மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 17 மே 2022

அம்மா கிளினிக் - மீண்டும் தொடங்க வேண்டும்: ஈபிஎஸ்

அம்மா கிளினிக் - மீண்டும் தொடங்க வேண்டும்: ஈபிஎஸ்

கடலூரில் போலி மருத்துவரால் சிறுமி ஒருவர் உயிரிழந்ததைக் குறிப்பிட்டு, இல்லம் தேடி மருத்துவ திட்டம் என்ன ஆனது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவரது மகள் லட்சிதா(5). கடந்த 7ஆம் தேதி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் குழந்தையின் பெற்றோர் வேப்பூரில் உள்ள தனியார் மருந்தகத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவராக இருந்த சத்தியசீலன் குழந்தைக்குச் சிகிச்சை அளித்தார். ஊசி போட்டு மத்திரை கொடுத்து அனுப்பியிருக்கிறார். சிகிச்சை அளித்த அன்றைய தினம் மதியமே குழந்தை உயிரிழந்தது.

இதையடுத்து, நல்லூர் வட்டார அரசு தலைமை மருத்துவர் தமிழரசன் தலைமையிலான மருத்துவ குழுவினர் நடத்திய விசாரணையில் சத்தியசீலன் போலி மருத்துவர் என்பது தெரியவந்தது. குழந்தையின் இறப்பால் சோகமடைந்த பெற்றோர் இதுகுறித்து வேப்பூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடந்து வருகிறது. தலைமறைவாக உள்ள சத்தியசீலனை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, “குழந்தைக்குச் சிகிச்சை அளித்த சத்தியசீலன் போலி மருத்துவர் என்பதும், தவறாக சிகிச்சை அளித்த தாரர் மெடிக்கல்ஸ் & கிளினிக் மீது இதுவரை மேல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

காய்ச்சல், சளி, இருமல் போன்ற சாதாரண நோய்கள் வந்தால் அருகில் உள்ள தனியார் மருத்துவர்களிடம் சென்று, பணம் செலவு செய்து சிகிச்சை பெறமுடியாத ஏழை, எளிய, நடுத்தர மக்கள், அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே இலவசமாக மருத்துவச் சிகிச்சை பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன், முதற்கட்டமாக 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்குகளை தமிழகமெங்கும் அதிமுக அரசு தொடங்கியது.

ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் திமுக அரசு அம்மா கிளினிகிற்கு மூடு விழா நடத்தியது. இதனால் ஏழை எளிய மக்கள் சிகிச்சைக்காகத் தனியாரிடம் செல்லும் நிலை ஏற்பட்டது.

லட்சிதா போன்று இன்னும் எத்தனை பேர் சிகிச்சைக்குப் பணம் இல்லாமல் குறைவான கட்டணம் வசூலிக்கும் போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று உடல் நலத்தை மேலும் கெடுத்துக் கொள்கிறார்களோ, உயிரை இழக்கும் சூழ்நிலைக்கு உள்ளாகிறார்களோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

இல்லம் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை இந்த விடியா அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின்படி பூலாம்பட்டி காலனி கிராமத்துக்கு இந்த குழு சென்றிருந்தால், அந்தக் குழந்தை உயிர் பிழைத்திருக்கும். என்ன ஆனது இந்த திட்டம்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர், “இல்லம் தேடி மருத்துவம் என்ற திட்டம் சரியாகச் செயல்படவில்லை என்பதை புரிந்துகொண்ட இந்தவிடியா அரசு,அம்மா மினிகிளினிக் திட்டத்தில் மாற்றம் செய்து 708 நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளது. நகர்ப்புறங்களில் நிறைய மருத்துவமனைகள் உள்ளன. ஆனால், கிராமப்புறங்களில் தான் ஏழை, எளிய மக்கள் சாதாரண காய்ச்சல், சளி போன்ற உபாதைகளுக்குக்கூட அருகில் உள்ள நகர்ப்புறங்களுக்குச் செல்ல வேண்டும்.

எனவே, அம்மா மினி கிளினிக் திட்டத்தை மீண்டும் செயல்படுத்திட வேண்டும். தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்பதை கடைப்பிடிக்காமல் அம்மா மினி கிளினிக் திட்டத்தை முழுமையாக மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்றும், உயிரிழந்த பெண் குழந்தை லட்சிதாவின் குடும்பத்திற்குத் தமிழக அரசின் சார்பில் 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

-பிரியா

டெல்லி பயணம்: பன்னீரின் அடுத்த திட்டம்!

3 நிமிட வாசிப்பு

டெல்லி பயணம்:  பன்னீரின் அடுத்த திட்டம்!

வேலுமணியோடு சிக்கப் போகும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்? அடித்தளம் போட்ட ...

7 நிமிட வாசிப்பு

வேலுமணியோடு சிக்கப் போகும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்? அடித்தளம் போட்ட அறப்போர்!

சசிகலாவை எடப்பாடி எதிர்த்தது பன்னீரால்தான் - உதயகுமார் புது ...

3 நிமிட வாசிப்பு

சசிகலாவை எடப்பாடி எதிர்த்தது பன்னீரால்தான் - உதயகுமார் புது ட்விஸ்ட்!

செவ்வாய் 17 மே 2022