மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 23 மே 2022

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தின் பட்டின பிரவேச நிகழ்ச்சி நேற்று மே 22ஆம் தேதி இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது.

மனிதரை மனிதர் தூக்கும் இந்த பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சி மனித உரிமைக்கு எதிரானது என்ற புகாரின் பேரில்.. ஆரம்பத்தில் மயிலாடுதுறை கோட்டாட்சியர் தடை விதித்தார். அதை எதிர்த்து அரசியல் கட்சிகள் களத்தில் இறங்கினர். பிறகு அரசு தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது.

பல்வேறு வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் கூட சைவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு பெரும் திரளாக திரண்டனர். மயிலாடுதுறை நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் அனைத்து தங்கும் விடுதிகளும் கடந்த மூன்று நாட்களாகவே நிரம்பி வழிகின்றன. பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு இந்த வருடம் வருவதை அறிந்த தருமபுரம் ஆதீனம் ஏற்பாடுகளையும் முடுக்கி விட்டார்.

ஆதீனத்துக்கு சொந்தமான கல்வி நிறுவன கட்டிடங்களில் வெளியூர் மக்கள் தங்க வைக்கப்பட்டார்கள். கடந்த இரண்டு நாட்களாக மூன்று வேளையும் ஆலயத்தின் சார்பில் உணவு அளிக்கப்பட்டு வருகிறது.

நேற்று இரவு 10 மணி அளவில் மடத்தின் வளாகத்திலிருந்து தருமபுரம் ஆதீனம் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து வந்த ஆதீனங்களின் புடைசூழ...வெளியே நடந்து வந்தார். நாதஸ்வர மேளதாளங்கள், கொம்பு வாத்தியங்கள் பல்வேறு இசைக்கருவிகள் இசைக்க ஆதீனம் கோவில் வாசலில் இருக்கும் பல்லக்கின் அருகில் வந்தார்.

பல்லக்கில் ஏறுவதற்கு முன் ஆதீனத்தை சிவனாகவே உருவகித்து அவருக்கு வழிபாடுகள் நடத்தப்பட்டன. அதன் பிறகு பல்லக்கில் ஏறி அமர வைக்கப்பட்டார் தருமபுரம் ஆதீனம்.

இதுவரை இல்லாத அளவுக்கு மிக மிகக் கடுமையான கூட்டம் திரண்டதால் நிகழ்ச்சி திட்டமிட்டபடி முடிவதற்கு பதில் நீண்ட நேரம் ஆனது.

ஆதினத்தின் 4 மாட வீதிகளிலும் பல்லக்கு ஊர்வலம் வந்தது. இரவு போலவே இல்லாமல் பட்டப்பகல் போல வெளிச்சமும் பக்தர்கள் கூட்டமும் திரண்டனர்.

பல்லக்கு பவனி முடிவதற்கு இரவு ஒரு மணி ஆகிவிட்டது.

முன்னதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச் ராஜா உள்ளிட்டோர் ஆதீனத்தை சந்தித்து வணங்கி ஆசி பெற்றனர்.

பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடந்து முடிந்து விட்ட நிலையிலும் இன்று மே 23 காலைவரை தருமபுரம் ஆதீனத்தில் கூட்டம் இருந்து கொண்டிருக்கிறது.

ஆதீனத்தின் சார்பில் பக்தர்களுக்கு இன்று காலை உணவும் வழங்கப்படுகிறது.

எவ்வளவோ முயற்சிகள் செய்தும் இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியை அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியவில்லை. ஆதீனத்தின் கட்டுப்பாட்டிலேயே முழுக்க முழுக்க பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடந்திருக்கிறது.

வேந்தன்

டெல்லி பயணம்: பன்னீரின் அடுத்த திட்டம்!

3 நிமிட வாசிப்பு

டெல்லி பயணம்:  பன்னீரின் அடுத்த திட்டம்!

வேலுமணியோடு சிக்கப் போகும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்? அடித்தளம் போட்ட ...

7 நிமிட வாசிப்பு

வேலுமணியோடு சிக்கப் போகும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்? அடித்தளம் போட்ட அறப்போர்!

சசிகலாவை எடப்பாடி எதிர்த்தது பன்னீரால்தான் - உதயகுமார் புது ...

3 நிமிட வாசிப்பு

சசிகலாவை எடப்பாடி எதிர்த்தது பன்னீரால்தான் - உதயகுமார் புது ட்விஸ்ட்!

திங்கள் 23 மே 2022