மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 29 பிப் 2020

ரத்த வெள்ளத்தில் மீன் பிடிக்க முயலும் பாஜக!

ரத்த வெள்ளத்தில் மீன் பிடிக்க முயலும் பாஜக!

எஸ்.வி.ராஜதுரை

கடந்த 20.1.2020 அன்று பாஜகவின் டெல்லிக் கிளையின் சார்பாக வெளியிடப்பட்ட ட்விட்டர் செய்தியில் புகைப்படமொன்றும் கார்ட்டூன் படமொன்றும் சேர்க்கப்பட்டிருந்தன. அந்தப் புகைப்படத்தின் ஒருபுறம் எரிந்து கொண்டிருக்கிற ஒரு பேருந்தும் முஸ்லிம் குல்லாய் அணிந்துள்ள தோற்றத்துடன் டெல்லி யூனியன் பிரதேச முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலும் காட்டப்படுகின்றனர். இந்தப் புகைப்படத்திற்கு ‘கலை’ என்ற தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

எரிந்து கொண்டிருக்கின்ற ஒரு பேருந்தும் அதற்குள்ளிருந்து ஓலமிடும் பெண்ணும், அந்தப் பேருந்துக்கு வெளியே பெட்ரோல் கேனுடன் ஆம் ஆத்மி பெயர் பொறித்த காந்திக் குல்லாயுடன் நிற்கும் கெஜ்ரிவாலும், ஒரு கையில் தீப்பந்தம் வைத்திருக்கும் ஆம் ஆத்மி முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர் அமானாவுல்லா கானும் பேருந்து எரிந்து கொண்டிருப்பதையும் பெண் ஓலமிடுவதையும் பார்த்து இரசித்துக் கொண்டிருப்பதாகக் கார்ட்டூன் படம் சித்தரிக்கின்றது. இந்தக் கார்ட்டூனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு ‘ கலைஞன்’.

மத வெறியைத் தூண்டுகின்ற பிரசாரங்களையும் சுவரொட்டிகளையும் சமூக வலைததள செய்திகளையும் வெளியிடுவது பாஜகவுக்குப் புதியதல்ல என்பதை ‘தி ஒயர்’ ஆங்கில டிஜிட்டல் ஏடு சுட்டிக் காட்டியுள்ளது.எடுத்துக்காட்டாக ஜமியா இஸ்லாமிய பல்கலைக் கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதலுக்குப் பிறகு பாஜக ஒரு கார்ட்டூன் படத்தை வெளியிட்டது. அதில் ஒரு பேருந்து எரிந்து கொண்டிருப்பதாகவும், அதற்குள்ளிருந்து ஒரு பெண் ஓலமிடுவதாகவும், கெஜ்ரிவாலும் முஸ்லிம் ஆடைகள் அணிந்த ஒருவரும் பேருந்துக்கு வெளியே நின்று கொண்டிருப்பதாகவும் , டெல்லி போலீஸார் தீயை அணைத்துக் கொண்டிருப்பதாகவும் காட்டப்பட்டிருந்தது.

குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சாதி, மத வேறுபாடு இன்றி ஆயிரக்கணக்கான மக்கள் டெல்லியில் தொடர்ந்து அமைதி வழியில் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துக் கொண்டிருக்கும் ஷஹீன் பாக் என்னுமிடத்தை ‘குட்டி பாகிஸ்தான்’ என்று ஆர்.எஸ்.எஸ்.பாஜக பிரசாரம் செய்து வருகிறது.

டெல்லி முதலமைச்சர் பதவிக்கு பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பர்வேஷ் சாஹிப் சிங் வெர்மா, தான் ஆட்சிக்கு வந்தால் டெல்லியில் அரசாங்க நிலத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் இடித்துத் தரைமட்டமாக்கப்படும் என்று பிரசாரம் செய்து வருகிறார்.’கட்டடங்கள்’ என்று அவர் குறிப்பிடுவது மசூதிகளையும் மதரஸாக்களையும்தான். அரசாங்க நிலத்தில் கட்டப்பட்டுள்ள 54 மசூதிகள், மதரஸாக்களின் பட்டியல் ஏற்கெனவே டெல்லி மாநில துணை ஆளுநரிடம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாஜகவின் இன்னொரு வேட்பாளர் கபில் மிஷ்ரா, இப்போது நடக்கவிருக்கும் தேர்தல் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் நடக்கும் கிரிக்கெட் போட்டி போன்றதுதான் என்றும் , அந்தப் போட்டி பிப்ரவரி 8ஆம் தேதியன்று டெல்லி தெருக்களில் நடக்கும் என்றும் பிரசாரம் செய்து வருகிறார்.

இத்தகைய புகைப்படங்கள் கார்ட்டூன்கள், பிரச்சாரங்கள் மூலம் மதக் கலவரங்களைத் தூண்டிவிட்டு, அப்பாவி மக்களின் ரத்த வெள்ளத்தில் வாக்குகள் என்னும் மீன்களைப் பிடிப்பதற்காக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் கட்சியான பாஜக மேற்கொண்டு வரும் செயல்கள், அரசியல் சட்டப்படியும் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிகளின்படியும் கிரிமினல் குற்றங்களாகக் கருதப்பட வேண்டியவை என்றாலும் அவை தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

தமிழகத்தில் 2021ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலின் போதும் இதே போன்ற உத்திகளைக் கையாள்வதற்கு பாஜக முயற்சி செய்யும் என்பதற்கான அறிகுறியாகவே ‘ஆன்மிக நடிகர்’ ரஜினி காந்த் மூலமாக பெரியார் பற்றிய தேவையற்ற சர்ச்சையைக் கிளப்பி, மத உணர்வுகளைத் தூண்டுகின்ற வேலை நடந்து வருகின்றது என்று ஊகிக்க முடியும்.

திராவிட அரசியல் கட்சிகளான திமுக, அஇஅதிமுக, மதிமுக மற்றும் பாமக, கம்யூனிஸ்டுகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பெரியார் இயக்கங்கள் , தலித் அமைப்புகள், சிறுபான்மையினர் அமைப்புகள் ஆகியவற்றோடு சேர்ந்து பரந்துபட்ட தமிழ் மக்கள் தங்கள் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் கடைசி மூச்சுவரை ஓயாது உழைத்த தந்தை பெரியார் இழிவுபடுத்தப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.

மேலும், இன்றுள்ள உலக நிலைமைகளையும் தொழில்நுட்ப சாதனைகளையும் கருத்தில் கொள்கையில் பாஜக- சங் பரிவாரம் தூண்டிவிடும் மதவெறியால் ஏதேனும் கலவரங்கள் நடக்குமானால், ஏற்கனவே சரிந்து கொண்டிருக்கும் இந்தியப் பொருளாதாரம் அதலபாதளத்துக்குத் தள்ளப்படும் என்பதோடு, மிகப் பயங்கரமான, பாரதூரமான கொடும் விளைவுகள் ஏற்படும் என்பதால் தமிழகத்திலோ, இந்தியாவின் எந்தப் பகுதியிலோ சங் பரிவாரத்தின் மதக் கலவர முயற்சிகள் வெற்றிபெறாமல் பார்த்துக் கொள்வது இந்திய மக்களின் ஜனநாயகக் கடமை.

இதற்கிடையே பாஜகவின் அனைத்திந்தியப் பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வார்கியா, தன் வீட்டில் கட்டட வேலை செய்து வந்த சில தொழிலாளிகள் பங்களாதேஷில் இருந்து வந்தவர்கள் என்பதை, அவர்கள் சாப்பிடும் உணவைப் பார்த்துக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறியுள்ளார். அந்த உணவு என்ன தெரியுமா? அவல்! எனவே தமிழக மக்களுக்கு எச்சரிக்கை : ” அவல் சாப்பிடாதீர்கள்! சாப்பிட்டால் நீங்கள் பங்களா தேஷுக்கு அனுப்பப்படலாம்!!.”

சனி, 25 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon