மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

சிறப்புக் கட்டுரை: தலித் மக்களை வஞ்சிக்கும் தமிழக அரசு - ரவிக்குமார்

சிறப்புக் கட்டுரை: தலித் மக்களை வஞ்சிக்கும் தமிழக அரசு - ரவிக்குமார்

தமிழ்நாட்டில் சமூக நீதியைப்பற்றிப் பேசாத அரசியல் தலைவர்கள் இல்லை. பெரிய கட்சியிலிருந்து சிறிய கட்சிகள் வரை, தேசிய கட்சிகளிலிருந்து மாநிலக் கட்சிகள்வரை எல்லாமே தம்மை தலித் காவலர்களாகக் காட்டிக்கொள்ளவே விரும்புகின்றன. ஆட்சியாளர்களும் இதில் விதிவிலக்கல்ல. ஆனால், அரசியல் தலைவர்களின் / ஆட்சியாளர்களின் இந்த சமூக நீதி பேச்சுகள் யாவும் தலித் மக்களை ஏமாற்றுவதற்கான வெற்றுப் பேச்சுகள்தானே தவிர வேறில்லை. மாநிலம் எங்கும் அம்பேத்கர் சிலைகள் மட்டும் இரும்புக் கூண்டுகளில் அடைக்கப்பட்டு அவமானப்படுத்தப்படுவதும், அரசு அலுவலகங்களில் அம்பேத்கர் படத்தை வைப்பதற்கு இப்போதும் போராடவேண்டிய நிலை இருப்பதும் இதற்கு சில உதாரணங்கள்.

அரசு அலுவலகங்கள் மற்றும் கட்டடங்களில் தலைவர்களின் புகைப்படங்களை வைப்பது தொடர்பாக 1978ஆம் ஆண்டில் தமிழக அரசு அரசாணை (G.O. (Ms) No. 47, Public (General I) Department dated: 7.1.1978) ஒன்றைப் பிறப்பித்தது. பதவியிலிருக்கும் குடியரசுத் தலைவர், பதவியிலிருக்கும் பிரதமர், மகாத்மா காந்தி, பண்டித ஜவஹர்லால் நேரு, திருவள்ளுவர், அறிஞர் அண்ணா, பெருந்தலைவர் கே.காமராசர், சி.ராஜகோபாலாச்சாரியார், தந்தை பெரியார் ஆகிய ஒன்பது தலைவர்களின் படங்கள் வைக்கப்பட வேண்டும் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

புரட்சியாளர் அம்பேத்கர் நூற்றாண்டு நெருங்கி வந்ததாலும், தமிழ்நாட்டில் 1980-களில் ஏற்பட்ட தலித் எழுச்சியின் காரணமாகவும் அரசு அலுவலகங்களில் டாக்டர் அம்பேத்கரின் படத்தை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. அதன் விளைவாக மேற்கண்ட பட்டியலில் இருக்கும் ஒன்பது தலைவர்களோடு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும் என 1990ஆம் ஆண்டு தமிழக அரசு புதிதாக அரசாணை ஒன்றை (Public (General I) Department G.O. (Ms) No. 2363 Dated : 24.10.1990 ) வெளியிட்டது.

அரசாணை பிறப்பிக்கப்பட்டு கால் நூற்றாண்டு கடந்துவிட்ட நிலையிலும் அந்த அரசாணையைப் பெரும்பாலான அரசு அலுவலகங்களில் நடைமுறைப்படுத்துவதில்லை. சமூகநீதிக்குப் பெயர்பெற்ற தமிழ்நாட்டில் அரசியலமைப்புச் சட்டத் தந்தையான அண்ணல் அம்பேத்கருக்கு அளிக்கப்படும் மரியாதை இதுதான்.

ஓட்டு வங்கியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமென்பதற்காக சாதித் தலைவர்களின் பிறந்த நாள்களின்போது ஓடோடிச்சென்று மரியாதை செலுத்தும் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றி உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமையை இந்தியாவுக்குத் தேடித்தந்த அண்ணல் அம்பேத்கருக்கு அவரது பிறந்த நாளில் மரியாதை செலுத்துவதற்கு அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. சடங்குக்கு சில அமைச்சர்களை மட்டும் அனுப்புவார்கள், பெரும்பாலான ஆண்டுகளில் மாலை அணிவிக்க முதல்வர் போனதில்லை.

தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களின் நிலையோடு ஒப்பிட்டுப் பார்த்தால்தான் தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு தலித் மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்பது புரியும். படம் வைப்பது, சிலை வைப்பது போன்ற குறியீட்டு அளவிலான பிரச்னைகளாக இருந்தாலும் சரி, பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட பொருளாதாரப் பிரச்னைகளாக இருந்தாலும் சரி, தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களான ஆந்திரப்பிரதேசமும் தெலங்கானாவும் தமிழ்நாட்டைவிட வெகுதூரம் முன்னேறியிருக்கின்றன.

டெல்லியில் இருக்கும் தமிழ்நாடு இல்லத்தையும் ஆந்திர பவனையும் பார்த்தாலே போதும், இந்த இரு மாநில அரசுகளும் அம்பேத்கருக்கு அளிக்கும் மரியாதையில் உள்ள வேறுபாட்டை ஒருவர் புரிந்துகொள்ள முடியும். ஆந்திர பவனில் கம்பீரமாகக் காட்சியளிக்கும் அம்பேத்கரின் சிலை அதற்கான சாட்சியம் பகரும்.

அண்ணல் அம்பேத்கரின் 125ஆவது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் விதமாக மத்தியில் ஆளும் பாஜக அரசுகூட சில அறிவிப்புகளைச் செய்தது. ஆனால், சமூகநீதிக்கு உரிமைகோரும் தமிழக அரசு அதைக் கண்டுகொள்ளவே இல்லை. தெலங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தில் புரட்சியாளர் அம்பேத்கரின் 125ஆவது பிறந்த நாளைக் குறிக்கும் விதமாக 25 கோடி ரூபாய் செலவில் 125 அடி உயரம் கொண்ட அவரது உருவச்சிலை ஒன்றை நிறுவுவதற்கு திரு. சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. மிகப்பெரிய சிலைகளை வடிப்பதில் அனுபவம் கொண்ட சீன நாட்டில் அந்த சிலை வடிவமைக்கப்பட்டு வருகிறது.

தெலங்கானா அரசுக்குப் போட்டியாக ஆந்திரப்பிரதேச அரசும் புதிதாக உருவாக்கப்பட்டுவரும் அதன் தலைநகரான அமராவதியில் 125 அடி உயரம் கொண்ட அண்ணல் அம்பேத்கரின் உருவச்சிலையையும் அதையொட்டி 'ஸ்மிருதி வனம்’ என்ற பெயரில் ஒரு பூங்காவையும் அமைப்பதற்கு ஆணையிட்டுள்ளது. அதற்காக 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டிருக்கிறது. சிலை நிறுவுவதற்கான பூமி பூஜை ஏப்ரல் 14 அன்று முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது. பூமி பூஜைக்காக அம்பேத்கர் பிறந்த மோவ் என்னுமிடத்திலிருந்து தண்ணீரும், மண்ணும் எடுத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அதுபோலவே அம்பேத்கர் அரசியலமைப்புச் சட்டத்தை இந்த நாட்டுக்கு அளித்த நாடாளுமன்ற வளாகத்திலிருந்தும் தண்ணீரும் மண்ணும் எடுத்து வரப்படுகின்றன.

சிலை வைக்கும் விஷயத்தில் மட்டுமல்ல தலித் மக்களுக்கான திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதிலும்கூட இந்த மாநிலங்கள் நாட்டுக்கே முன்னுதாரணமாகத் திகழ்கின்றன. பட்ஜெட்டில் தலித் மக்கள் தொகையின் விழுக்காட்டுக்கு இணையாக நிதி ஒதுக்க வேண்டும் என்பது 1980இல் இந்திரா காந்தி அம்மையார் உருவாக்கிய திட்டமாகும். அதற்கு சிறப்புக் கூறுகள் திட்டம் (Special Component Plan – SCP ) எனப் பெயர். மாநில அரசுகள் அதை முறையாகக் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக அவ்வப்போது இந்திய திட்டக் கமிஷன் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கிவந்தது. ஆனால், சிறப்புக் கூறுகள் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு சட்டரீதியான அவசியம் எதுவும் இல்லாத நிலையில் பல்வேறு மாநிலங்களும் அதை செயல்படுத்தவில்லை. எனவே சிறப்புக்கூறுகள் திட்டத்துக்காக சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என தலித் மக்கள் நீண்டகாலமாகப் போராடி வருகின்றனர். தலித்துகளின் கோரிக்கையை மதித்து ஆந்திரப்பிரதேச மாநில அரசுதான் இந்தியாவிலேயே முதன்முதலாக அதற்கான சட்டத்தை இயற்றியது (ANDHRA PRADESH SCHEDULED CASTES SUB - PLAN AND TRIBAL SUB-PLAN (PLANNING, ALLOCATION AND UTILISATION OF FINANCIAL RESOURCES) ACT, 2013) அந்தச் சட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு தமிழ்நாட்டிலும் சட்டம் இயற்ற வேண்டும் எனப் பலமுறை கோரிக்கை எழுப்பியும், போராட்டங்களை நடத்தியும் எந்தப் பயனும் இல்லை.

ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் எஸ்சி/எஸ்டி மக்கள் தொகை 22.4% (எஸ்சி 17.1% , எஸ்டி 5.3%). தெலங்கானா மாநிலத்தில் எஸ்சி/ எஸ்டி மக்கள் தொகை 24.53% (எஸ்சி 15.45% எஸ்டி 9.08%). தமிழ்நாட்டின் எஸ்சி/எஸ்டி மக்கள் தொகை ஏறத்தாழ இந்த இரண்டு மாநிலங்களின் அளவுக்குத்தான் இருக்கிறது. 2011ஆம் ஆண்டு சென்சஸ்படி தமிழ்நாட்டின் எஸ்சி/எஸ்டி மக்கள் தொகை 21.1% (எஸ்சி 20% எஸ்டி 1.1%).

மக்கள் தொகை விழுக்காட்டில் தமிழ்நாட்டைவிட இந்த இரண்டு மாநிலங்களிலும் எஸ்சி /எஸ்டி மக்களின் விழுக்காடு சற்றே அதிகம் என்றபோதிலும் எண்ணிக்கையில் கணக்கிட்டால் தமிழ்நாட்டில்தான் அவர்களது எண்ணிக்கை அதிகம். 2011ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் எஸ்சி/எஸ்டி மக்கள் தொகை ஒரு கோடியே ஐம்பத்து இரண்டு லட்சமாகும். (எஸ்சி 144 லட்சம், எஸ்டி 8 லட்சம்). தெலங்கானாவில் உள்ள எஸ்சி/எஸ்டி மக்களின் எண்ணிக்கை 87.18 லட்சம். ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள எஸ்சி/எஸ்டி மக்களின் எண்ணிக்கை ஒரு கோடியே பத்து லட்சமாகும்.

அரசியல் விழிப்புணர்வை எடுத்துக்கொண்டாலும் தமிழ்நாட்டு தலித்துகள் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே தம்மை அரசியல் இயக்கங்களாகத் திரட்டிக்கொண்டு ஆட்சியாளர்களிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அத்தகைய வரலாறு ஆந்திராவிலோ தெலங்கானாவிலோ கிடையாது. இன்றைய அரசியல் களத்தை எடுத்துக்கொண்டாலும் ஆந்திரப் பிரதேசத்திலோ, தெலங்கானாவிலோ தமிழ்நாட்டில் இருப்பதுபோல தலித் மக்களுக்கென பலம் வாய்ந்த அரசியல் கட்சிகள் இல்லை.

தமிழ்நாட்டு ஆட்சியாளர்களின் தலித் விரோதப் போக்குக்கு சான்றுகளை நாம் அடுக்கிக்கொண்டே போகலாம். இந்தியாவில் முதன்முதலாக உருவாக்கப்பட தேசிய ஆணையம் எஸ்சி மக்களுக்கானதுதான். ஒவ்வொரு மாநிலமும் மாநில அளவிலான எஸ்சி கமிஷன்களை உருவாக்க வேண்டும் என்பது விதி. அதன்படி இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மாநில எஸ்சி ஆணையம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும்தான் அந்த ஆணையம் உருவாக்கப்படவே இல்லை. இதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தும் பலனில்லை.

தலித் மக்கள்மீதான வன்கொடுமைகளைத் தடுப்பதற்கென ‘விழிப்பு கண்காணிப்பு’ என்ற பெயரில் மாநில அரசு குழு ஒன்ற அமைத்துள்ளது. மாநில அளவில் முதலமைச்சர்தான் அக்குழுவுக்குத் தலைவர், மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் தலைவராக இருக்கிறார். மாநில அளவிலான குழுவோ, மாவட்ட அளவிலான குழுக்களோ கூட்டப்படுவதே இல்லை.

தீண்டாமை ஒழிக்கப்பட்ட கிராமங்களுக்கு விருது அளிக்கும் திட்டம் ஒன்றைத் தமிழக அரசு உருவாக்கியது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கிராமப் பஞ்சாயத்தைத் தேர்ந்தெடுத்து அதற்கு பத்து லட்ச ரூபாய் சிறப்பு நிதி அளிப்பதென்பது இந்தத் திட்டம். ஆனால், இந்தத் திட்டத்தின்கீழ் கிராமப் பஞ்சாயத்துகளைத் தேர்ந்தெடுக்கவோ, நிதி வழங்கவோ மாவட்ட ஆட்சியர்கள் அக்கறை காட்டுவதில்லை. இதற்கென ஒதுக்கப்படும் நிதி, செலவு செய்யப்படாமலேயே கிடக்கிறது.

தலித் மக்களிலேயே நலிந்த பிரிவினராக இருக்கும் புதிரை வண்ணார் மக்களுக்கென உருவாக்கப்பட்ட நல வாரியமும் முடக்கப்பட்டுக் கிடக்கிறது. அதற்கு பட்ஜெட்டில் ஒவ்வோர் ஆண்டும் ஒதுக்கப்படும் நிதியும் செலவு செய்யப்படுவதில்லை. இந்தியா முழுவதும் கையால் துப்பரவு செய்யும் தொழில் தடை செய்யப்பட்டாலும்கூட தமிழ்நாட்டில் இன்னும் அது ஒழிக்கப்படவில்லை. சாக்கடைகளைச் சுத்தம் செய்யும்போது விஷ வாயு தாக்கி உயிரிழக்கும் துப்புரவுத் தொழிலாளர் குறித்த செய்திகள் வந்தவண்ணமே இருக்கின்றன.

தலித் மக்களுக்கு எதிரான வெறுப்புப் பிரசாரத்திலும், ஆணவப் படுகொலைகளிலும் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு உருவெடுத்து வருவது எல்லோருக்குமே தெரியும். வெறுப்புப் பிரசாரத்தைக் கட்டுப்படுத்தவோ, ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த கட்டளைகளை நடைமுறைப்படுத்தவோ இதுவரை தமிழக அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

திமுக, அதிமுக என மாறி மாறி ஆட்சி செய்தாலும் அமைச்சரவையில் தலித் சமூகத்தவருக்கு அதிகாரம் உள்ள துறைகள் ஒதுக்கப்படுவதே இல்லை. பெயரளவுக்கே அவர்கள் அமைச்சர்களாக வைக்கப்பட்டுள்ளனர். கல்வியில், வேலை வாய்ப்பில் தலித் மக்கள் புறக்கணிக்கப்படுவது தொடர்கதையாகவே இருக்கிறது. தரமற்ற கல்விக்கு ஆதி திராவிட நலப் பள்ளிகளும், சுகாதாரமற்ற சூழலுக்கு ஆதி திராவிட மாணவர் விடுதிகளும் சாட்சியங்களாய் நிற்கின்றன. அரசுத் துறை ஒவ்வொன்றிலும் பின்னடைவு காலிப் பணியிடங்கள் எவ்வளவு என்பதைக் கண்டறிவதற்காக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் தலைமையில் உருவாக்கப்பட்ட உயர்நிலைக்குழு கூட்டப்பட்டதாக செய்தியே இல்லை.

இவை எல்லாவற்றையும் தொகுத்துப் பார்க்கும்போது, இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே மிக மோசமாக தலித்துகளை வஞ்சிக்கும் அரசாக தமிழக அரசுதான் இருக்கிறது என்ற முடிவுக்கே நாம் வர வேண்டியுள்ளது. இந்த இழிநிலைக்குக் காரணம் சமரசமற்ற போராட்டங்களை முன்னெடுக்க தலித் மக்களுக்கு தீரம் இல்லாத நிலையா? அல்லது ஆட்சியாளர்களின் நெஞ்சில் ஈரம் இல்லாதது காரணமா?

கட்டுரையாளர் குறிப்பு:

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017