மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

சிறப்புக் கட்டுரை: கேரளாவும் ஆடம்பரச் செலவுகளும்!

சிறப்புக் கட்டுரை: கேரளாவும் ஆடம்பரச் செலவுகளும்!

கடவுளின் பூமி, சுற்றுலாப் பயணிகளுக்கு சொர்க்க பூமி என்று அழைக்கப்படும் மாநிலம் கேரளா. மலையாளிகள் பொதுவாக அதிக வருவாய் ஈட்டுவதிலும் ஆடம்பர வாழ்க்கையை வாழ்வதிலும் அதிக ஆர்வம் காட்டுவது வழக்கம். இதன் காரணமாகவே, இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குப் பணிபுரியச் செல்வதில் முன்னிலையில் இருக்கின்றனர் மலையாளிகள்.

கடந்த 2014ஆம் ஆண்டு கேரள அரசு அதிகாரபூர்வமாக வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் உட்பட பல்வேறு நாடுகளில் சுமார் 23.63 லட்சம் மலையாளிகள் பணிபுரிவதாக அறிவித்திருந்தது. இந்த எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. வெளிநாடுகளுக்குச் செல்லும் மலையாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதினால் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் கேரளாவுக்கு அனுப்பும் பணத்தின் அளவும் பல மடங்கு உயர்ந்து வருகிறது. குறிப்பாக, ஒவ்வோர் ஆண்டும் ரூ.1 லட்சம் கோடி அளவிலான தொகையை வெளிநாடுகளில் வசிக்கும் மலையாளிகள் கேரளாவுக்கு அனுப்புகின்றனர்.

வெளிநாடுகளில் வசிக்கும் மலையாளிகள் கேரளாவுக்கு அதிக பணம் அனுப்பி வந்தாலும், கேரளா தொழில்மயமான இந்திய மாநிலங்களில் பின்தங்கிய நிலையிலும், வேலைவாய்ப்பின்மை விகிதங்களில் முன்னிலையிலும் இருப்பது ஏன்? கேரள மாநிலத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பணத்தின் அளவு என்பது, அந்நிய நேரடி முதலீட்டின் மூலம் மகாராஷ்டிரா மாநிலம் பெறக்கூடிய தொகையைவிட 3 மடங்கும், தமிழ்நாடு பெறக்கூடிய தொகையை விட 4 மடங்கும், குஜராத்தை விட 10 மடங்கும் அதிகமாகும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள மாநிலங்கள் தங்களுக்கு கிடைத்த அந்நிய நேரடி முதலீட்டைப் பயன்படுத்தி ஒரு வலுவான பொருளாதார மாநிலமாக தங்களை வலுப்படுத்தியுள்ளபோது வெளிநாடுகளில் இருந்து இத்தகையை அளவிலான தொகையை பெறக்கூடிய கேரளா, தங்களது மாநிலத்தின் வளர்ச்சிக்கு அதை முறையாகப் பயன்படுத்திக்கொள்ளாதது ஏன்? ‘மலையாளிகளின் ஆடம்பர வாழ்க்கைக்கான மோகமும், அவர்களின் செலவின முறைகளுமே இதற்கு முக்கியமான காரணம்’ என்கின்றனர் ஆய்வாளர்கள்.

திருவனந்தபுரம் மேம்பாட்டு ஆய்வு மையம் மேற்கொண்ட ஆய்வில், கடந்த பத்து ஆண்டுகளாக, வெளிநாடுகளில் இருந்து கேரளாவுக்கு அனுப்பப்பட்ட பணத்தில், பங்களா, ஆடம்பர கார்கள், தங்கம் போன்றவற்றில் மட்டுமே அதிகளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. இந்தியளவில் ஆடம்பர கார்களின் விற்பனையிலும், தங்கத்தின் பயன்பாட்டிலும் முன்னிலையில் இருப்பதும் மலையாளிகளின் ஆடம்பர வாழ்க்கையின் மோகத்தை எடுத்துக்காட்டுகிறது.

கேரளாவின் இந்த நிலையைப் புரிந்துகொள்ள Behavioural Economics என்று சொல்லக்கூடிய ‘பழக்க வழக்க பொருளாதாரத்தைப்’ பற்றிப் புரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். அதாவது ஒருவர் தனது செலவுகளை எப்படி மேற்கொள்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

சிகாகோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரிச்சர்ட் தாலர், மனிதர்கள் பணத்தை எவ்வாறு கையாள்கின்றனர் என்பதை விளக்க மனக் கணக்கியல் என்ற கருத்தை முன்வைக்கிறார். இந்த மனக் கணக்கியல் என்பது, மனிதன் தான் மேற்கொள்ளும் வரவு செலவுகளைச் சில பிரிவுகளாகப் பிரித்து வகைப்படுத்தி அதற்கேற்ப செயல்படுகின்றான். ஒருவர் தனது வருமானத்தையும், தனக்குச் சலுகைகளாக கிடைக்கக்கூடிய தொகையையும் வெவ்வேறு விதமாகச் செலவிடுகின்றார்; அல்லது, தனது வருமானத்தின் மூலதனத்தைப் பொறுத்தே செலவிடுகிறார் என்பதே ரிச்சர்ட் முன்வைக்கும் கருத்தாகும்.

உதாரணத்துக்கு, கேரளாவில் இருந்து செல்லக்கூடிய செவிலியர்களை எடுத்துக்கொள்வோம். அமெரிக்கா, ஐரோப்பிய, வளைகுடா நாடுகளில் 60,000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணிபுரிகின்றனர். இந்தியாவில் இவர்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சமாகும். ஆனால், அமெரிக்காவில் பணிபுரியும் ஒரு செவிலியரின் ஆண்டு வருமானம் ரூ.45 லட்சமாகும். இந்தச் சம்பளத்தை வைத்துக்கொண்டு அமெரிக்காவில் ஒரு செவிலியரால் ஒரு நடுத்தரக் குடும்பத்தினரின் வாழ்க்கையை நடத்த இயலும். ஆனால், அதே செவிலியர் கேரளாவுக்குக் குடிபெயரும்போது அவர் மிகப்பெரிய ஆடம்பர வாழ்க்கையை நடத்த இயல்கிறது. திடீரென்று ஒருவரின் வருமானம் அதீத வளர்ச்சியை (Windfaal gains) எட்டும்போது அவரின் செலவின முறை மாறுகிறது.

கடந்த 2012ஆம் ஆண்டு கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தான்சானியாவின் கிராமப்புறங்களில் மக்கள் தங்களுக்கு கிடைக்கக்கூடிய அதீத வருமானத்தை எவ்வாறு கையாள்கின்றர் என்பது குறித்து ‘லே பாண்’ மற்றும் ‘லூக் சிரிச்டியன்சென்’ மேற்கொண்ட ஆய்வில், மக்கள் தங்களுக்கு திடீரென்று கிடைக்கும் அதீத வருமானம் அல்லது லாபத்தைக் கல்வி போன்ற அத்தியாவசிய தேவைக்குச் செலவிடுவதைவிட, மது, புகையிலை போன்ற ஆடம்பர பொருட்களுக்கே செலவிடுவது தெரியவந்துள்ளது. எனவே மலையாளிகளும் தங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து கிடைக்கக்கூடிய பணத்தைக் கல்வி போன்றவற்றுக்குச் செலவிடாமல் பங்களாக்கள் கட்டுவது, கார்கள் போன்ற ஆடம்பர பொருள்களுக்காக செலவிடுவதில் அதிக ஆர்வம் காட்டுவதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.

ஒருவருக்குப் புதையல் மூலமாகவோ அல்லது லாட்டரி சீட்டுகள் மூலமாகவோ திடீரென்று அதீத லாபம் கிடைப்பதை புதையல் லாபம் (Windfaal gains) என்று அழைக்கின்றனர். இந்தப் புதையல் லாபம் என்பது நிலையற்ற ஒன்றாகும். அது காலத்துக்கேற்ப மாறக்கூடியவையாகும். உதாரணத்துக்கு, வெளிநாட்டில் சாதாரண வாழ்க்கையைக் கடைப்பிடித்து வரும் ஒரு மலையாளி, இந்தியாவுக்கோ அல்லது கேரளாவுக்கோ வரும்போது அவரால் ஆடம்பர வாழ்க்கையைக் கடைப்பிடிக்க இயலும். ஆனால், அவர் மீண்டும் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அவர் தனது சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பத் தள்ளப்படுகிறார்.

ஒருவரின் செலவின முறையை அவரின் வருமான மூலதனமே தீர்மானிக்கிறது. வெளிநாடுகளிலிருந்து கிடைக்கக்கூடிய பணத்தை மலையாளிகள் எவ்வாறு செலவிடுகின்றனர்; அவர்களின் செலவு முறைகள் போன்றவற்றை இங்குள்ள கொள்கை வடிவமைப்பாளர்கள் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். இவர்களின் மனநிலையை ஓர் எடுத்துக்காட்டாக எடுத்துக்கொண்டு அரசாங்கங்களும் கொள்கை வடிவமைப்பாளர்களும் தங்களின் திட்டங்களையும், கொள்கைகளையும் வாக்குக்க வேண்டியது அவசியமாகும்.

உதாரணத்துக்கு, அரசு வழங்கக்கூடிய மானியம் இடைத்தரகர்களுக்குச் சென்று சேருவதால் ஏழை மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையை மாற்றவே மத்திய அரசு நேரடி மானிய திட்டத்தில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையின் மூலம் ஏழை மக்களுக்கு உரிய மானியம் சென்று சேரும். ஆனால், இத்தோடு மட்டும் அரசின் நடவடிக்கை நின்றுவிடக் கூடாது. மக்களுக்குச் செல்லக்கூடிய மானியத்தை மது போன்ற தேவையற்ற செலவுகளுக்குப் பயன்படுத்தாமலிருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொகுப்பு: பிஜூ டாமினிக்

நன்றி: லைவ் மின்ட்

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 14 ஏப் 2017