மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

பவர் பாண்டி - விமர்சனம்!

பவர் பாண்டி - விமர்சனம்!

“என்ன பண்ற?”

“உன்னைப்பத்திதான் நினைச்சுக்கிட்டு இருக்கேன்... நீ என்னை நினைச்சியா?”

“உன்னைப்பத்தி நினைச்சதாலதான் மெஸேஜ் பண்ணேன்”.

இது இரு காதலர்களுக்குள் நடைபெறும் உரையாடல் என்பது படிக்கும்போதே தெரிகிறது. ஆனால், அந்தக் காதலர்களுக்கு வயது ஐம்பதைத் தாண்டியதாக இருந்தால் இந்த வசனத்தைப் படிக்கும்போது உண்டாகும் ரியாக்‌ஷன் எப்படிப்பட்டதாக இருக்கும்? அதற்கான விடைதான் ‘பவர் பாண்டி’.

பேத்தியையும், பேரனையும் கண்டுவிட்டு அவர்களுடன் கொஞ்சிக் குலாவி மகனின் குடும்பம்தான் தன் குடும்பம் எனும் நம்பிக்கையில் வாழும் ஒரு பேரிளம் வாலிபன் ராஜ்கிரண்.

கையில் பையுடனோ, பேரன், பேத்திகளுடனோ, நாய்க்குட்டிகளுடனோ சாலையில், பூங்காவில் நடந்துசெல்லும் வயதானவர்களைப் பார்த்திருப்போம். அந்தமாதிரியான ஒருவர்தான் ராஜ்கிரண். ஆனால், ஒரு காலத்தில் சினிமாவில் மிகப்பெரிய ஃபைட் மாஸ்டர். இப்போது, மகன் ஃபைல் மறந்ததும் ஆஃபீஸுக்குக் கொண்டு சென்று கொடுப்பதும், பேரன், பேத்திகளை விளையாட அழைத்துச்செல்பவருமாக இதுதான் தன் வாழ்க்கை... இதுதான் தன் சந்தோஷம் என வாழும் ஒரு பெரியவர்.

‘என்னை அவன் குடும்பத்தில் ஒருவனாக நினைக்கிறானா?’ என்ற கேள்வி, பிரச்னையால் ஏற்பட வீட்டைவிட்டுக் கிளம்புகிறார். அப்படிக் கிளம்பியவர் முதியோர் இல்லத்துக்கோ, ஆதரவற்றோர் ஆசிரமத்துக்கோ செல்லாமல் புல்லட்டில், கூலர்ஸ் ஹெல்மெட் சகிதம் தனது முதல் காதலைத் தேடிச் செல்வதுதான் மேலே சொன்ன சோகமான கதையின் மீது சலங்கையைக் கட்டிவிட்ட அராஜகம்.

பிரசன்னா, சாயா சிங், ரின்சன் சைமன் ஆகியவர்கள் கச்சிதமான தேர்வு. பேரனாக நடித்திருக்கும் மாஸ்டர் ராகவன் தாத்தாவை விட நடிப்பிலும் பின்னிபெடலெடுக்கிறார். ரேவதி இத்தனை அசால்ட்டாக ஒரு கேரக்டரை தன்னுள் கொண்டு வெளிப்படுத்துவது அவரை சமரசப்படுத்தி நடிக்கவைக்கும் கதைகள் உருவாவதற்கான ஒரு ஓப்பனிங்காகவே பார்க்கலாம். கிராமத்து வெகுளித்தனம் தெரிய வேண்டும் என்பதற்காக குளோஸ்-அப் காட்சிகளில் சிரிப்பதைத்தவிர மடோனா செபாஸ்டியன் பூந்தென்றலாகவே இருக்கிறார்.

வித்யுலேகா ராமனை இன்னும் எத்தனைப் படங்களுக்கு ஹீரோ ஏமாற்றும் கேரக்டராகவே நடிக்கவைக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. மாமனை தங்கச்சி ஜூட் விடுவதை புரிந்துகொள்ளமுடியாத அளவுக்கு வெள்ளந்தி கேரக்டர் அவர். பொல்லாதவன் படத்தின் கிளைமேக்ஸ் ஃபைட்டில் புரூஸ்லீ போல யதேச்சையாகத் தெரிந்த தனுஷின் வெறித்தனம், புரூஸ்லீ-யின் ரசிகனாக பாடி லேங்குவேஜ் காட்டும்போது வொர்க்-அவுட் ஆகவில்லை. மற்றபடி, கிராமத்து மொழியில் கலக்குகிறார். என்ன ஆனாலும், தூக்கமுடியாமல் மண்வெட்டியைத் தூக்குவது தெரிந்துவிடுகிறதே ப்ரோ. அதை மட்டும் சரி செய்தால், ஒரு முழு இயக்குநர் உருவாகிவிட்டது உறுதி. கோலிவுட்டில் தனக்கு தனி இடத்தை பின்னணி இசையில் ஒதுக்கிவைக்கத் தொடங்கிவிட்டார் சீன் ரோல்டான். ஆக, நடிகர் - தயாரிப்பாளர் - பாடலாசிரியர் - பாடகர் என நான்முகம் கொண்ட தனுஷ் தனது ஐந்தாவது முகமான இயக்குநர் பதவியிலும் வெற்றி பெறுகிறார். ‘தட்டித் தூக்கிட்டோம்ல’ என ஒரு பஞ்ச் டையலாக் மட்டும் படத்தில் வைத்ததன் அர்த்தம் புரிகிறது.

‘டூரிங் டாக்கீஸ்’ என்ற திரைப்படத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கினார். அதில் இரண்டு கதைகள் இடம்பெற்றன. முதல் பாதியில் வந்த கதை ஒரு படம் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணம். இரண்டாவது கதை ஒரு திரைப்படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம். இதில் முதல் கதையைத் தான் தனுஷ் படமாக்கியிருக்கிறார் என்று சொன்னால் வியப்பாகியிருக்கும். ஆனால், அந்த மோசமான கதையிலும் ஒரு காதல், ஒரு பாசம், ஒரு அன்பு என அனைவரும் நேசிக்கும் விதத்தில் ஒரு படமாக எப்படி இயக்க முடியும் என்பதை ‘பவர் பாண்டி’ திரைப்படத்தைப் பார்த்தால் தெரியும்.

வீட்டில் இருக்கும் அப்பா - அம்மாவுக்கு அந்தக் குடும்பத்தினர் குறைந்தபட்சமாய் செய்யும் உதவி, அவர்களுக்கு வயதாகிவிட்டதை உணர்த்தாமல் இருந்தாலே போதும் என்பது ‘பவர் பாண்டி’ சொல்லும் சேதி. வயசான காலத்துல சும்மா இருக்கமாட்டியா? என்ற ஒரு கேள்விக்கு, சின்ன வயசுல நீ எப்பவும் அப்பா மேல ஏறி விளையாடிக்கிட்டே இருப்பே. உன்னை நான் எப்பவும் தொந்தரவா நினைச்சதே இல்லை ராசா அல்லது ஏண்டா சும்மா இருக்குறதுன்னா அவ்ளோ ஈசியா போச்சா. அது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? ஆகிய இரண்டு நிலைகளுக்குள் மாறி மாறி பயணம் செய்கிறார் பவர் பாண்டி.

ஒரு டீன்-ஏஜ் காதல் ஜோடி, நீ உன் வாழ்க்கையை வாழ்ந்துக்கிட்டு இருக்கியா? இல்லை, உன் அப்பா அம்மா இதுதான் வாழ்க்கைன்னு சொல்றதுக்கு பின்னாடி போய் வாழப்போறியா? என்று விவாதிப்பது ஆரோக்கியமானதாகத் தோன்றும் இச்சமூகத்துக்கு. அதையே 50 வயதைக் கடந்தவர்கள் விவாதித்தால் அபத்தமாய் தெரிவது ஏன்? 18 வயதில் உனக்குத் துணையா நான் வரணும் என்பது காதலாகவும், ஐம்பது வயதில் ஒருவருக்கொருவர் துணையாய் இருப்போம் என்பது சமூக சீர்கேடாகவும் தெரிவது ஏன்? முதல் காதல் எந்த வயதிலும் வரலாம் என்பதன் நியதி, அதை மீள்கொணரும் தருணம்... மொத்த வாழ்வையும் அசைபோடும் ஐம்பது வயதில் வரும்போது உடைபடுவது ஏன்? என்ற பல கேள்விகளுக்குப்பின் பயணிக்கிறார் பவர் பாண்டி.

சமூகம் சுமத்திய அத்தனைக் கடமைகளையும் முடித்துவிட்ட ஆண் அல்லது பெண்ணுக்கு ஒரே வயதையொத்த ஓர் உயிர் எந்த பந்தத்துக்குள் வந்தாலும் கசப்பதேன்?

குறிப்பாக, இருபதாம் நூற்றாண்டின் முதல் கால்பகுதியில் 50 வயதைக் கடந்துகொண்டிருப்பவர்கள்தான் ‘பவர் பாண்டி’ படத்தின் பேசுபொருளினால் அதிகம் பாதிக்கப்படுபவர்களாக இருக்கிறார்கள். மிகவும் இறுக்கமான வாழ்க்கைச் சுழற்சி. தனக்காகவே நேரம் செலவிடமுடியாத கமிட்மென்ட். உலகத்தைப் பற்றிய கவலை இல்லாமல் போட்டிகளின் பின்னாலான ஓட்டம் என சென்றுகொண்டிருக்கும் சூழலில் பெற்றவர்களையோ, பெற்ற பிள்ளைகளையோ கண்டுகொள்ள நேரமில்லை. ஆனால், இந்த சுழற்சிக்கு ஒரு பாதிப்பு ஏற்படும் வகையில் ஏதாவது நிகழ்ந்துவிட்டால் மானமே போச்சு என குதிக்க மட்டும் நேரம் இருக்கும். அப்படி ஒரு சூழலில்தான் வீட்டைவிட்டு வெளியேறுகிறார் பவர் பாண்டி.

புதிய நண்பர்களுடன் புல்லட் டிரைவ், புதிய டெக்னாலஜியின் அறிமுகம், அதன்மூலம் முதல் காதலியைக் கண்டுபிடிப்பது என அவரது பயணம் 150 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய புல்லட்டாக இருந்தாலும் 40இல் சுகமாக பயணிக்கவைக்கிறது.

தந்தையின் தோள்களில் கடைசியாக சாய்ந்து உட்கார்ந்தது எப்போது? திருமணத்தன்று கட்டியணைத்தபின் எத்தனை முறை அன்பாக உங்களது பெற்றோரைக் கட்டியணைத்திருக்கிறீர்கள்? என்ற கேள்வியெல்லாம் படம் பார்த்தபிறகு மனதில் எழுந்தால் பவர் பாண்டியும், பூந்தென்றலும் ஒன்று சேர்ந்துவிட்டார்கள் என்று அர்த்தம். இல்லையென்றால், அவர்கள் இருவரையும் இந்த சமூகம் அடுத்த 20 ஆண்டுகளுக்கும் பிரித்தே வைத்திருக்கிறது என்று கொள்ளலாம்.

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

வெள்ளி 14 ஏப் 2017