மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

தம்பி, எரி தழல் கொண்டுவா!

தம்பி, எரி தழல் கொண்டுவா!

கோவை தொண்டமுத்தூர் அருகே உள்ள புள்ளகவுண்டனூரில், கோயில் திருவிழாவில் 11.04.2017 அன்று நடந்த சம்பவத்தையும், தற்போது சிவகங்கை மாவட்டத்தில் நடந்த சம்பவத்தையும், இவ்விரண்டிலும் மௌனம் காக்கும் அரசியல் கட்சிகளையும் பார்க்கும்போது, தமிழகத்தில் தலித் இன மக்கள் தனித்து விடப்பட்டிருப்பதையே காட்டுகிறது.

புள்ளகவுண்டனூரில் நடைபெற்று வரும் மகாளியம்மன் திருவிழாவின் இசை நிகழ்ச்சியின்போது, மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் தாழ்த்தப்பட்ட பெண்கள் இருந்த பகுதிக்குச் சென்று ஆடியுள்ளனர். பெண்கள் அருகே வராமல் தள்ளி நின்று ஆடுமாறு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள், ஆதிக்க சமூகத்தைச் சார்ந்த ஆண்களின் கையினை பிடித்துச் சொல்லியதாக கூறப்படுகிறது. அப்போது, ‘தாழ்த்தப்பட்டவர் எப்படி எங்களின் கையை பிடித்துச் சொல்ல முடியும்?’ என ஆரம்பித்த பிரச்னை, தலித் சமூகத்தவர் குடிசைகளையும், வீடுகளையும் உடைத்தெறிந்ததோடு, இளைஞர்கள், பெண்கள், தெருவில் படுத்திருந்த முதியவர்கள் என அனைவரது ரத்தத்தையும் ஒரு கை பார்த்துவிட்டுத்தான் ஓய்ந்திருக்கிறது. தாங்கள் கொத்தடிமைகளைப்போல நடத்தப்படுவதாகவும், அடிப்படை வசதிகளைக் கூட கேட்க முடியாத சூழலில் வசிப்பதாகவும் அவர்கள் இட்ட கூக்குரல் காவல்துறையின் கதவுகளை இன்னும் எட்டவில்லை.

தீண்டாமைக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த சிவகங்கை மாவட்டம், வெம்பத்தூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவரான முருகன், நேற்று முன்தினம் (12.04.2017) காலை மேலவடத்தூர் என்ற கிராமத்தில் காரில் வந்த சிலரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். ‘ஆதிக்க சாதியினர் சிலரால் தனது உயிருக்கு ஆபத்து’ எனத் தனது தற்பாதுகாப்புக்காக அவர் விண்ணப்பித்தத் துப்பாக்கி லைசன்ஸ் மாவட்ட அதிகாரிகளால் மறுக்கப்பட்ட சூழ்நிலையில் அவர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கும், இதற்கு முன்பு முருகனின் சகோதரர் முத்துக்கிருஷ்ணன் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கும் காரணம் தீண்டாமை என்பது அப்பகுதி மக்கள் அனைவருமே அறிந்த விஷயம்.

இப்படி, தலித்கள் விஷயத்தில் அனைவரும் மௌனமாக இருப்பது காலம் காலமாகத் தொடர்ந்து வந்தாலும், திராவிட கட்சிகளின் தோற்றத்துக்குப் பின், ‘மாற்றம் வரும்’ என நம்பிய அனைவருக்கும் ஏமாற்றமே இன்றுவரை மிஞ்சி இருக்கிறது.

தலித் மக்களுக்காகச் சட்ட உரிமை, கல்விச் சலுகை கோரியும், கிராம நிர்வாக அலுவலர் உட்பட பல அரசாங்கப் பணிகளில் தலித்துகளுக்கு இடம் ஒதுக்குவதன் மூலம் அவர்களைப் பொருளாதார அடிப்படையில் உயர்த்தக் கோரியும், 1891ஆம் வருடம் டிசம்பர் 1ஆம் நாளில் அயோத்திதாஸ் பண்டிதரால் ஊட்டியில் நடத்தப்பட்ட திராவிட மகாஜன சங்க மாநாட்டுக்குப் பின் மெலிதாக எட்டிப்பார்த்த வளர்ச்சி, இன்னமும்கூட முளைவிட்டுப் பிரியாத தளிர் நிலையிலேயே உள்ளது. ‘திராவிட முன்னேற்றம்’ என்ற கோசத்தோடு கடந்த ஐம்பது ஆண்டுளாக மேலாக தமிழ்நாட்டை ஆண்டு வரும் திராவிட கட்சிகளால் ஆதி திராவிடர்களின் வாழ்வில் எந்தவொரு குறிப்பிடத்தக்க மாற்றத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. மாறாக இந்தியாவின் பூர்வகுடிகளான, ஆதி திராவிடர்கள் எனப்படும் தலித் மக்களின் வாழ்க்கை நாளுக்கு நாள் சாதிய ரீதியான அடக்கு முறைகளை எதிர்கொண்டு வருகிறது. முன்பு, ‘பிராமின் – பிராமின் அல்லாதோர்’ என இருந்த நிலை மாறி, இன்று, ‘தலித் – தலித் அல்லாதோர்’ என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது.

தமிழ்நாட்டின் 25.77 சதவிகித மக்கள்தொகையைக் கொண்டுள்ள தலித் சமூக மக்கள், தங்கள் வாழ்க்கைத் தரத்தின் கடைசி படிக்கட்டிலேயே இன்னமும் உள்ளனர். பாரிஸ் நகரின் சுரங்கத் தொழிலாளர்களுக்காக போராடி, இருட்டுச் சிறையில் அடைபட்டுக் கிடந்த எமிலி ஜோவைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதிய அண்ணாதுரையின் வழிவந்த திராவிட இயக்கத்தினர், ஆங்கிலேயர்களால் தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களைப் பறித்துக்கொண்ட கதையைப் பற்றியும், இளவரசன், நந்தினி பற்றியும், ஒண்டிக் குடிசையில் அண்டி வாழும் வெள்ளையம்மாக்களின் மத்தியில் ஆபாச நடனம் ஆடும் ஆதிக்க சாதியினரின் அடக்குமுறை பற்றியும் பேசக்கூட இன்று மறுக்கின்றனர்.

அரசியல் ரீதியாகத் தலித் மக்களின் முன்னேற்றத்துக்கு வழிவகை செய்ய 1994ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பஞ்சாயத்து ராஜ் திட்டத்துக்குப் பின், 2006ஆம் ஆண்டு கிராமப்புறங்களில் தலித் மக்களின் நிலை குறித்து ஆராய்ந்து வெளிவந்த அறிக்கையில், தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 221 கிராம பஞ்சாயத்துகளில் சுமார் 161 பஞ்சாயத்துகளில் வாழும் தலித் மக்கள், ஜாதி இந்துக்களின் அடக்குமுறைகளின் கீழ் வாழ்வதாக அறிவித்தது.

தமிழ்நாட்டில் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ஈரோடு, பெரம்பலூர், விழுப்புரம் மற்றும் கடலூர் போன்ற தலித் அடக்குமுறை அதிகம் உள்ள மாவட்டங்களில் சுமார் 36 வகையான சாதிய கொடுமைகள் தலித் சமூக மக்களின் மீது கட்டவிழ்த்து விடப்படுவதாகக் கூறுகிறது மற்றொரு சமீபத்திய அறிக்கை.

தலித்துகளுக்கு எதிரான அடக்குமுறைகளை விசாரிக்க அமைக்கப்பட்ட கமிஷன்களின் எண்ணிக்கை இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகம். ‘இதுவரை சுமார் 15-க்கும் மேற்பட்ட கமிஷன்களின் ஆய்வறிக்கைகள் சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்டாலும், இத்தகைய அடக்குமுறைகளில் இருந்து தலித் மக்களை மீட்பதற்கான எந்தவோர் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் திமுக, அதிமுக என மாறிமாறி ஆண்ட திராவிட கட்சிகள் எதுவும் எடுக்கவில்லை’ என்ற கோபம் தமிழக தலித் மக்களின் மனதில் வேரூன்றி வருகிறது.

கடந்த, 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, ஒட்டுமொத்த மக்கள் தொகையில் எஸ்சி - 24.6 சதவிகிதம் என்றும் எஸ்டி - 1.17 (மொத்தம் 25.77%) சதவிகிதம் உள்ள தலித் மக்களுக்கு 19 சதவிகிதம் மட்டுமே கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இது ஒருபுறமிருக்க, தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவிகித இடஒதுக்கீடு சலுகையை பிசி பிரிவினர் 30%, எம்.பி.சி பிரிவினர் 20%, எஸ்சி/எஸ்டி பிரிவினர் 19 சதவிகிதம் என்ற வகையில் பகிர்ந்துகொள்கிறார்கள் என்பதை சொல்லிக் கொள்வோம். மீதமுள்ள 31% ஓசி/எஃப்சி எனப்படும் உயர்சாதிப் பிரிவினரால் அரவமில்லாமல் அனுபவிக்கப்படுகிறது. இவர்கள் மக்கள்தொகை அடிப்படையில் 30% கீழ் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், இங்கு மற்ற பிரிவினர் இடஒதுக்கீடு பெறுவதை யாரும் பெரிதாகப் பேசுவதில்லை. தலித் மக்கள் பெறும் இடஒதுக்கீடு சலுகை மட்டும் உயர்சாதி ஆதரவு ஊடகப் பேச்சுகளிலும், மக்கள் மத்தியிலும் பூதாகரமாகப் பேசப்படுகிறது. மக்கள்தொகையின் அடிப்படையிலான சமூக நீதி என்று பார்க்கப்போனால், இன்னும் கூடுதலாக சுமார் 6.77% இடங்கள் தலித் மக்களுக்கு இடஒதிக்கீடாக வழங்கப்பட வேண்டும் என்பதே நியாயம்.

‘தமிழகத்தில் வாழும் தலித் சமூகத்தவரில் நான்கில் மூன்று குடும்பத்தவருக்கு சொந்த வீடு இல்லை’ என்கிறது கடந்த 2015ஆம் ஆண்டு இதே தேதியில் வெளிவந்த சாதி – சமூக - பொருளாதார, ஆய்வறிக்கை ஒன்று... பஞ்சாப், மேற்குவங்கம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் தலித் சமூகத்தினர் அதிக எண்ணிக்கையில் வாழ்கிறார்கள் என்பது கொசுறு செய்தி. அப்படி வீடின்றி வாழும் அவர்களில் 73 சதவிகித தலித் மக்களுக்குச் சொந்த நிலமும் கூட இல்லை என்பது வருத்தமான விஷயமாகும். தங்களது அன்றாட வாழ்வாதார தேவைகளுக்காக அடுத்தவர் நிலத்தில் மாடாக உழைத்து அவர்கள் ஈட்டும் வருமானம் மாதத்துக்கு வெறும் ஐந்தாயிரத்துக்கும் குறைவு என்பதே யதார்த்த உண்மையாகும். அதாவது, கிராமங்களில் வாழும் பிற சமூகத்தவரை விட சுமார் 67 சதவிகிதத்துக்கும் குறைவான வருமானத்தைக் கொண்டே தங்களது கல்வி, உணவு, உடை உட்பட அத்தனை அன்றாட தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய நிலையில் உள்ளனர் தலித் சமூகத்தவர்கள்.

கல்வியோ, வேலைவாய்ப்போ, தொழிலோ ஏதுவாக இருந்தாலும் பொருளாதார ரீதியான முன்னேற்றம் மட்டுமே தலித் மக்கள் மீதான வன்முறைகளைக் குறைப்பதற்கு வாய்ப்பளிக்கும். “முன்னேறியே தீருவேன்” என்ற வெறியோடு நகர்ப்புறத்தில் காலடி எடுத்து வைத்து தொழில் செய்யும் தலித் சமூகத்தவர்கள் மிகவும் குறைவு. “அப்படியே நகர்ப்புறத்தில் வந்தாலும் சில குறிப்பிட்ட மார்க்கெட் பகுதிகளில் தொழில் செய்வதற்கும், குடியிருப்பு பகுதிகளில் நிலம் வாங்குவதற்கும் அவர்கள் ‘தலித்’ என்ற தங்களது அடையாளத்தை மறைக்க வேண்டிய அவல நிலையிலேயே உள்ளார்கள்” என்கிறது கடந்த 2016ஆம் ஆண்டில் வெளிவந்த மதுரா சாமிநாதன் என்பவரது ஆய்வறிக்கை.

தமிழகத்தில் தலித் மக்களின் நிலைமை இப்படி இருக்க, கடந்த 2015ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ‘தலித் மற்றும் ஆதி திராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த தொகையில் 60 சதவிகிதத்தைக் குறைத்து விட்டது மத்திய அரசு’ என்ற உண்மை இங்கு எத்தனை பேருக்குத் தெரியும்?

இப்படி, அறியாமையில் உழலும் தலித் சமூக மக்களிடம் இன்று மெழுகுவத்திகளால் விழிப்பு உணர்வு ஏற்படுத்த முனைவது தவறு. தேவை ஒரு எரி தழல்!

- எம்.எச். ஃபரூக்

கட்டுரையாளர் பற்றி...

• திருச்சியைச் சேர்ந்த எம்.எஸ்.சி., பட்டதாரி.

• கடந்த சுமார் 16 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், ஆங்கில தினசரி நாளிதழ்களிலும், வார, மாத பத்திரிகைகளிலும் செய்தியாளராகப் பணியாற்றியவர்.

• ‘பாரதி வேந்தன்’ என்ற புனைப்பெயரில், அறிவியல், அரசியல், சமூக, பொருளாதார கட்டுரைகள் எழுதி வருகிறார்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017