காங்கிரஸில் ராஜ்ய சபா யாருக்கு? கே. எஸ். அழகிரி பதில்!

நாடாளுமன்ற மாநிலங்களவை யான ராஜ்யசபாவில் தமிழ்நாட்டில் இருந்து காலியாகும் 6 இடங்களுக்கு வரும் ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது.
தமிழக கட்சிகளின் சட்டமன்ற பலத்தின் படி ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணிக்கு நான்கு உறுப்பினர்களை தேர்வுசெய்யவும், அதிமுகவுக்கு இரண்டு உறுப்பினர்களை தெரிவு செய்யவும் வசதி உள்ளது.
இதன்படி கடந்த மே 15 ஆம் தேதி திமுக தலைவர் முதல்வர் மு. க. ஸ்டாலின், திமுக சார்பில் ராஜ்யசபாவுக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் மூன்று பெயர்களை அறிவித்தார். தஞ்சை கல்யாணசுந்தரம், நாமக்கல் ராஜேஷ்குமார், கிரிராஜன் ஆகியோரை அறிவித்த திமுக தலைமை மீதி ஒரு இடம் கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்படுகிறது எனவும் அறிவித்தது.
இந்த நிலையில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட அந்த ஒரு ராஜ்யசபா உறுப்பினர் யாருக்கு என்ற கேள்வி காங்கிரஸ் வட்டாரத்திலும் அரசியல் வட்டாரத்திலும் எழுந்தது.
கடந்த உள்ளாட்சித் தேர்தல் நேரத்திலேயே காங்கிரஸ் மூத்த தலைவரும் தற்போது ராஜ்யசபா உறுப்பினர் பதவி முடிவடையும் நிலையில் இருப்பவருமான ப. சிதம்பரம் தமிழக முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். அப்போதிலிருந்தே திமுக கூட்டணியில் ஒரு ராஜ்யசபா சீட் காங்கிரஸில் சிதம்பரத்திற்கு ஒதுக்கப்படும் என்று யூகங்கள் எழுந்தன.
இந்த பின்னணியில் இன்று மே 17ஆம் தேதி தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி மாநில தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, "காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட ராஜ்யசபா சீட் யாருக்கு என்று முடிவாகிவிட்டதா?" என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு பதிலளித்த அழகிரி, "இப்போதுதான் காங்கிரஸ் மாநாடு ராஜஸ்தானில் நடந்து முடிந்திருக்கிறது. இன்னும் இரண்டு மூன்று நாட்களில் இதைப்பற்றி காங்கிரஸ் தேசிய தலைமை முடிவெடுத்து அறிவிக்கும். இதுவரை யாரும் யாருக்கும் கோரிக்கை வைக்கவில்லை" என்று பதிலளித்தார்.
தொடர்ந்து, "சிதம்பரத்துக்கு ராஜ்யசபா சீட் அளிக்கப்படும் என்று தகவல்கள் வருகிறதே?" என்று ஒரு கேள்வி கேட்கப்பட, "வாய்ப்புகள் அதிகம் உண்டு" என்று பதிலளித்தார் அழகிரி.
வேந்தன்