xகுரூப் 4 – குரூப் 2: விரிவடையும் விசாரணை வளையம்!

public

தமிழகத்தையே தகிக்கும் மாநிலமாய் மாற்றியிருக்கிறது டிஎன்பிஎஸ்சி விவகாரம். முறைகேடாக தேர்வில் தேர்ச்சி பெற்ற 39 தேர்வர்கள் சிக்கியதைத் தொடர்ந்து, தீவிரப்படுத்தப்பட்ட விசாரணையில் 99 தேர்வர்கள் குறுக்கு வழியில் தேர்ச்சி பெற்றது தெரியவந்தது. ஒவ்வொரு தேர்வர்களிடமும் தனித்தனியாக நடத்தப்பட்ட விசாரணையில், இவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு தேர்ச்சி பெறவைத்த இடைத்தரகர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டனர். இதன் அடுத்த கட்டமாக நேற்று(25.01.2020) இரவு பண்ருட்டியிலுள்ள சிறுகிராமத்தில் ராஜசேகர் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையின் பேரில் இன்று மேலும் இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும், முதல் 100 இடங்களுக்குள் வந்தவர்களில் 35 நபர்கள் ஒரே தேர்வு மையத்தில் எழுதியவர்கள் என்பதை பிற தேர்வர்கள் கண்டுபிடித்துக் கூறியதும், டிஎன்பிஎஸ்சி அளித்த புகாரின் பேரில், சிபிசிஐடி டிஜிபி ஜாபர் சேட் தலைமையிலான குழு களத்தில் இறங்கி விசாரித்தது. இதில் சிவகங்கை, தஞ்சாவூர், திருநெல்வேலி, கடலூர், விழுப்புரம் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் விசாரணை நடத்தப்பட்டதில் பல்வேறு இடைத்தரகர்கள் சிக்கினர். இவர்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மற்ற இடைத்தரகர்களும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்படுகின்றனர். நேற்று கடலூரில் கைது செய்யப்பட்ட ராஜசேகர் கொடுத்த தகவலின் அடிப்படையில் திருநெல்வேலியைச் சேர்ந்த ஐயப்பன் என்ற இடைத்தரகரை சென்னையில் கைது செய்திருக்கின்றனர் சிபிசிஐடி போலீஸார். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குரூப் 4 தேர்வில் ஒரு மாணவனுக்கு 12 லட்சம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கிக் கொடுத்ததாகவும், அவரைத் தவிர தன் உறவினர்களுக்கு மட்டும் தான் இப்படி உதவியதாக தொடக்கத்தில் கூறியவர், பிறகு குரூப் 2 தேர்வில் ஒரு பெண்ணுக்கு இப்படி வேலை வாங்கிக் கொடுத்ததாகக் கூறியிருப்பது இந்த வழக்கை குரூப் 4 தேர்வினையும் தாண்டி கொண்டுசென்றிருக்கிறது. ஐயப்பனை ராஜசேகரிடம் ஒப்படைத்து இவர் மூலமாக வரும் கஸ்டமர்கள் கேட்கும் பதவிக்கான பணத்தைப் பெற்றுக் கொடுக்கச் சொல்லி உத்தரவிட்ட சீனுவாசன் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர். பண்ருட்டியைச் சார்ந்த ராஜசேகரின் நண்பரான சீனுவாசனைத் தேடி ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களை முற்றுகையிட்டிருக்கிறது சிபிசிஐடி குழு.

டிஎன்பிஎஸ்சி முறைகேடு குறித்து கடந்த நவம்பரில் தேர்வெழுதிய 16 லட்சம் தேர்வர்கள் மட்டுமின்றி, டிஎன்பிஎஸ்சி-யின் முந்தய தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள், வெற்றி பெறாதவர்கள், இப்போது வரை முயன்றுகொண்டிருப்பவர்கள், தங்கள் பிள்ளைகள் எதிர்காலத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதவேண்டும் என்ற கனவில் இருப்பவர்கள் என பெரும்பான்மையான தமிழக மக்கள் விசாரித்துக்கொண்டே இருக்கின்றனர். அவர்களது முக்கிய கேள்வியாக இருப்பது ‘மறுதேர்வு நடக்குமா?’ என்பது தான். ஆனால், 16 லட்சம் பேர் எழுதிய தேர்வினை மீண்டும் நடத்துவதற்கு வாய்ப்பில்லை என டிஎன்பிஎஸ்சி மறுத்திருக்கிறது. அதற்கு பதிலாக, முழு விசாரணையும் முடிந்தபிறகு முறைகேடாக வெற்றி பெற்றவர்களை பட்டியலிலிருந்து நீக்கி, புதிய பட்டியல் வெளியிடப்பட்டு பணி நியமனம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறாத வண்ணம், விதிகளில் சீர்திருத்தம் செய்யப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

டிஎன்பிஎஸ்சி விவகாரம் விஸ்வரூபமெடுத்திருக்கும் நிலையில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற காவலர் உதவி ஆய்வாளர்களுக்கான தேர்விலும் முறைகேடு நடைபெற்றிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் தேர்வுகளுக்கான பயிற்சி மையம் ஒன்றில், ஜனவரி 11ஆம் தேதி நடைபெற்ற காவலர் பதவிகளுக்கான தேர்வின் வினா தாள்கள், அங்கு பயிற்சி பெற்ற தேர்வர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ள புகாரினை டிஜிபி அலுவலகத்துக்கு அனுப்பியிருப்பதாக பெயரிடப்படாத கடிதம் எழுதப்பட்டு, அது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *