கொரோனா: சீனாவில் இந்திய மாணவர்களுக்குப் பாதிப்பில்லை!

public

சீனாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (25.01.2020) சீனாவில் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில், புத்தாண்டினைக் கொண்டாடச் சுற்றுலாப் பயணிகள் அதிகமானோர் சீனாவிற்கு வந்து போவார்கள் என்பதால் இந்த வைரஸ் தாக்கம் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. எனினும் சில பகுதிகளில் சென்று வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

2002ஆம் ஆண்டு ‘சார்ஸ்’ என்ற வைரஸ் உலகம் முழுவதும் 37 நாடுகளுக்கு பரவியது. இதற்கு மருந்துகள் தயாரிக்கவும், வைரஸினை கட்டுப்படுத்தவும் விஞ்ஞானிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த வைரஸ் தாக்குதலினால் உலக அளவில் 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சார்ஸ் வைரஸின் தொடக்கம் சீனாவில் தான் ஏற்பட்டது. இந்நிலையில் 18 ஆண்டுகளுக்கு பிறகு , கொரோனா என்ற வைரஸ் பரவி அச்சுறுத்தி வருகிறது.

மூச்சு பிரச்சினை, சளி ,இருமல், ஆஸ்துமா உள்ளிட்டவை இதற்கு அறிகுறிகளாகக் கூறப்படுகிறது. சிறியவர் முதல் பெரியவர் வரை எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை எளிதில் இந்த நோய் தாக்குவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சீனாவில் உள்ள யுவான் மாகாணத்தைத் தாண்டி 850 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது மேலும் பரவாமல் இருக்க 5 நகரங்களில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் அந்நாட்டு அரசால் கொண்டு வரப்பட்டுள்ளனர். அப்பகுதி மக்கள் அனைவரும் யுவான் மாகாணத்திலேயே முடக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மற்ற நகரங்களுக்குச் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதேபோல் யுவானைத் தொடர்ந்து ஹூவாங்காங் நகரில் வசிக்கும் 70லட்சம் மக்களும் அந்த மாகாணத்திலேயே முடக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸை ஆறு வகைகளாக வகைப்படுத்தியுள்ள மருத்துவர்கள் வழக்கமாக இந்த வைரஸ் விலங்குகளிடையே காணப்படும். ஆனால் தற்போது இந்த வைரஸ் மனிதனின் உயிரைக்குடிக்கும் வைரஸாக மாறியுள்ளது இதுவே முதல் முறை என்கின்றனர்.

இந்நிலையில் சீனாவிலிருந்து வரும் பயணிகளை இந்தியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகள் விமான நிலையங்களில் தீவிர சோதனைக்கு உட்படுத்தி வருகிறது. சீனாவிற்கு செல்வோர் முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தி வருகிறது. இந்தியாவுக்கு 96 விமானங்களில் வந்த 20,844 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் யாருக்கும் வைரஸ் பாதிப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவிவரும் நிலையில் சீனாவில் படித்து வரும் இந்திய மாணவர்கள் 25 பேர் இந்தியா திரும்பி உள்ளனர். அவர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சீனா மருத்துவ கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் பயின்று வரும் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தகவல் தெரிவித்ததாக ஐஏஎன்எஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சவுதி அரேபியாவில் உள்ள அசீர் அபா அல் ஹயாத் மருத்துவமனையில் பணிபுரியும் கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த செவிலியருக்கு இந்த வைரஸ் தொற்று பரவி இருப்பதாகத் தகவல் தெரியவந்துள்ளது. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் எழுதியுள்ள கடிதத்தில், சவுதி அரேபியாவில் உள்ள அந்த பெண்மணிக்குத் தீவிர சிகிச்சை அளிக்க வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேபோல் சிங்கப்பூரில் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பது அந்த நாட்டு அரசால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மேலும் பரவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். 2002 ஆம் ஆண்டு பரவிய சார்ஸ் வைரஸ் தாக்குதலைச் சமாளித்த அனுபவம் இருப்பதால், தற்போதும் இந்த வைரஸ் தாக்குதலைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

இதுபோல் 2 கோடிக்கும் அதிகமாக வசிக்கும் பெய்ஜிங்கில் 26 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *