மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 18 மே 2022

பேரறிவாளன் விடுதலை!

பேரறிவாளன் விடுதலை!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைத் தண்டனை பெற்று வந்த பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தால் இன்று (மே 18) விடுவிக்கப்பட்டார்.

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் சிறைத் தண்டனை பெற்று வருகின்றனர். இவர்களில் சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்டோருக்கான தூக்கு தண்டனை 2014ஆம் ஆண்டு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இந்த சூழலில் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

அதிமுக ஆட்சிக்காலத்தில் ஏழு பேரை விடுவிக்க வலியுறுத்தி அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் இந்த விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்காமல் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அமைச்சரவையின் தீர்மானத்தை அனுப்பி வைத்தார்.

இதனிடையே அமைச்சரவையின் முடிவின் அடிப்படையில் தன்னை விடுவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் நாகேஸ்வரராவ், பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணையிலிருந்து வந்தது.

இந்த வழக்கு கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, “யார் விடுதலை செய்ய வேண்டும் என்ற குழப்பத்தில் ஏன் பேரறிவாளன் சிக்கிக் கொள்ள வேண்டும். அவரை உச்ச நீதிமன்றமே ஏன் விடுதலை செய்யக்கூடாது” என்று கேள்வி எழுப்பியிருந்தது.

அதுபோன்று அடுத்தடுத்த விசாரணைகளில் உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தது. மே 4ஆம் தேதி நடந்த விசாரணையின்போது பேரறிவாளன் விடுதலை குறித்துத் தெளிவான முடிவை மத்திய அரசு ஒரு வாரக் காலத்தில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

பேரறிவாளனை விடுதலை செய்யும் அமைச்சரவை முடிவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது ஏன்? குடியரசுத் தலைவரோ, ஆளுநரோ என்ன அதிகாரத்திலிருந்தாலும் அரசியல் சாசனத்தை மீறி யாரும் செயல்பட முடியாது. குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு எங்களால் உத்தரவிட முடியாது என்றாலும் இந்த வழக்கில் அரசியல் சாசன அடிப்படையில் தீர்ப்பு வழங்க முடியும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

அமைச்சரவையின் முடிவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று தெரிவித்த நீதிபதிகள், ஆளுநருக்காக மத்திய அரசு வாதிடுவது ஏன்? என்றும் கேள்வியை எழுப்பியிருந்தனர்.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் இன்று (மே 18) தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், சட்டப்பிரிவு 161வது பிரிவில் முடிவெடுக்க ஆளுநர் தாமதப்படுத்தினால் உச்சநீதிமன்றமே அந்த வழக்கில் முடிவெடுக்க அரசமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவு வழிவகுக்கிறது. அதனடிப்படையில் பேரறிவாளன் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். ஆளுநர் முடிவெடுக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது அரசமைப்புச் சட்டப்படி தவறு என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

தீர்ப்பு வெளியான நிலையில் ஜோலார்பேட்டையில் உள்ள பேரறிவாளன் இல்லத்தில், அவருடைய உறவினர்கள் ஒருவரை ஒருவர் ஆனந்த கண்ணீருடன் கட்டித்தழுவி இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

-பிரியா

டெல்லி பயணம்: பன்னீரின் அடுத்த திட்டம்!

3 நிமிட வாசிப்பு

டெல்லி பயணம்:  பன்னீரின் அடுத்த திட்டம்!

வேலுமணியோடு சிக்கப் போகும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்? அடித்தளம் போட்ட ...

7 நிமிட வாசிப்பு

வேலுமணியோடு சிக்கப் போகும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்? அடித்தளம் போட்ட அறப்போர்!

சசிகலாவை எடப்பாடி எதிர்த்தது பன்னீரால்தான் - உதயகுமார் புது ...

3 நிமிட வாசிப்பு

சசிகலாவை எடப்பாடி எதிர்த்தது பன்னீரால்தான் - உதயகுமார் புது ட்விஸ்ட்!

புதன் 18 மே 2022