கார்த்தி சிதம்பரம் மீது புதிய வழக்கு: சிபிஐ ரெய்டு!

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி. மீது சட்ட விரோதமாக வருமானம் ஈட்டியதாக சிபிஐ புதிய வழக்கை பதிவு செய்துள்ளது. 2010- 14 காலகட்டங்களில் வெளிநாடுகளுக்கு பண பரிமாற்றம் தொடர்பாகவும் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.
எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து... சென்னை, டெல்லி, மும்பை போன்ற பகுதிகளில் 7 முதல் 9 இடங்களில் இன்று (மே17) சிபிஐ சோதனையிட்டு வருகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் ஏழு சிபிஐ அதிகாரிகள் காலை முதல் சோதனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை தனது ட்விட்டரில் கார்த்தி சிதம்பரம், "எத்தனை முறை சோதனை இட்டிருக்கிறீர்கள் என்று எனக்கே கணக்கு மறந்துவிட்டது. இன்னும் எத்தனை முறைதான் சோதனை இடுவீர்கள்?" என்று கேட்டிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றுள்ள நிலையில் இந்த ரெய்டு நடந்து வருகிறது. மேலும் தமிழகத்திலிருந்து ராஜ்யசபா எம்பியாக ப.சிதம்பரம் திமுக கூட்டணியில் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவும் நிலையில்... கார்த்தி சிதம்பரத்தை குறிவைத்து சிபிஐ ரெய்டு நடத்தி வருவது அரசியல் முக்கியத்துவமாகவும் பார்க்கப்படுகிறது.
வேந்தன்