது இங்கு கருதற்பாலது. கேரளாவில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான கூட்டணிகள் ஆண்டாலும், அங்கே அரசியல் முழுவதும் மாநில தன்மை கொண்டது; மாநிலத்தின் தனித்துவத்தை முன்னிறுத்தியது எனலாம்.

மண்டலுக்கு பின் உருவான மாநில அரசியல்

ராம் மனோஹர் லோஹியா போன்ற பிற்படுத்தப்பட்டோர் நலன்களை பேசிய தலைவர்கள் போட்ட விதை, வி.பி.சிங் மண்டல் கமிஷனை நடைமுறை படுத்தியபிறகே உத்திர பிரதேச அரசியலின் அடிப்படையாக மாறியதை காண முடிகிறது. தொண்ணூறுகளின் துவக்கத்தில் முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சியும், கன்ஷிராமின் பகுஜன் சமாஜ் கட்சியும் முறையே பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும், தலித் தொகுதிகளையும் வெற்றிகரமாக அரசியல் அணிகளாக்கின.

இதற்கு எதிர்முனையில் அயோத்தி ராமர் கோயில் பிரச்சினையை கையிலெடுத்த பாரதீய ஜனதா கட்சி இந்து-முஸ்லீம் சமூக விரோதத்தை வைத்து வெறுப்பரசியல் செய்து மக்களை பாசிச அணிதிரட்டலுக்கு உட்படுத்தியது. மண்டலா, மந்திரா என்ற கோஷம் உருவானது. உத்திர பிரதேச மாநிலத்தின் கலாசார வரலாற்றில் முக்கிய அங்கமாகிய இஸ்லாமிய கலாசார மேலடுக்கு, பிரிவினைக்கு பிறகு பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்ததால் உருவான வெற்றிடமும், பிரிவினையின் வன்முறை ஏற்படுத்திய சமூக முரண்களும் பாரதீய ஜனதாவிற்கு மதவாத அடித்தளம் அமைக்க கூடுதல் உதவி எனலாம். இதன் இணை நிகழ்வாக, 1991-ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கொலையுண்ட பின், காங்கிரஸ் மெள்ள, மெள்ள தேய்வுற்று அதன் ஆதரவு தளம் மிகவும் குறுகிவிட்டதும் பாரதீய ஜனதாவின் வளர்ச்சிக்கு உதவியது.

அதனால் இந்தியாவின் வேறெந்த மாநிலத்திலும் காணமுடியாத ஒரு முக்கியமான அரசியல் மோதல் உத்திர பிரதேசத்தில் உருவாகியுள்ளது. பிற்படுத்தப்பட்ட சமூகங்களை, சிறுபான்மையினரை அணியாகக் கொண்ட அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி தலைமையிலான கூட்டணிக்கும், நரேந்திர மோடி, யோகி ஆதித்தியநாத் ஆகிய இந்து அடையாள தேசிய பாசிச சக்திகளுக்குமான ஒரு மோதலாக உத்திர பிரதேச தேர்தல் களம் உருவாகியுள்ளது.

இயல்பாகவே மாநில அடையாளமாக தன்னுணர்வு பெறாத மாநிலத்தில் மாநில அரசியல் சக்திகளை நிலை நிறுத்தும் சவாலை அகிலேஷ் யாதவ் சந்திக்கிறார். அவர் கடந்த ஆட்சிக் காலத்தில் முன்னெடுத்த மக்கள் நல திட்டங்கள் அவருக்கு ஆதரவாக இருக்க வாய்ப்புள்ளது. மாநில உணர்வுக்கு மாற்றாக தன்னை இந்தியாவின் மையமாகக் காணும் மனமயக்கம் கொண்ட ஆதிக்க சக்திகளை, இந்துத்துவ அரசியல் மூலம் அணிதிரட்டும் சாத்தியத்துடன் யோகி ஆதித்ய நாத்தும், நரேந்திர மோடியும் விளங்குகிறார்கள்.

உத்திரப் பிரதேசம் தன்னை ஒரு மாநிலமாக உணருமா, ஒரு மாநிலமாக மாற்றிக்கொள்ளுமா என்பது இந்திய வரலாறு சந்திக்கும் முக்கிய கேள்வி என்றுதான் தோன்றுகிறது.

கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: [email protected]

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை! ...

3 நிமிட வாசிப்பு

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை!

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ...

5 நிமிட வாசிப்பு

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ஆதீனம்!

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

4 நிமிட வாசிப்பு

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

திங்கள் 17 ஜன 2022