மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 6 ஆக 2020

எஸ்.எஸ்.ஐ கொலை: துப்பாக்கி வழங்கியவர் கைது?

எஸ்.எஸ்.ஐ கொலை: துப்பாக்கி வழங்கியவர் கைது?

களியக்காவிளை எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கு குற்றவாளிகள் தேடப்பட்டு வரும் நிலையில், க்யூ பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்ட நபர், வில்சன் கொலைக் குற்றவாளிகளுக்குத் துப்பாக்கி வழங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 10ஆம் தேதி டெல்லியில், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்குத் தொடர்புடைய காஜாமைதீன், சையது அலி நவாஸ், அப்துல் சமத் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அதற்கு முன்னதாக பெங்களூருவில் தமிழக க்யூ பிரிவு போலீஸாரால் முகமது ஹனிப் கான், இம்ரான் கான், முகமது சையது அகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே களியக்காவிளை காவல் ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்பட்டார். தவுபிக் மற்றும் முகமது ஷமீம் ஆகியோர் சிறப்பு உதவி ஆய்வாளரைச் சுட்டுக்கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றது தெரியவந்தது.

வில்சன் கொலை வழக்கில் தொடர்புடையவர்களுக்கும், பெங்களூருவில் க்யூ பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகித்து தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அவர்களிடம் இருந்த மூன்று பிஸ்டல்கள் எப்படி வந்தது என்று விசாரித்ததில் மும்பையில் இருந்து இஜாஸ் பாஷா என்ற நபரால் வழங்கப்பட்டது தெரியவந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேற்குறிப்பிட்ட மூவர் அளித்த புகாரின் பேரில் இஜாஸ் பாஷாவையும் பெங்களூருவில் கைது செய்து க்யூ பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். இஜாஸ் பாஷா மும்பை - பெங்களூரு செல்லும் ஆம்னி பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் மும்பையில் இருந்து நான்கு துப்பாக்கிகளை இஜாஸ் பாஷா கொண்டுவந்ததாகவும், மூன்று ஏற்கெனவே பெங்களூருவில் கைதானவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மற்றொன்று எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலையில் பயன்படுத்தியிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகித்துள்ளனர்.

மேலும், இஜாஸ் பாஷாவை சென்னை அழைத்து வந்த க்யூ பிரிவு போலீஸார் எழும்பூர் 2ஆவது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.

இவ்வாறு வில்சன் கொலை வழக்கில் புதிய தகவல்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தவுபிக், அப்துல் ஷமீம் ஆகிய இருவரும் மாறுவேடத்தில் சுற்றித் திரிந்தால் எப்படி இருப்பார்கள் என்ற உருவங்களிலான புகைப்படங்களைக் கேரள போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

செவ்வாய், 14 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon