மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 2 ஜூலை 2020

தேசத்தை நிர்மாணிக்க காந்தியே தேவை: ராம்நாத் கோவிந்த் குடியரசு தின உரை!

தேசத்தை நிர்மாணிக்க காந்தியே தேவை: ராம்நாத் கோவிந்த் குடியரசு தின உரை!

இன்று (ஜனவரி 26) நம் இந்திய தேசத்தின் 71ஆம் குடியரசுத் திருநாளை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு நேற்று ஆற்றிய உரையில் நல்வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு பல கருத்துகளையும் தெரிவித்துள்ளார்.

அவரது உரையின் சுருக்கப்பட்ட வடிவம் இதோ...

மக்களே மெய்யான சக்தி

“71ஆம் குடியரசுத் திருநாளை முன்னிட்டு நம் நாட்டிலும், அயல்நாடுகளிலும் வாழும் இந்தியா நாட்டின் அனைவருக்கும் என் இதயபூர்வமான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றிலிருந்து 70 ஆண்டுகள் முன்பு, ஜனவரி மாதம் 26ஆம் தேதியன்று நமது அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. நவீன குடியரசின் நிர்வாக அமைப்பிலே மூன்று அங்கங்கள் இருக்கின்றன – சட்டமியற்றும் அவைகள், நிர்வாக அமைப்பு, நீதிமன்றம். இந்த மூன்று அங்கங்களும் சுதந்திரமானவையாக இருந்தாலும்கூட, ஒன்றோடு ஒன்று தொடர்புடையனவாகவும் இருக்கின்றன, ஒன்றை ஒன்று சார்ந்தும் இருக்கின்றன. இருந்தாலும், மக்கள்தான் ஒரு நாட்டை உருவாக்குகிறார்கள். இந்திய நாட்டைச் சேர்ந்த நாம்தான் நமது குடியரசை இயக்குகிறோம். நமது பகிரப்பட்ட எதிர்காலம் பற்றிய தீர்மானங்களை மேற்கொள்ளும் மெய்யான சக்தியானது இந்திய நாட்டு மக்களான நம்மிடம்தான் அடங்கியிருக்கிறது.

காந்தியடிகளும் அரசியலமைப்பு சட்டமும்

நமது அரசியலமைப்புச் சட்டமானது, சுதந்திரமான மக்களாட்சியின் குடிமக்கள் என்ற முறையிலே, சில உரிமைகளை நமக்கு அளிக்கிறது. ஆனால், அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டுத் தான், நாமனைவரும் நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற அடிப்படையான ஜனநாயகக் குறிக்கோள்களின்பால், என்றும் மாறாத அர்ப்பணிப்பு உணர்வுடன் இருப்போம் என்ற இந்தப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். நாட்டின் தொடர் வளர்ச்சி மற்றும் பரஸ்பர சகோதரத்துவத்துக்காக, இதுதான் மிகவும் உன்னதமான மார்க்கம். தேசப்பிதா காந்தியடிகளின் வாழ்க்கைச் சித்தாந்தங்களை ஏற்பதன் வாயிலாக, இந்த அரசியலமைப்புச் சட்டக் குறிக்கோள்களைப் பின்பற்றும் செயல்பாடு மேலும் சுலபமானதாக மாறி விடுகிறது. இப்படிச் செய்வதன் மூலம், நாமனைவரும் காந்தியடிகளின் 150ஆவது ஜெயந்தியை மேலும் பொருளார்ந்த நிகழ்வாக பரிமளிக்கச் செய்ய முடியும்” என்று குறிப்பிட்ட குடியரசுத் தலைவர் தன் உரையின் தொடர்ச்சியாக மத்திய அரசின் நலத்திட்டங்களைப் பட்டியலிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய அவர்,

உலகத் தரக் கல்விக்குத் தொடர் முயற்சி

“பண்டைய காலம் தொட்டே, ஒரு நல்ல கல்விமுறையின் அடித்தளங்கள் நாலந்தா மற்றும் தக்ஷிணஷீலாவின் மகத்தான பல்கலைக்கழகங்களில் நிறுவப்பட்டு விட்டன. நமது நாட்டில் சக்தி, புகழ், செல்வம் ஆகியவற்றைவிட என்றுமே ஞானம் அதிக மதிப்பு வாய்ந்ததாகக் கருதப்பட்டு வந்திருக்கிறது. இந்தியப் பாரம்பரியத்தில், கல்வியமைப்புகள் ஞானம் பெறும் இடங்கள், அதாவது கல்விக் கோயில்களாகவே கருதப்பட்டு வந்திருக்கின்றன. நீண்ட நெடுங்காலமாக காலனியாதிக்கம் காரணமாக ஏற்பட்ட துர்பாக்கிய நிலையை அகற்ற, கல்வி மட்டுமே அதிகாரப் பங்களிப்புக்கான வலுவான ஊடகமாக ஏற்பட்டிருக்கிறது. நமது நவீன கல்விமுறையின் அடிப்படைக் கட்டமைப்பு, சுதந்திரம் கிடைத்தவுடனேயே தொடங்கி விட்டது. அப்போது நமக்கிருந்த சாதனங்கள் மிகவும் குறைவானவையாகவே இருந்தன. இருந்தாலும்கூட, கல்வித் துறையில் நமது பல சாதனைகள் குறிப்பிடத்தக்கவை. நாட்டின் எந்தவொரு குழந்தையோ, இளைஞனோ, கல்வி பெறாமல் இருக்கக் கூடாது என்பதே நமது கல்விமுறையின் நோக்கம். கூடவே, கல்விமுறையில் மேம்பாடுகளை ஏற்படுத்தும் அதே வேளையில், கல்வியமைப்பில் உலகத் தரத்தை எட்ட, நாம் தொடர்முயற்சிகளை மேற்கொண்டு வர வேண்டும்.

2020 ஒலிம்பிக் வீரர்களுக்கு வாழ்த்துகள்

இந்திய விண்வெளி ஆய்வு மையம், அதாவது இஸ்ரோவின் சாதனைகள் நாட்டு மக்களான நம்மனைவரையும் பெருமிதம் கொள்ளவைக்கின்றன. இஸ்ரோவின் குழுவானது தனது மிஷன் ககன்யான் திட்டத்தில் முன்னேறி வருகிறது. மேலும் நாட்டு மக்கள் அனைவரும் இந்த ஆண்டு நிலவுக்கு மனிதனை அனுப்பும் கலம் தொடர்பான திட்டம் மேலும் விரைவு கதியில் முன்னேறுவதை மிகுந்த உற்சாகத்தோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த ஆண்டில்தான் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. பாரம்பரியமான வகையிலே, பல விளையாட்டுக்களில் நம்நாடு சிறப்பாகச் செயல்பட்டு வந்திருக்கிறது. நமது புதிய தலைமுறை ஆட்டக்காரர்களும், தடகள வீரர்களும், சமீபத்தில் நடைபெற்ற பல விளையாட்டுப் போட்டிகளில் நாட்டுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள். ஒலிம்பிக் 2020 விளையாட்டுப் போட்டிகளில், இந்தியக்குழுவுடன் கோடிக்கணக்கான நாட்டுமக்களின் நல்வாழ்த்துகளும் நல்லாதரவின் உத்வேகமாகத் துணை வரும்.

நான் சந்தித்த மகத்தான மனிதர்கள்

இந்த மாதத்தின் தொடக்கத்தில், கருமமே கண்ணாக இருக்கும் நம் நாட்டினர் சிலரைச் சந்திக்கும், உரையாடும் பேறு கிடைத்தது; அவர்கள் பல்வேறு துறைகளில் பாராட்டத்தக்க பணிகளை ஆற்றியிருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, ஜம்மு கஷ்மீரத்தில் ஆரிஃபா ஜான் நமதா தஸ்தகாரீ என்ற கைவினைத் திறனுக்குப் புத்துயிர் அளிப்பதிலும், தெலங்கானாவின் ரத்னாவலீ கோட்டப்பள்ளி தலசீமியாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதிலும், கேரளத்தின் தேவகீ அம்மா தனது தனிப்பட்ட முயற்சியால் வன வளங்களை மேம்படுத்துவதிலும், மணிப்பூரைச் சேர்ந்த ஜாமகோஜாங் மிஸாவோ சமூக மேம்பாட்டுக்கான முன்னெடுப்புக்களிலும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாபர் அலி சிறு வயது முதல் நலிவுற்ற சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்குக் கல்வியளிப்பதிலும் பாராட்டத்தகுந்த பங்களிப்பை அளித்திருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட மக்களின் வாழ்வினில் ஒரு நம்பிக்கைக் கீற்றை ஏற்றியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட பலர் இருக்கிறார்கள்; நான் ஒரு சிலரின் பெயர்களை மட்டுமே இங்கே கூறியிருக்கிறேன். சாமான்ய மனிதர்கள்கூட, தங்களின் குறிக்கோள்கள் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வின் சக்தியால் மாத்திரம், சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதை இப்படிப்பட்ட மனிதர்கள் செய்து காட்டியிருக்கிறார்கள். பெரிய எண்ணிக்கையில், இப்படி பல தன்னார்வ அமைப்புக்களும், அரசோடு கைகோத்து, தேசத்தை நிர்மாணிக்கும் இயக்கத்தில், தங்கள் பங்களிப்பை அளித்து வருகிறார்கள்.

தேசத்தின் நிர்மாணத்துக்கு காந்தியடிகளே முழுமையான தேவை

நாம் 21ஆம் நூற்றாண்டின் மூன்றாவது பத்தாண்டுக்குள் கால் பதித்திருக்கிறோம். புதிய பாரதத்தின் நிர்மாணம் மற்றும் இந்தியாவின் புதிய தலைமுறையினரின் விடிவெள்ளிப் பத்தாண்டாக இது மலரவிருக்கிறது. இந்தப் பத்தாண்டிலே பிறந்த இளைஞர்கள், உற்சாகத்தோடு, தேசத்தின் சிந்தனை ஓட்டத்தில் தங்களின் பங்களிப்பை அளிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். காலம் கடந்து செல்லச் செல்ல, நமது விடுதலைப் போராட்டத்தின் நேரடி சாட்சியாகத் திகழ்ந்தவர்கள் அனைவரும் நம்மை விட்டு மெல்ல மெல்லப் பிரிந்து சென்று கொண்டிருக்கிறார்கள்; ஆனால் நமது சுதந்திரப் போராட்டத்தின் நம்பிக்கைகள் என்றும் நீக்கமற நிறைந்து நிற்கும்.

தேசத்தின் நிர்மாணத்திற்காக, அண்ணல் காந்தியடிகளின் கருத்துகள் இன்றும்கூட முழுமையான அளவு பயனுடையவையாக இருக்கின்றன. காந்தியடிகளின் வாய்மை மற்றும் அஹிம்சை தொடர்பான செய்தியை நினைத்துப் பார்த்து அதன் வழிநடப்பது என்பது நமது தினசரி வாடிக்கையாக வேண்டும். வாய்மை மற்றும் அஹிம்சை பற்றிய அவரது செய்தி இன்றைய காலகட்டத்தில் மேலும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. எந்த ஒரு குறிக்கோளுக்காகவும் போராடுவோர், குறிப்பாக இளைஞர்கள், காந்தியடிகள் அளித்திருக்கும் அஹிம்சை என்ற மந்திரத்தை என்றும் மறவாமல் இருக்க வேண்டும்; ஏனென்றால் மனித சமூகத்துக்கு இதுவே விலைமதிப்பில்லாத கொடையாகும். எந்த ஒரு செயலும் அது உசிதமா, உசிதம் இல்லையா என்பதைத் தீர்மானம் செய்ய காந்தியடிகள் விதித்திருக்கும் மக்கள் நலன் என்ற உரைகல், நமது ஜனநாயகத்தின் மீதும் அமல் செய்யப்படக்கூடியது. மக்களாட்சியில் ஆளும் தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு – இருவரின் பங்கு பணியுமே மகத்தானவை. அரசியல் கருத்துகள் பற்றிய வெளிப்பாட்டுடன் கூடவே, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் நாட்டு மக்களின் நலன் ஆகியவற்றுக்காக இருவருமே இணைந்து முன்னேறிச் செல்ல வேண்டும்.

அம்பேத்கரை நினைவுகூர்வோம்

குடியரசுத் திருநாள் என்பது நமது அரசியலமைப்புச் சட்டத்தின் கொண்டாட்டம். இந்த நாளில், நான் நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முதன்மைச் சிற்பியான பாபாசாஹேப் அம்பேத்கரின் கருத்துகளை உங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அவர் என்ன சொன்னார் தெரியுமா? நாம் மேலோட்டமாக மட்டுமே அல்லாமல், உள்ளார்ந்தரீதியாக ஜனநாயகத்தை நிலைநிறுத்த முதலில், நாம் என்ன செய்ய வேண்டும்? நமது அரசியல் மற்றும் பொருளாதாரக் குறிக்கோள்களை எட்ட, தீவிரமான அர்ப்பணிப்போடு, அரசியலமைப்புச் சட்டத்தின் துணை ஒன்றையே நாட வேண்டும் என்று நாம் தீர்மானம் செய்து கொள்ள வேண்டும் என்றார். பாபாசாஹேப் அம்பேத்கரின் இந்தச் சொற்கள், நமது பாதையை என்றுமே பிரகாசப்படுத்தட்டும். அவரது இந்தச் சொற்கள், நமது தேசத்தை கௌரவத்தின் சிகரங்களை நோக்கிக் கொண்டு செல்வதில் நிரந்தரமான வழிகாட்டுதலாய் இருக்கும் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை.

வசுதேவக குடும்பத்தில் பிரேசில்

பிரியமான நாட்டுமக்களே, உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாகக் கருதும் வசுதேவக குடும்பகம் என்ற நமது கருத்தியல், மற்ற தேசங்களோடு நமது உறவுகளை பலப்படுத்துகிறது. நாம் நமது ஜனநாயக விழுமியங்கள், வளர்ச்சி, சாதனைகள் ஆகியவற்றை, ஒட்டுமொத்த உலகத்தோடும் பகிர்ந்து வந்துள்ளோம். குடியரசுத் திருநாள் கொண்டாட்டங்களில் அயல்நாட்டுத் தலைவர்களை வரவேற்பது நமது பாரம்பரியமாக இருந்து வந்திருக்கிறது. இந்த ஆண்டும், இந்தப் பாரம்பரியத்தை அனுசரித்து, நாளைய நமது குடியரசுதினக் கொண்டாட்டத்தில், நமது நீண்டகாலத்திய நண்பரான, பிரேசில் அதிபர் ஹாயர் போல்ஸோனாரோ, நம்முடைய மதிப்பிற்குரிய விருந்தினராகப் பங்கேற்றுச் சிறப்பிக்கிறார். வளர்ச்சிப் பாதையில் முன்னேறிச் செல்லுகையில், நம்முடைய நாடும், நாட்டுமக்கள் அனைவரும், நம்முடைய எதிர்காலத்திற்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித சமூகத்தின் எதிர்காலமும் பாதுகாப்பாகவும், தன்னிறைவு பெற்றதாகவும் இருக்க, உலக சமுதாயத்திற்கு ஒத்துழைப்பும் உதவிகளும் அளிக்க கடமைப்பட்டிருக்கிறோம். நான் மீண்டும் ஒருமுறை, உங்கள் அனைவருக்கும் குடியரசுத் திருநாளுக்கான இதயம்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான எதிர்காலம் அமைய என் பிரார்த்தனைகளை உரித்தாக்குகிறேன்” என்று உரையாற்றியுள்ளார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

ஞாயிறு, 26 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon