வன்முறை, போராட்டத்தை நிறுத்துங்கள்: உச்ச நீதிமன்றம்!

public

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் வெடித்து வன்முறையாக மாறி வருகிறது. மாணவர்கள் போலீசார் இடையே மோதல், பேருந்துகளை எரித்தல் ஆகிய சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. குறிப்பாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து நேற்று இரவு விடிய விடிய ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அலிகா் பல்கலைக்கழக மாணவர்கள் டெல்லி காவல் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டு கைதான 50 மாணவர்கள் நேற்று இரவு விடுவிக்கப்பட்டனர்.

இதுகுறித்து ஜாமியா துணைவேந்தர் நஜ்மா அக்தர், பல்கலை வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பு பல்கலைக்கழக நிர்வாகத்தின் அனுமதியை காவல்துறை பெறவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். சமூக ஆர்வலர் ஹர்ஷ் மந்தர் மற்றும் வழக்கறிஞர் சவுத்ரி அலி ஜியா கபீர் ஆகியோர் கல்காஜி காவல் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்ட மாணவர்களைச் சந்தித்து பேசினர்.

அவர்களிடம், பல்கலை வளாகத்துக்குள் போலீசார் நுழைந்த பிறகு பல்கலையிலிருந்த விளக்குகள் அணைக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ள மாணவர்கள், காவல்துறையினர் மாணவிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும், இது சிசிடிவியில் பதிவாகக் கூடாது என்பதற்காகவே விளக்குகள் அணைக்கப்பட்டதாகவும் அவர்கள் அளித்துள்ள அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அதற்காக நிகழும் வன்முறைச் சம்பவங்களைக் குறிப்பிட்டும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குடியுரிமை சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அலிகா் பல்கலைக்கழக மாணவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது குறித்தும் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் இன்று முறையீடு செய்யப்பட்டது.

வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் மாணவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறை” குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். டெல்லி வழக்கறிஞர், போலீசார் இடையிலான மோதல் சம்பவத்தின் போது டெல்லி உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது போல, இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் இதில் மனித உரிமை மீறல் நடந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனை விசாரித்த தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு, போராட்டம் என்ற பெயரில் பொது சொத்துகளுக்குச் சேதம் விளைவிப்பதை அரசியல் சாசனம் அனுமதிக்காது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவே போலீசார் உள்ளனர். இதுபோன்ற சூழலில் வழக்கை விசாரிக்க முடியாது. முதலில் அமைதி நிலவட்டும். பல பகுதிகளிலும் நடக்கும் போராட்டம், வன்முறை நிறுத்தப்பட்டால் இந்த வழக்கை விசாரிக்கிறோம் என்று தெரிவித்துள்ளது.

மாணவர்கள் போராட்டத்தில் யார் வன்முறை செய்தனர், யார் அமைதியாக போராடினர் என்பதை தற்போது எங்களால் சொல்ல முடியாது என்று தெரிவித்த தலைமை நீதிபதி, போராட்டம், வன்முறைகளை நிறுத்தினால் வழக்கை நாளையே விசாரிப்பதாக உறுதியளித்துள்ளார்.

இதனிடையே குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்திய முஸ்லீம் லீக் காங்கிரஸ் தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், டிஎன் பிரதாபன் என பல அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதனை வரும் டிசம்பர் 18ஆம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில் தற்போது மக்கள் நீதி மய்யம் சார்பிலும் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் ஆலோசனையின் பெயரில் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் லயோலா கல்லூரி, கோவை, மதுரை எனப் பல இடங்களிலும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *