மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 21 ஜன 2022

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

வைஃபை ஆன் செய்ததும், வாட்ஸ் அப் ஆன் லைனில் இருந்தது. ஒரு வாய்ஸ் மெசேஜ் வந்திருந்தது. ‘அண்ணா சொகமா இருக்கியளா? தெக்க மேயர் ரேஸ்ல கனிமொழிக்கும் உதயநிதிக்கும் ஒரே ஹீட்டா இருக்காம்லே... கொஞ்சம் விசாரிங்களே...’ என்றது அந்த தூத்துக்குடி ஆண் குரல்.

அதன்படியே விசாரித்து வாட்ஸ் அப்பே மெசேஜை டைப் செய்தது.

"நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மறைமுகத் தேர்தலாகவே நடக்க இருக்கிறது. மாநகர மேயர்களை, தான் 96 இல் தேர்ந்தெடுக்கப்பட்டது போல மக்களே தேர்ந்தெடுக்கவேண்டும் என்றுதான் முதல்வர் ஸ்டாலின் ஆரம்பத்தில் விரும்பினார். ஆனால் சொல்லிவைத்தாற்போல அனைத்து அமைச்சர்களும் முதல்வரிடம், ‘நேரடித் தேர்தலில் ரிஸ்க் அதிகம். அதனால் மறைமுகத் தேர்தலே வைக்கலாம்’ என்று வலியுறுத்தினார்கள். நேரடியாக மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டால் அமைச்சர்களான தங்களின் பவர் பாலிடிக்ஸ் தத்தமது மாவட்டங்களில் குறைந்துவிடும் என்பதே அமைச்சர்களின் அடிமனசு. இதைப் புரிந்துகொண்ட முதல்வரும் மறைமுகத் தேர்தலையே நடத்த முடிவு செய்தார்.

இப்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் நகராட்சி, மாநகராட்சித் தலைவர் பதவிகளை அந்தந்த மாவட்டத்திலுள்ள அமைச்சர்கள் தத்தமது ஆதரவாளர்களுக்கு பெற்றுத் தர தீவிரமாக இருக்கிறார்கள். இதன் உச்சகட்டமாக தூத்துக்குடி மாநகராட்சித் தேர்தலில் மேயர் யார் என்பதில் அத்தொகுதி எம்பியான கனிமொழிக்கும், இளைஞரணிச் செயலாளரான உதயநிதிக்கும் சைலன்ட் பந்தயம் நடந்துகொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள் திமுக மேல்மட்ட வட்டாரத்தில். ஏற்கனவே உறுப்பினர் சேர்க்கை விவகாரத்தில் உதயநிதிக்கு எதிராக தனது நிலைப்பாட்டை அறிக்கையாகவே வெளியிட்டார் கனிமொழி.

அதாவது 18 வயது முதல் 30 வயது வரையிலான இளம்பெண்களை உறுப்பினர்களாக சேர்க்க உதயநிதி கோவையில் முகாமைத் தொடங்கினார். டிசம்பர் 26 அந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு சில மணி நேரங்கள் முன்பாக கனிமொழி ஓர் அறிக்கையை வெளியிட்டார். ‘அரசியலில் ஆர்வம் காட்ட துடிக்கும் இளம் பெண்களுக்கு வாய்ப்புகள் அளிப்பதைத் தாண்டி, நாம் 18-30 வயதிற்குள் உள்ள இளம் பெண்களை மகளிரணி உறுப்பினர்களாக இணைத்து அவர்களுக்கு அரசியலின் மேல் ஈடுபாடு ஏற்பட வழி செய்து நமது கழகத்தின் எதிர்காலத்திற்கான அடித்தளம் வலுவாக உள்ளதை உறுதி செய்வோம். இந்த முக்கியமான முயற்சியை நீங்கள் அனைவரும் இன்றே துவக்கி, இதில் ஏற்படும் முன்னேற்றங்கள் மற்றும் சம்மந்தமான தகவல்களை அணித் தலைமையுடன் தினந்தோறும் பகிர வேண்டும்’ என்று அதில் கேட்டிருந்தார் கனிமொழி. இதுகுறித்து , மகளிரணியை வீக் செய்கிறாரா உதயநிதி? பொங்கிய கனிமொழி என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் செய்தி வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் தூத்துக்குடி மேயர் வேட்பாளரை முன்னிறுத்தி கனிமொழிக்கும், உதயநிதிக்கும் அடுத்த போட்டி தொடங்கியிருக்கிறது. 60 வார்டுகளைக் கொண்ட தூத்துக்குடி மாநகராட்சியின் மேயர் தற்போது பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இதில் தற்போதைய பொதுக்குழு உறுப்பினரான ஜெகன் மேயர் ரேஸில் கனிமொழி ஆதரவோடு ஓடிக் கொண்டிருக்கிறார். கலைஞரின் முரட்டு பக்தரும் முன்னாள் மாவட்டச் செயலாளருமான மறைந்த என். பெரியசாமியின் மகன் தான் ஜெகன். தற்போதைய அமைச்சர் கீதாஜீவனின் சகோதரர்.

2019 எம்பி தேர்தலில் தூத்துக்குடி தொகுதி ஜெகனுக்குதான் என்று கிட்டத்தட்ட முடிவாகியிருந்தது. அப்போது சென்னையில் ஒரு மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பிய கனிமொழி, கடைசி நேரத்தில் தனக்கு அந்த வாய்ப்பு தலைமையால் மறுக்கப்பட்டு தூத்துக்குடியில் நிறுத்தப்பட்டார். கலைஞரின் மகள் நின்றதால் ஜெகன் தனது வாய்ப்பை இழந்தார். ஆனாலும் கனிமொழிக்காக சுற்றிச் சுழன்று பணியாற்றினார். தனக்காக எம்பி பதவியை விட்டுக் கொடுத்த ஜெகனுக்கு தூத்துக்குடி மேயர் பதவியை வாங்கிக் கொடுக்க விரும்புகிறார் கனிமொழி.

அதேநேரம் கட்சித் தலைமை விருப்ப மனு கொடுக்கலாம் என்று அறிவித்ததுமே தூத்துக்குடி 34 ஆவது வார்டுக்கு விருப்ப மனுவை கொடுத்துவிட்டார் இளைஞரணியின் மாநில துணைச் செயலாளர் ஜோயல். மதிமுகவில் இருந்து சில வருடங்களுக்கு முன் திமுகவுக்கு வந்த ஜோயல் இளைஞரணிச் செயலாளர் உதயநிதியின் நெருங்கிய வட்டாரத்தில் ஒருவராக இருக்கிறார். எனவே மேயர் வாய்ப்பை இளைஞரணியைச் சேர்ந்த ஜோயலுக்கு கொடுக்க வேண்டும் என்று தூத்துக்குடி இளைஞரணி நிர்வாகிகள் உதயநிதிக்கு தொடர் வேண்டுகோள் வைத்து வருகிறார்கள்.

தூத்துக்குடி மாநகரத்தை உள்ளடக்கிய தொகுதியில்தான் கீதாஜீவன் எம்.எல்.ஏ.வாகவும், அமைச்சராகவும் இருக்கிறார். அக்கா அமைச்சராக இருக்க அதே தொகுதிக்குள் வரும் மாநகரத்துக்கு தம்பி மேயரா என்றால் கட்சியினரிடையே ஒரு சலிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மேலும் கடந்த நாற்பது ஆண்டுகளாக என்.பெரியசாமி குடும்பத்தினர் முக்கிய பதவிகளில் இருந்து வருகின்றனர். நகராட்சித் தலைவராக இருந்த பெரியசாமி அதன் பின் மாசெ ஆனார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியில் இருந்த கீதாஜீவன் இப்போது அமைச்சர் ஆகியிருக்கிறார். இதற்கிடையே 2014 ஆம் ஆண்டு எம்பி தேர்தலில் ஜெகனுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இந்தப் பின்னணியில் இம்முறை இளைஞரணியைச் சேர்ந்தவருக்கு மேயர் வாய்ப்பை வழங்கலாம் என்று மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் ஜோயலுக்காக உதயநிதிக்கு கடிதங்கள் அனுப்பியிருக்கிறார்கள்.

மாவட்டத்தின் இன் னொரு அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணின் மாவட்ட எல்லைக்குள் மாநகரத்தின் பத்து வார்டுகள் வருகிறது. அவரது ஆதரவையும் பெற ஜோயல் தீவிர முயற்சியில் இருக்கிறார். மேயர் தேர்தல் நேரடித் தேர்தல் என்றால் முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட் செல்வன் அமைச்சர் அனிதா மூலம் மேயர் வேட்பாளராகலாம் என்று காய் நகர்த்தி வந்தார். ஆனால் மறைமுகத் தேர்தல்தான் என்று ஆகிவிட்ட நிலையில் அவர் ஒதுங்கியதால்... அனிதாவின் ஆதரவை பெற ஜோயல் தீவிரமாகிவிட்டார். அனிதாவின் நிலைப்பாடு என்பது ஜோயலுக்கு ஆதரவு என்பதை விட உதயநிதிக்கு ஆதரவு என்பதாகவே இருக்கும். கனிமொழிக்கு தூத்துக்குடியில் முழு சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிற நிலையில் உதயநிதி அங்கே தலையிடுவாரா என்ற கேள்வியும் எதிரொலிக்கிறது.

இதற்கிடையே... கட்சியினர் என்ன நினைக்கிறார்கள் என்று அமைச்சர் கீதா ஜீவன் தொடர்ந்து விசாரித்து வருகிறார். அப்போது, ‘திமுக தலைமையில் வாரிசை தொண்டர்கள் மனமுவந்து ஏற்றுக் கொண்டாலும் மாவட்ட லெவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பதவிகளில் தொடர்வதை விரும்பவில்லை’ என்ற பதிலே அவருக்குக் கிடைத்திருக்கிறது. மேலும் தனது தம்பியான ஜெகனுக்கு கனிமொழி எம்பி ஆதரவாக இருப்பதும் கீதா ஜீவனுக்குத் தெரியும்.

ஆனால் ஜெகன் மேயரானால் தனக்கு கட்டுப்பட்டு நடப்பாரா என்ற யோசனையும் கீதா ஜீவனுக்கு இருக்கிறது. தனது அரசியல் அதிகார மையத்தில் தம்பியே பங்குபோட்டுவிடுவாரா என்ற சந்தேகமும் அமைச்சர் கீதாஜீவனுக்கு இருக்கிறது. அதனால் அவர் தனது அப்பா பாணியில் இன்னொரு முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார் என்கிறார்கள் அமைச்சரின் வட்டாரத்தில்.

‘தூத்துக்குடி மாநகராட்சியின் நகராட்சித் தலைவராக இருந்த கஸ்தூரி தங்கம் முதல் மேயரானார். அப்போது அவருக்கு பெரியசாமி மாத சம்பளம் வழங்கிவிடுவார். பெரியசாமி சொன்ன கோப்புகளில் மறுக்காமல் கையெழுத்து மட்டும் இடுவார் கஸ்தூரி தங்கம். தன் தந்தைக்கு கஸ்தூரி தங்கம் போல தனக்கு கட்டுப்பட்ட ஒருவரே மேயராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார் அமைச்சர் கீதாஜீவன். அதனால் தூத்துக்குடி மாநகர செயலாளராக இருக்கும் ஆனந்த சேகரனை மேயராக்கலாம் என்ற ஆலோசனையும் அமைச்சர் வசம் இருக்கிறது’ என்கிறார்கள் கீதாஜீவனுக்கு நெருக்கமானவர்கள்.

கனிமொழி ஆதரவு பெற்ற ஜெகனா, உதயநிதி ஆதரவு பெற்ற ஜோயலா இவர்களைத் தாண்டிய இன்னொரு மேயர் வேட்பாளரா? ஸ்டாலின் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்ற கேள்வி தூத்துக்குடியில் இருந்து சென்னை வரை பரவியிருக்கிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைன் சென்றது வாட்ஸ் அப்.

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை! ...

3 நிமிட வாசிப்பு

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை!

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ...

5 நிமிட வாசிப்பு

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ஆதீனம்!

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

4 நிமிட வாசிப்பு

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

வெள்ளி 21 ஜன 2022