மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

அம்பேத்கர் பிறந்த தினம்!

அம்பேத்கர் பிறந்த தினம்!

சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரான, உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியரான அம்பேத்கரின் 127ஆவது பிறந்த நாள் (ஏப்ரல்-14) இன்று கொண்டாடப்படுகிறது.

அம்பேத்கர் மத்தியப்பிரதேச மாநிலத்திலுள்ள அம்பாவாதே என்ற கிராமத்தில் 1891 ஏப்ரல் 14ஆம் தேதி பிறந்தார். இவர் ராம்ஜி மாலோஜி சக்பால் - பீமாபாய் தம்பதியின் 14ஆவது குழந்தை. இவர் தமது பள்ளி பருவத்திலேயே பல்வேறு தீண்டாமைக் கொடுமைகளை அனுபவித்துள்ளார்.

கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்து தாழ்த்தப்பட்ட சமூகத்தில் உயர்கல்வி பயின்றவர் என்ற பெருமையையும், உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார். இவர் ஒரு சமூக சீர்திருத்தவாதியாக மட்டுமல்லாமல், மிகச்சிறந்த பொருளியல் அறிஞராகவும், அரசியல் தத்துவமேதையாகவும், பகுத்தறிவு சிந்தனையாளராகவும், சிறந்த எழுத்தாளர் மற்றும் பேச்சாளராகவும், வரலாற்று ஆசானாகவும் விளங்கியவர்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். தீண்டாமை ஒழிப்பு, தனி வாக்குரிமை, மனுநீதி எரிப்பு என பல போராட்டங்களில் ஈடுபட்டார். அவரது அளப்பரிய சட்ட அறிவால், சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார். ஆனால், இந்து நெறியியல் சட்டத்தை கொண்டு வருவதில் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 1951ஆம் ஆண்டு இவர் தன் பதவியை விட்டு விலகினார். இவர் தன்னுடைய வாசிப்பையும் அறிவையும் சமூக மாற்றத்துக்கான ஆயுதமாகப் பயன்படுத்தினார்.

தம்முடைய சமூகப் போராட்டத்துக்கு, தாம் இந்து மதத்தில் இருப்பதே ஒரு பெரிய தடையாக கருதிய அவர், பௌத்த சமயக் கொள்கைகளின் மீது ஈடுபாடுகொண்டு, 1950ஆம் ஆண்டுக்கு பிறகு பௌத்த சமயத்தின் மீது தன் கவனத்தைச் செலுத்தினார். இறுதிவரை மக்களுக்காக போராடிய அம்பேத்கர் 1948 ஆம் ஆண்டு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக எடுத்துக்கொண்ட மருந்துகளால் கண்பார்வை குறைந்து தன்னுடைய மீதி வாழ்நாளை படுக்கையில் கழித்தார். அந்த நிலையிலும் ‘புத்தரும் அவரின் தம்மாவும்’ என்ற புத்தகத்தை எழுதிய மூன்று நாள்களுக்குப் பிறகு 1956ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி இயற்கை எய்தினார். இவரின் உடல் தாதர் சௌபதி கடற்கரையில் டிசம்பர் 7ஆம் தேதி தகனம் செய்யப்பட்டது.

ஆந்திர மாநிலத்தில் அம்பேத்கரின் 127ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல் 11 ஆம் தேதி விசாகப்பட்டினத்தில், அரசு விடுதிகளில் தங்கிப்படிக்கும் மாணவிகள் 7,000 பேர் ஒரே நேரத்தில் குச்சுப்புடி நடனம் ஆடினார். ‘அமராவதியில் 125 அடி உயரமுள்ள அம்பேத்கர் சிலையை நிறுவ ஏற்பாடு செய்யப்படவுள்ளது’ என ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். இந்நிலையில் சென்னையில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு, அதிமுக-வின் இரு அணியினரும், ஒரே நேரத்தில் மாலை அணிவிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017