மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 17 மே 2022

ரூட் தல - இனி கைதுதான்: சென்னை ஆணையர் எச்சரிக்கை!

ரூட் தல - இனி கைதுதான்: சென்னை ஆணையர் எச்சரிக்கை!

வன்முறை சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்கள் கைது செய்யப்படுவார்கள் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் சில கல்லூரி மாணவர்கள் இரு தரப்பாகப் பிரிந்து மோதிக் கொள்வது, பேருந்து ஓட்டுநர் நடத்துநர் இடையே பிரச்சினை செய்வது, பொதுமக்களுக்குத் தொந்தரவு ஏற்படும் வகையில் நடந்துகொள்வது, ரூட் தல என்ற பெயரில் மோதிக் கொள்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது.

நேற்று சென்னை பச்சையப்பன் கல்லூரி அருகே உள்ள ஹாரிங்டன் சாலையில், அக்கல்லூரியின் இரு பிரிவு மாணவர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. பூந்தமல்லியிலிருந்து வரும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும், திருத்தணியிலிருந்து வரும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

மாணவர்கள் கற்களாலும், கைகளாலும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்த நிலையில், போலீசார் வருவதைக் கண்டு மாணவர்கள் சிதறி ஓடினர். இதில் 4 பேரை பிடித்த போலீசார் எதற்காகத் தாக்கிக் கொண்டனர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதோடு கல்லூரி சுற்றுச்சுவரை ஒட்டி, 6 பட்டாக்கத்திகள் மற்றும் 20 காலியான மதுபாட்டில்களுடன் இருந்த பை ஒன்றை போலீசார் கண்டெடுத்தனர். மாணவர்கள் தாக்குதல் சம்பவம் தொடர்பாக கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இதுதொடர்பாக சென்னையில் பேட்டியளித்த ஆணையர் சங்கர் ஜிவால், “கல்லூரி மாணவர்களின் பிரச்சினை பெரிதாக இருக்கிறது. ரூட் தல பிரச்சினையில் மாணவர்களுக்கு இடையே நடைபெறும் பிரச்சினையால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். நேற்று மட்டும் மூன்று சம்பவங்கள் நடந்துள்ளன. பச்சையப்பன், சைதாப்பேட்டை, புதுக்கல்லூரி மாணவர்களால் பிரச்சினை ஏற்பட்டது.

பேருந்தில் தொங்கிக் கொண்டு வரும் மாணவர்களையும், பொதுமக்களைத் தொந்தரவு செய்யும் மாணவர்களையும் தடுக்கும் கண்டக்டர், டிரைவர் மீது தாக்குதல் நடத்தப்படுவதைத் தடுக்க ஒழுங்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

ஏற்கனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்களை பெற்றோர்களுடன் வரச் சொல்லி கல்லூரி முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தி அறிவுரைகளை வழங்கினோம். ஆனால் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும் போது வழக்குப்பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

நேற்று நடந்த சம்பவத்தில் 3 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. 10 மாணவர்கள் கைது செய்ய வேண்டிய நிலைமை வந்துவிட்டது. கல்லூரிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். முன்பாக, கல்லூரி மாணவர்களின் எதிர்கால நலன் கருதி எச்சரிக்கை மட்டும் செய்திருந்தோம். இனி அந்த மென்மையான போக்கு கிடையாது. மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

-பிரியா

டெல்லி பயணம்: பன்னீரின் அடுத்த திட்டம்!

3 நிமிட வாசிப்பு

டெல்லி பயணம்:  பன்னீரின் அடுத்த திட்டம்!

வேலுமணியோடு சிக்கப் போகும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்? அடித்தளம் போட்ட ...

7 நிமிட வாசிப்பு

வேலுமணியோடு சிக்கப் போகும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்? அடித்தளம் போட்ட அறப்போர்!

சசிகலாவை எடப்பாடி எதிர்த்தது பன்னீரால்தான் - உதயகுமார் புது ...

3 நிமிட வாசிப்பு

சசிகலாவை எடப்பாடி எதிர்த்தது பன்னீரால்தான் - உதயகுமார் புது ட்விஸ்ட்!

செவ்வாய் 17 மே 2022