Rஅனைத்து வீடுகளிலும் இணைய வசதி!

public

100 சதவிகித எழுத்தறிவு பெற்ற மாநிலமாக உள்ள கேரளம் தனது அடுத்த இலக்காக 100 சதவிகித இணைய வசதி திட்டத்தை விரைவில் கொண்டுவரவுள்ளது.

இந்தியாவில் 100 சதவிகித எழுத்தறிவு பெற்ற ஒரே மாநிலமாகக் கேரளம் உள்ளது. குடிநீர் குழாய்கள் வசதி, கழிவறை வசதி எனப் பல முக்கியத் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச்சென்ற கேரளம் தற்போது அனைத்து வீடுகளுக்கும் இணையச் சேவையைக் கொண்டு சேர்ப்பதையும் ஏழை வீடுகளுக்கு இலவச இணையச் சேவை அளிப்பதையும் அடுத்த மைல்கல்லாகக் கொண்டுள்ளது. அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசின் இந்தக் கனவுத் திட்டத்துக்கு நவம்பர் 6ஆம் தேதி அன்று ஒப்புதல் கிடைத்துள்ளது.

இணைய வசதியைப் பெறுவது குடிமக்களின் உரிமை என்றும், 20 லட்சம் ஏழை மக்களுக்கு இலவச இணையச் சேவை அளிப்போம் என்றும் கேரள இடது ஜனநாயக முன்னணி கட்சி தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. இந்த நிலையில் தற்போது இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இது குறித்து கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக், “இணைய வசதியைப் பெறுவது குடிமக்களின் அடிப்படை உரிமை. ரூ.1,548 கோடி மதிப்பில் அமைக்கப்படும் கேரள ஃபைபர் ஆப்டிகல் திட்டத்துக்கு அமைச்சரவையின் இறுதி ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்தத் திட்டத்துக்கான பணிகள் 2020ஆம் ஆண்டு டிசம்பருக்குள் நிறைவடையும். இதன்மூலம் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள 20 லட்சம் குடும்பங்களுக்கு இலவச இணையச் சேவை கிடைக்கும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று (நவம்பர் 7) கூறியுள்ளார்.

இதுதொடர்பாக கேரள மாநில அமைச்சரவை கூட்டத்துக்குப் பின்பு அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கேரள ஃபைபர் ஆப்டிகல் திட்டத்துக்கான பணிகளில் கேரள மின்சார வாரியம், பொதுத் தகவல் தொழில்நுட்பப் பிரிவு, கேரள மாநில தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து செயல்பட உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ஃபைபர் நெட்வொர்க் அமைப்பதும், வை ஃபை டிரான்ஸ்மிஷன் அமைப்பதும் இந்தத் திட்டத்தின் பணியாகும். இந்தப் பணிகள், சில வாரங்களில் திருவனந்தபுரத்திலிருந்து தொடங்கும் எனவும் கேரள அரசு தெரிவித்துள்ளது.

உலக அளவில் பின்லாந்து, எஸ்தானியா, பிரான்ஸ், ஸ்பெயின், கிரீஸ் உள்ளிட்ட சில நாடுகள் மட்டுமே இணைய வசதியைப் பெறுவது குடிமக்களின் அடிப்படை மனித உரிமை என அறிவித்துள்ளன. இந்தியாவில் மற்ற மாநிலங்களைப் பொறுத்தவரையில் தமிழ்நாடு, தெலங்கானா உள்ளிட்ட சில மாநிலங்கள் மட்டுமே இலவச இணையச் சேவை அல்லது குறைந்த கட்டணத்திலான இணைய சேவையை வழங்குவதற்கான முயற்சிகளை எடுத்துள்ளன. ஆனால் தற்போது அனைத்து இல்லங்களில் வைஃபை திட்டத்தைக் கொண்டுவர தீவிரம் காட்டி வருகிறது கேரள அரசு.

அரசின் இந்த அறிவிப்பு கேரள பள்ளி கல்லூரி மாணவர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *