ஜூலையில் மாணவிகளுக்கு ரூ.1000: அமைச்சர் பொன்முடி

politics

உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கும் திட்டத்தை ஜூலையில் முதல்வர் தொடங்கி வைப்பார் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, “இந்த ஆண்டு முதல் டிப்ளமோ முடித்த மாணவர்கள் நேரடியாக அண்ணா பல்கலைக் கழகத்தில் இரண்டாம் ஆண்டில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். வொகேசனல் கோர்ஸ் எனப்படும் தொழிற்கல்வி படித்த மாணவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டியது கட்டாயமாகும். அதற்காக இன்று ஆலோசனை நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு முதல் அரசு பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் என அனைத்திலும் இரண்டு சதவிகித இட ஒதுக்கீடு கொடுத்து அனைத்து இடங்களிலும் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் மாத உதவித் தொகை வழங்குவது தொடர்பாக விண்ணப்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன. முதல் நாளிலேயே 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன.

6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த பெண்கள் எந்த கல்லூரியில் எத்தனை பேர் படித்துக் கொண்டிருக்கின்றனர் என்ற கணக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம். இந்த தகவல் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று ஆய்வு செய்த பின்னர் இந்த உதவி தொகை வழங்கும் திட்டத்தை வரும் ஜூலை மாதத்தில் முதல்வர் தொடங்கி வைப்பார்.

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வந்த பின்னர் கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கப்படும். அதுபோன்று இரண்டாம், மூன்றாம் ஆண்டுகளுக்கான வகுப்புகள் ஜூலை 18 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று கூறினார்.

மாதம் ரூ.1000 பெறும் திட்டத்துக்கு மாணவிகள் [https://penkalvi.tn.gov.in](https://penkalvi.tn.gov.in/student-login.php) என்ற இணையதள வாயிலாக தங்கள் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம். கூடுதல் தகவல்களுக்கு 14417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *