ராமச்சந்திரா பல்கலை வேந்தர் வெங்கட்டுக்கு என்னாச்சு?

public

சென்னை போரூரில் அமைந்திருக்கும் ராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக் கழகம் உலகப் புகழ் வாய்ந்தது. உலகத்தின் பல பகுதிகளில் இருந்தும் மருத்துவ சிகிச்சைக்காக போரூருக்கு வந்து செல்கின்றனர்.

இம்மருத்துவப் பல்கலையின் வேந்தரான வெங்கடாசலம் அரசியல், தொழில், அதிகார வட்டாரங்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். தனது நெருங்கிய வட்டாரத்தில் வெங்கட் என்று அழைக்கப்படுபவர். எம்.ஜி.ஆர். காலத்தில் இவரது தந்தையாரான, ‘உடையார்’ என்று அனைவராலும் அழைக்கப்பட்ட ராமசாமி உடையார் பெரும் அரசியல் செல்வாக்கோடு இருந்தார். அதே செல்வாக்கோடு இப்போது வெங்கட் இருக்கும் நிலையில், திடீரென வெங்கட்டுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது.

அவ்வப்போது தனது சொந்த ஊரான ராசிபுரத்துக்கு செல்வது வெங்கட்டின் வழக்கம். அந்த வட்டாரத்தில் இருக்கும் தனது குலதெய்வக் கோயிலுக்கு செல்வது, மில்லைப் பார்த்துவிட்டு கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு வருவது வெங்கட்டுக்கு பிடித்தமான விஷயம். வெங்கட் ஆன்மீகத்தில் ஈடுபாடுடையவர். பல திருக்கோயில்களின் திருப்பணிக்கு உதவுபவர். பிசியான அலுவல்களுக்கிடையே நிம்மதி தேடி தனது சொந்த மண்ணுக்கு அண்மையில் சென்றிருந்தார்.

அப்போது 25 கோடி ரூபாய் தொடர்பான பிசினஸ் குறித்து ஒரு தகவல் வெங்கட்டுக்கு தெரியவந்திருக்கிறது. சில நிமிடங்களில் நெஞ்சு வலிப்பதாக சொன்னதும் கூடியிருந்தவர்கள் துடித்துப் போயினர். உடனடியாக பக்கத்தில் இருந்த மருத்துவர்களுக்கு தகவல் சொல்லப்பட்டு அவர்கள் வந்து பரிசோதித்தனர். உடனடியாக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாமா என்று குடும்பத்தினர் கேட்க, மருத்துவர்களோ உடனடியாக பக்கத்தில் ஒரு மருத்துவமனையில் சேர்ப்பது நலம் என்று கூறியுள்ளனர்.

அவர்களது அறிவுறுத்தலின் பேரில் உடனடியாக அருகே சேலத்தில் இருக்கும் மனிபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் வெங்கட். அங்கே அவருக்கு ஆஞ்சியோ, ஸ்டன்ட் சோதனைகள் நடத்தப்பட்டன. சேலம் மருத்துவமனையில் இருந்தபோதே நுரையீரலில் நீர் கோர்த்துக் கொண்டு, ஃளூ காய்ச்சலும் அடிக்கத் தொடங்கியது. உடனே ஏர் ஆம்புலன்ஸ் புக் செய்து வெங்கட்டை சென்னை ராமச்சந்திரா மருத்துவமனைக்கே கொண்டு செல்லலாம் என்று முயற்சியில் இறங்கினர் குடும்பத்தார். ஏர் ஆம்புலன்ஸ் சேலம் வரும்வழியிலேயே மாலை ஆகிவிட்டது. போதிய வெளிச்சமில்லை என்பதால் கோவையில்தான் லேண்ட் ஆனது.

தினமும் இரவு 12 மணி வரை டிவி பார்த்துவிட்டு உறங்கும் வழக்கமுடைய வெங்கட், அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழுந்து ஆன்மீகப் பாடல்களோடு தனது நாளைத் தொடங்கி பூஜை செய்யும் பழக்கம் உள்ளவர். மருத்துவமனையில் இருக்க வேண்டியிருந்ததால் பூஜைகள் செய்யமுடியவில்லையே என்று வருத்தப்பட்டிருக்கிறார்.

ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராமச்சந்திரா அழைத்து வரப்பட்ட வெங்கட்டுக்கு மிகச் சிறந்த மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 58 வயதாகும் வெங்கட்டுக்கு சுகரும் இருப்பதால் அதற்கேற்றவாறு கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள் மருத்துவர்கள். இப்போது வெங்கட் உடல் நலம் சீராக இருக்கிறது.

அவரது நெருங்கிய அரசியல், அதிகார வர்க்க, தொழில் வட்டார நண்பர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே மெல்ல மெல்ல இந்தத் தகவல் தெரியவர பதறியபடி நலம் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *