மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 29 பிப் 2020

டெல்லி அணிவகுப்பில் தமிழக அய்யனார்!

டெல்லி அணிவகுப்பில் தமிழக அய்யனார்!

குடியரசு தின விழாவின் போது டெல்லி ராஜ் பாதையில் ஆண்டுதோறும் கோலாகலமாக அணிவகுப்புகள் நடைபெறும். நாளை (ஜனவரி 26) நாட்டின் 71ஆவது குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ளது. இதற்காக பல்வேறு கலாச்சார மற்றும் பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

அலங்கார ஊர்திகள் வடிவமைப்பு, மய்ய கருத்து, அணிவகுப்பின் கால அவகாசம் போன்ற அடிப்படையில் இந்த ஆண்டு 22 அணிவகுப்பு ஊர்திகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, அசாம், உத்தரப் பிரதேசம் உள்பட 16 மாநிலங்கள் சார்பில் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த அலங்கார அணிவகுப்பின் உருவாக்கம் மற்றும் ஒத்திகை பணிகள் கடந்த இரு தினங்களாக நடந்து வந்தன. இந்நிலையில் அணிவகுப்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்திகள், கலை நிகழ்ச்சிகள் தொடர்பாகச் செய்தியாளர்களுக்கு விளக்கப்பட்டது. புகைப்படத் தொகுப்பும் வெளியிடப்பட்டது.

அதன்படி 2020 குடியரசு தின விழாவில் தமிழகத்தில் காவல் தெய்வமாகக் கூறப்படும் அய்யனார் சிலை காட்சிப்படுத்தப்படுவது தெரியவந்துள்ளது. சிவப்பு வண்ணம், பெரிய மீசை என 17 அடி உயரப் பிரமாண்ட உருவத்தில் அய்யனார் அமர்ந்திருக்க, அவருக்கு முன்னால் குதிரையும், காவலாளிகளும் இருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அய்யனார் கோவில் கொடைவிழாவின் போது, நடத்தப்படும் கரகாட்டம் மற்றும் தப்பாட்டம், கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளது. இதில் பங்கேற்கத் தமிழகத்திலிருந்து 30 கலைஞர்கள் டெல்லி சென்றுள்ளனர். நாளை நடைபெறும் குடியரசு தின விழாவில் ராஜ்பாதையில் ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கான ஒத்திகையும் நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த சிலையில் அய்யனாருக்குப் பூணூல் அணிவிக்கப்பட்டிருப்பது நெட்டிசன்களிடையே விவாதத்தை எழுப்பி வருகிறது.

குடியரசுத் தலைவர் விருது

குடியரசு தின விழாவுக்கான ஒத்திகைகள் நடைபெற்று வரும் நிலையில், சிறைத்துறையில் சிறந்து விளங்கிய அதிகாரிகளுக்கான குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த 5 அதிகாரிகள் உட்பட 35 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சிறைத்துறை அதிகாரிகள் ஜெயபாரதி, தமிழ்மாறன், பேபி, கீதா, கண்ணன் ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சனி, 25 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon