மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஏப் 2017

பன்னீர் - பழனிச்சாமி கூட்டணி: வெளியேறுகிறார் தினகரன்?

பன்னீர் - பழனிச்சாமி கூட்டணி: வெளியேறுகிறார் தினகரன்?

அதிமுகவில் அடுத்தக்கட்ட அதிரடி காட்சிகள் அரங்கேறத் தயாராகி வருகிறது. எதிரெதிர் முகாம்களில் இருந்தவர்கள் இணைகிறார்கள். அதிமுக கட்சி பிளவு, இரட்டை இலை முடக்கம், தலைமைச் செயலகத்தில் ரெய்டு, இறுதியாக ஆளும் அமைச்சர் வீட்டிலேயே ரெய்டு, இடைத்தேர்தல் நிறுத்தம், அடுத்ததாக எப்போது ஆட்சி கவிழும் என்கிற அச்ச நிலையில் அமைச்சர்களும், எல்.எல்.ஏ.க்களும் மன உளைச்சலிலிருக்கிறார்கள்.

அதிமுகவின் ஆட்சிக்காலம் இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கும் நிலையில் ஆட்சியை கவிழ்த்தால் யாருக்கும் எந்த நன்மையுமில்லை என தொலை நோக்குப் பார்வையில் சிந்தித்த அமைச்சர்கள் சிலர் வெளிப்படையாகவே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் புலம்பியிருக்கிறார்கள். விரைவில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று கடந்த 10ஆம் தேதி கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதோடு நீங்கள் எந்த முடிவுகளை எடுத்தாலும் உங்கள் பின்னால் நாங்கள் நிற்கிறோம் என பேசியிருகிக்கிறார்கள். இதனால் உற்சாகமான பழனிச்சாமி, உடனடியாக பன்னீர் செல்வத்திடம் பேச வேண்டும் என்று ஒருவரை தூது அனுப்பியிருக்கிறார். பன்னீர் செல்வமும் என்ன விஷயமென்று கேட்டுவிட்டு, அவரிடம் போனில் பேசுவதாக சொல்லி அனுப்பியிருக்கிறார். இதற்கிடையில் எடப்பாடியின் தரப்பிலிருந்து இறங்கி வருவதாக பன்னீர் செல்வம் அவரின் டெல்லி 'பாஸ்' கிட்ட செய்தியை பகிர்ந்திருக்கிறார். டெல்லி மேலிடமும் பன்னீர் சொன்ன விசயத்திற்கு இசைந்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக அதிமுகவில் அடுத்தகட்ட ஆபரேஷன் தயாராகி வருகிறது.

இந்த நிலையில் ஏப்ரல் 14, மாமேதை அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் துறைமுக வளாகத்திலுள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலையிடச் சென்றார். மாலையிடச் சென்றவர் தினகரனை அழைக்கவில்லையாம். அவர் சென்ற பிறகு இந்த தகவலை தினகரனிடம் சொல்லிய செங்கோட்டையன், நாமும் அம்பேத்கர் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செய்ய வேண்டுமெனக் கூறி தினகரனை கோடம்பாக்கதிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலையிட அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்று விட்டு திரும்பும் வழியில் தினகரனிடம், ’வர வர பழனிச்சாமியின் போக்கு சரியில்லை. ஆளும் கட்சியின் அமைச்சர் ஒருவர் வீட்டில் வருமான வரித்துறையினர் நுழைந்து சோதனை நடத்தியதைக் கண்டித்து நீங்க அறிக்கை விடச் சொல்லியும் அவர் அதைக் கண்டிக்கவில்லை. ஒரு அறிக்கையைக் கூடவா அவரால் இன்னும் வெளியிட முடியவில்லை. அவர் நம்ம ஆளா? இல்லை அவர்களது ஆளா? கட்டுச் சோற்றுக்குள் பெருச்சாலியைக் கட்டி வைத்தது போல இருக்கிறது நம் நிலைமை. சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் கட்டப்பட்ட புதிய பில்டிங்கை அமைச்சர் விஜயபாஸ்கர் திறக்கச் சென்றதற்கு ’நீங்கள் சென்று திறக்க வேண்டாம்; அதை அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைக்கட்டும் என்று தடை போட்டுள்ளார். உங்களை ஏதும் கேட்காமலே எல்லா முடிவுகளையும் எடுத்து வருகிறார்.

இதுகூடப் பரவாயில்லை; கட்சிக்குள் எந்தக் குடும்ப ஆதிக்கம் வரக் கூடாது என்று நீங்கள் முடிவு செய்தீர்களோ, அவர்களுடனேயே நெருங்கிய தொடர்பிலிருக்கிறார். இடைதேர்தலில் நிற்கவே இவர்தான் காரணம். உங்கள் சித்தப்பாவிடம் பல்வேறு விஷயங்களைச் சொல்லியிருக்கிறார். அவர் மூன்று எழுத்துகள் கொண்ட பத்திரிகையாளர் இருவரிடம் நிறைய விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். அப்படியே அந்த விஷயம் வருமான வரித்துறைக்கு சென்றது. அவர்கள் அங்கிருந்து டெல்லிக்கு தகவலைக் கூறிய பிறகுதான் ரெய்டு நடந்திருக்கிறது. இதெல்லாம் உளவுத்துறை ரிப்போர்ட். உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை உங்களுக்குச் சொல்லாமல் ஏமாற்றி வருகிறார்கள்' என்று தினகரனிடம் புலம்பிய செங்கோட்டையன், ’இனி உங்களை கட்சியிலிருந்து கட்டம் கட்ட அனைத்து வேலைகளும் நடந்து வருகிறது. எது நடந்தாலும் நானும் சில அமைச்சர்கள், எல்.எல்.ஏ.க்கள் உங்களுடன்தான் இருப்போம்’ என்று உருக்கமாகச் சொல்லியிருக்கிறார்.

இதையெல்லாம் பொறுமையாக கேட்ட தினகரன் 'என்ன நடக்கிறது என்று பார்ப்போம். நான் அவர்களுக்கு தொந்தரவாக ஒரு நாளும் இருந்ததில்லை. என்னைப் பலி கொடுக்க என் குடும்பத்திலேயே ஆட்கள் இருக்கும்போது இவர்களைச் சொல்லி என்ன செய்வது, எது நடந்தாலும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவரவர் எடுக்கும் ஆயதம் அவர்களுக்கே திரும்பும் ' என்று சொல்லியிருக்கிறார்.

தினகரனின் தரப்பில் இப்படி இருக்க, எடப்பாடி பழனிச்சாமியிடம் பன்னீர் பேசுவதையும், அதிமுகவில் மீண்டும் இணைவதை விரும்பாத இரண்டு நபர்கள் பன்னீரின் கூடாரத்திலிருந்து வெளியேற காத்திருக்கிறார்கள். பன்னீருக்கு சட்ட ரீதியாக பல்வேறு உதவிகளை செய்து வந்த பி.ஹெச்.பாண்டியனும் மனோஜ் பாண்டியனும் கடந்த மூன்று நாட்களாக பன்னீரைச் சந்திக்க வருவதில்லையாம். பன்னீரின் போக்கு பிடிக்கவில்லை என்பதால் வருவதில்லை என்று தகவல்கள் வருகிறது.

அதிமுகவில் பிரிந்த இரண்டு அணிகள் இணைந்து, புதிதாக மீண்டும் தினகரன் தலைமையில் இன்னொரு புதிய அணி உருவாகப் போகிறதா? விரைவில் விடை தெரிந்துவிடும்.

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

வெள்ளி 14 ஏப் 2017