மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

சிறப்புக் கட்டுரை: வெள்ளி மீன் - அழிவின் விளிம்பில் மாயாற்றின் பொக்கிஷம்!

சிறப்புக் கட்டுரை: வெள்ளி மீன் - அழிவின் விளிம்பில் மாயாற்றின் பொக்கிஷம்!

தமிழ்நாட்டிலேயே வேறு எங்கும் காணமுடியாத அபூர்வ உயிரினம் ஒன்று மாயாற்றில் வாழ்கிறது. அது வெள்ளி மீன் எனும் ஓர் அபூர்வ நன்னீர் மீன் இனம். முப்பது ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழ்நாட்டின் காவிரி, பவானி, மாயாறு நதிகளில் இந்த அபூர்வ வெள்ளி மீன்கள் நிறைய இருந்திருக்கின்றன.

ஆனால், இன்று காவிரியிலும், பவானியிலும் ஒரு மீனைக்கூட பார்க்க முடிவதில்லை எனும் அழிவு நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது இந்த மீன் இனம். இந்த அழிவுக்கு முழுமுதற் காரணம் மனிதர்களாகிய நாம்தான். கட்டுக்கடங்காத, சட்டவிரோதமான மீன்பிடி முறைகளும், எந்த தொலைநோக்குப் பார்வையுமின்றி வெளிநாட்டு மீன்களை வர்த்தகரீதியில், விற்பனைக்காக நம் ஆறுகளிலும், நீர்த்தேக்கங்களிலும் விடப்படுவதும், கட்டுப்பாடின்றி ஆறுகளிலிருந்து மணல் அள்ளப்படுவதும், ஆறுகளில் கலக்கும் நகர்ப்புற மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளும், இயற்கையான ஆற்றின்போக்கை தடுத்து பெரிய அணைக்கட்டுகள் கட்டப்பட்டதும் இந்த வெள்ளி மீன்களின் அழிவுக்கு பெரும் காரணிகள்.

ஆனால், மாயாற்றில் இன்னும் இந்த வெள்ளி மீன்களில் சில தப்பிப் பிழைத்திருக்கின்றன. இந்த வெள்ளி மீனை ‘மஹஷேர்’ (Mahsheer) என்று வடமொழியிலும், ‘பிலிமீனு’ என்று கன்னடத்திலும் அழைக்கின்றனர். ‘மஹி’ என்றால் மீன், ‘ஷேர்’ என்றால் புலி. காட்டிலிருக்கும் புலிகளைப் போல் ஆறுகளில் வாழும் மிகுந்த சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மீன் இனம் என்பது இதன் பொருள். ‘பிலிமீனு’ என்றால் வெண்மையான நிறத்தில் இருக்கும் மீன் என்று பொருள்.

கர்நாடக காவிரியில் இன்னும் வெள்ளி மீன்கள் இருக்கின்றன. அவற்றை செம்மஞ்சள் துடுப்பு வெள்ளி மீன்கள் என்கின்றனர் (Orange finned Hump Back Mahsheer). இந்த வகை வெள்ளி மீன்கள் காவிரி நதியையும் அதன் கிளை நதிகளையும் தவிர உலகில் வேறெங்கும் கிடையாது. இந்த மீன் இனம் காவிரி நதியில் மட்டுமே காணப்படும் ஓரிடவாழ்வி (Endemic fish).

மாயாற்றில் உள்ள வெள்ளி மீன் காவிரியில் காணப்படும் அதே செம்மஞ்சள் துடுப்பு மீன் இனம்தான் என்றாலும்கூட, இந்த மாயாற்று மீன் ஒரு தனி துணை இனமாக (sub species) சில அறிவியல் ஆய்வாளர்களால் நம்பப்படுகிறது (குறிப்பு: இந்திய வன உயிரின ஆராய்ச்சியாளர் திரு.ஏ.ஜே.டி. ஜான் சிங் அவர்களின் ஆய்வறிக்கையிலும், உலக இயற்கை நிதியத்தின் (WWF) இணைய பக்கத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது). மாயாற்றில் காணப்படும் இந்த மீன் இனத்தின் அறிவியல் பெயரை ‘Tor moyarensis’ என வைத்திருக்கிறார்கள் அறிஞர்கள். ஆனால் மாயாற்றில் உள்ள வெள்ளி மீன்கள் தனி இனமா? இல்லை, காவிரியில் வாழும் அதே மீன் இனம்தானா என்பதில் ஆய்வாளர்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.

இந்த வெள்ளி மீன்களை, ஆற்றின் புலிகள் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஒரு ஆற்றில் வெள்ளிமீன்கள் இருக்குமேயானால், அந்த ஆறு எந்தவித அசுத்தமும் இல்லாத ஆறாக இருக்குமாம். அதாவது, வெள்ளி மீன்கள் ஆறு மாசடைவதை சகித்துக்கொள்ள முடியாமல் அந்த இடத்திலிருந்து முற்றிலும் அழிந்துவிடுகின்றன. மனித வாடை இல்லாத, அடர் காடுகளில் ஓடும் மாயாறு போன்ற நதிகளில் மட்டுமே அவை எஞ்சியிருக்க வாய்ப்புள்ளதாகக் கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அவை ஆற்றில் ஆழம் அதிகம் உள்ள பகுதிகளிலும், பாறைகள் நிறைந்த தெளிந்த நீர் ஓடுகிற பகுதிகளில் மட்டுமே உயிர் வாழ்கின்றன.

20 முதல் 50 கிலோ எடை வரை இருக்கும் இந்த வகை மீன்களுக்கு விலை நிறைய கிடைக்கும் என்பதால், கள்ள வேட்டைக்காரர்களின் முதல் இலக்கு இந்த மீன்தான். மேலும் மாயாற்றங்கரையில் இருக்கும் தெங்குமரஹடா கிராமத்தில் தற்போது வெள்ளி மீன்களைப் பார்க்க முடிவதில்லையாம். மீன் வலையில் குட்டி மீன்கள்கூட சிக்குவதில்லை என்கின்றனர் அங்கிருக்கும் சிலர். துரதிர்ஷ்டவசமாக மாயாற்றிலும் இந்த வெள்ளி மீன்கள் அழிவை நோக்கிச் செல்கின்றன என்கின்றனர் அந்த கிராம மக்கள். ஒருவேளை, அப்படி இந்த மீன் இனம் மாயாற்றிலும் அழிந்துவிட்டால் அது ஒரு பெரும் சோகம் மட்டுமல்ல, ஈடு செய்ய முடியாத பேரிழப்புதான்.

தெங்குமரஹடாவுக்கு அருகில் உள்ள பெலிமீன்கடவு என்னும் இடத்தில்தான் எஞ்சியிருக்கும் வெள்ளி மீன்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால், கர்நாடகத்திலிருந்து வரும் கள்ள வேட்டைக்காரர்கள் பெலிமீன்கடவு பகுதியில் ஆற்றில் வெடிபோட்டு மீன்பிடிப்பதாகவும், அதனால் வெள்ளி மீன்கள் முற்றிலும் அழிந்துவிடும் பேராபத்தில் இருக்கின்றன என்கின்றனர் அந்த ஊர் மக்கள். சத்தியமங்கலம் புலிகள் காப்பக அதிகாரிகளும், நீலகிரி வடக்கு வனக்கோட்ட அதிகாரிகளும் கூடுதல் கவனமெடுத்து அந்த பெலிமீன்கடவு பகுதியையும், வெள்ளி மீன்கள் வாழும் மாயாற்றையும் பாதுகாத்தால் மட்டுமே நாம் இந்த மீன்களை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும்.

இப்படி அழிவின் விளிம்பில் இருக்கும் வெள்ளி மீன்களைப் பற்றி சமீபத்தில் ஒரு நற்செய்தி வந்துள்ளது. கோவைக்கு அடுத்த மேட்டுப்பாளையத்தில் பாயும் பவானி நதியில் மீன்பிடி வலையில் 2013ஆம் ஆண்டு செம்மஞ்சள் துடுப்புடன் ஒரு பெரிய மீன் ஒன்று பிடிக்கப்பட்டதாக ஒருவர் தனது இணையப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் (வன உயிரின ஆய்வாளர் திரு.ஏ.ஜே.டி.ஜான்சிங் அவர்களின் ஆய்வறிக்கை தகவல்). இது, அதிகாரபூர்வ தகவலாக இருக்குமாயின் பவானி நதியிலும் இன்னும் மீதமிருக்கிறது இந்த வெள்ளி மீன் இனம்.

1970-80களில், மகாராஷ்டிர மாநிலத்தில் இதுபோன்று வேகமாக அழிந்து வந்த நீலத்துடுப்பு வெள்ளி மீன்களை (Blue finned Mahsheer) செயற்கை முறையில் இனப்பெருக்கம் செய்யும் மீன் பண்ணை அமைத்து ஆயிரக்கணக்கில் மீன் குஞ்சுகளை ஆற்றில்விட்டனர். அதன்விளைவாக, அந்த மீன் இனம் அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டு இன்று ஆரோக்கியமான எண்ணிக்கையில் அங்கிருக்கும் ஆறுகளில் வாழ்கிறது.

அதுபோல், மாயாற்றில் வாழும் அரிய வகை வெள்ளி மீன் இனத்தை அழிவிலிருந்து மீட்டெடுக்க மாநில அரசும், மத்திய அரசும் உடனடியாக ஓர் ஆராய்ச்சிக்கு உத்தரவிட வேண்டும். ஆராய்ச்சியாளர்கள், வன அதிகாரிகள், சூழலியலாளர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைக்க வேண்டும். ‘இந்த வெள்ளி மீன்கள் தற்போது எந்தெந்த பகுதிகளில் வாழ்கின்றன? அவற்றை அழிவிலிருந்து காக்க என்ன செய்ய வேண்டும்?’ போன்ற கேள்விகளுக்கு விடைகாணும் அக்குழுவின் அறிக்கையை ஆராய்ந்து, அவர்கள் சொல்லும் வழிமுறைகளை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்.

தெங்குமரஹடா கிராமத்தில் மீன் பண்ணை ஒன்றை அமைத்து, இந்த செம்மஞ்சள் துடுப்பு வெள்ளி மீன்களை செயற்கை முறையில் இனப்பெருக்கம் செய்து காவிரி, பவானி நதிகளிலும், தற்போது அவை எஞ்சியிருக்கும் மாயாற்றிலும் வெள்ளி மீன் குஞ்சுகளை விடுவிக்க வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே இந்த அரிய வகை மீன் இனத்தை அழிவிலிருந்து நம்மால் காப்பாற்ற முடியும்.

இயற்கைக்கு நம் உதவி தேவையில்லைதான். ஆனாலும் நம்மால் ஓர் உயிரினத்துக்கு நேர்ந்த பேரழிவை சரிசெய்ய முடியும் எனும்போது, நம்மால் முடிந்த அனைத்தையும் செய்து அந்த உயிரினத்தை அழிவிலிருந்து காப்பது மனிதகுலத்தின் கடமை. இயற்கைக்கு உதவுவது என்பது ஏதோ நாம் அதற்குச் செய்யும் சேவை என்று நினைப்பது அறிவின்மை. உண்மையில், இயற்கைதான் நம்மை அரண்போல் காத்து நிற்கிறது.

கட்டுரையாளர் குறிப்பு : சக்தி

Photographs: Mahseer Fish pictures from Google images.

Moyar River by Sakthi(Author of this Article).

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017