மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 18 மே 2022

நூல் விலை உயர்வு: ஒன்றிய அமைச்சர்களைச் சந்திக்கும் மேற்கு மாவட்ட எம்.பி.க்கள்!

நூல் விலை உயர்வு: ஒன்றிய அமைச்சர்களைச் சந்திக்கும் மேற்கு மாவட்ட எம்.பி.க்கள்!

பருத்தி மற்றும் நூல் விலை உயர்வு குறித்து மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திருப்பூர், கரூர், ஈரோடு ஆகிய இடங்களில் உள்ள ஜவுளி கடைகள் மே 16, 17 ஆகிய தேதிகளில் மூடப்பட்டிருந்தன.

ஜவுளி பொருட்களின் ஏற்றுமதி, இறக்குமதி, உற்பத்தி மற்றும் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான யூனிட்கள் வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக மே 16 மற்றும் மே 17 ஆகிய தேதிகளில் தங்கள் வேலையை நிறுத்துவதாக அறிவித்ததன் பேரில் இந்த கடையடைப்பு நடந்தது.

இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.ராஜா சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கடந்த 18 மாதங்களுக்கு முன், ஒரு கிலோ நூல் 200 ரூபாய்க்கு வாங்கப்பட்ட நிலையில், தற்போது, 400 கிராம் நூல் மட்டுமே கிடைக்கும். இந்தப் பொருட்களின் மாதாந்திர விலையுயர்வை எங்கள் நிறுவனங்களால் சமாளிக்க முடியவில்லை. இது எங்களை இக்கட்டான நிலைக்குக்கொண்டு சென்றுள்ளது. மத்திய அரசின் தலையீடு மட்டுமே இந்த நெருக்கடியைத் தீர்க்க முடியும். அவர்கள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

நூல் மற்றும் பருத்தி ஏற்றுமதிக்கு தற்காலிக தடை விதிக்க வேண்டும் என்பது உட்பட இரண்டு கோரிக்கைகளை மத்திய அரசின் முன் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் வைத்துள்ளது. பருத்தியை சரக்கு வர்த்தகப் பட்டியலில் இருந்து நீக்கி, அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

திருப்பூரில் மட்டும் 20,000 ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் அதைச் சார்ந்த வேலைப் பிரிவுகள் 10 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதாக தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க உறுப்பினர்கள், டெல்லியில் நேற்று ஜவுளித் துறை அமைச்சரை சந்தித்துள்ளனர்.

இந்த நிலையில், தென்மாநில ஜவுளி தொழிலில் ஏற்பட்டுள்ள இடையூறுகளைக் குறிப்பிட்டு, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் இந்த விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கோரிக்கை

வைத்துள்ளார்.

"நூல் விலை உயர்வால் தமிழகத்தில் ஜவுளி துறையை சார்ந்த அனைவரும் செய்வதறியாமல் தடுமாறி கொண்டிருக்கிறார்கள். லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தை தமிழகம் எதிர்கொண்டு இருக்கிறது. ஆறு மாதங்களுக்கு மேலாக இதே சூழ்நிலை நீடிக்கின்ற நிலையிலும் ஒன்றிய அரசு இதைப்பற்றி சிறிதும் கவலைப்படவில்லை. உடனடியாக பஞ்சு ஏற்றுமதியை நிறுத்தினால் மட்டும்தான் ஜவுளித்துறையை காப்பாற்ற முடியும். பாதிப்பின் தீவிரத்தை உணராமல் ஒன்றிய அரசு அமைதி காப்பது வேதனையை அதிகப்படுத்துகிறது. குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பெருமளவில் பஞ்சு பதுக்கபட்டிருக்கின்ற காரணத்தினால் பயன்பாட்டுக்கு வராமல் நூல் விலை உயர்வுக்கு காரணமாக இருக்கிறது. அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து பஞ்சு எடுக்கப்பட்டது தான் இந்த கொடுமைக்கு காரணமாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக மேலும் தங்களை தாங்களே நஷ்டப்படுத்தி கொண்டு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கி இருக்கிறார்கள். தமிழக முதலமைச்சரும் தொடர்ந்து ஒன்றிய அரசுக்கும், பிரதமருக்கும் தொடர்ந்து கடிதங்களை எழுதிக் கொண்டிருக்கிறார். தொழில் துறையை சார்ந்தவர்கள் ஒன்றிய அமைச்சரை சந்தித்து முறையீடுகளை செய்து கொண்டிருக்கிறார்கள். இவ்வளவுக்கு அப்புறமும் ஒன்றிய அரசு கண்டு கொள்வதாக இல்லை. தமிழகத்தினுடைய பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழக ஜவுளி துறையின் உண்மைநிலையை ஒன்றிய அரசுக்கு எடுத்து செல்லவேண்டும். இது இன்றியமையாத ஆக்கப்பூர்வமான தமிழகத்தின் தேவை. நூல் விலை விஷயத்தில் கருத்துக்களை கூறாமல் அமைதி காப்பதும் ஏற்புடையதல்ல. உடனடியாக உங்கள் முயற்சிகளை தொடங்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார் ஈஸ்வரன்.

இதற்கிடையே திமுக மகளிர் அணி செயலாளரும் மக்களவை திமுக துணைத் தலைவருமான கனிமொழி எம்பி தலைமையில் இந்த நூல் விலை உயர்வு விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டின் மேற்கு மாவட்ட எம்.பிக்கள் குழு ஒன்றிய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியுஸ் கோயல் ஆகியோரை இன்று மே 18ஆம் தேதி டெல்லியில் சந்திக்கிறார்கள்.

வேந்தன்

டெல்லி பயணம்: பன்னீரின் அடுத்த திட்டம்!

3 நிமிட வாசிப்பு

டெல்லி பயணம்:  பன்னீரின் அடுத்த திட்டம்!

வேலுமணியோடு சிக்கப் போகும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்? அடித்தளம் போட்ட ...

7 நிமிட வாசிப்பு

வேலுமணியோடு சிக்கப் போகும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்? அடித்தளம் போட்ட அறப்போர்!

சசிகலாவை எடப்பாடி எதிர்த்தது பன்னீரால்தான் - உதயகுமார் புது ...

3 நிமிட வாசிப்பு

சசிகலாவை எடப்பாடி எதிர்த்தது பன்னீரால்தான் - உதயகுமார் புது ட்விஸ்ட்!

புதன் 18 மே 2022