மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 26 ஜன 2020

ராமநாதபுரம்-சென்னை: குரூப்-4 விடைத்தாள்கள் மாற்றப்பட்டது எப்படி?

ராமநாதபுரம்-சென்னை: குரூப்-4 விடைத்தாள்கள் மாற்றப்பட்டது எப்படி?

குரூப்-4 விடைத்தாள்களை மாற்றுவதற்கு உதவி புரிந்தவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தமிழக அரசு வேலைக்குத் தயாராகி வருபவர்களை குரூப் 4 முறைகேடு அதிர்ச்சிக்குள்ளாக்கி வரும் நிலையில் இந்த வழக்கில் தொடர்ந்து பலர் கைதாகி வருகின்றனர். கீழக்கரை, ராமேஸ்வரம் ஆகிய மையங்களில் தேர்வு எழுதியவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இதில் தொடர்புடையவர்கள் விழுப்புரம், சென்னை எனப் பல்வேறு இடங்களில் கைதாகி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு விடைத்தாள்களை கொண்டுசெல்லும் வழியில், அதனை மாற்ற உதவியதாக ஓம்காந்தன் என்பவரை சிபிசிஐடி காவல் துறையினர் இன்று (ஜனவரி 26) கைது செய்தனர். சென்னை எழும்பூரிலுள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் விடைத்தாள்கள் மாற்றப்பட்டது எப்படி என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

தேர்வு முடிந்ததும் விடைத்தாள்கள் ராமநாதபுரம் கருவூலத்துக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து ஒரே நேரத்தில் வேன்களில் சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்காக 6 வேன்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு விடைத்தாள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தியபோது, ஒரு வேன் மட்டும் சென்னைக்கு தாமதமாக சென்றது தெரியவந்தது. தீவிர விசாரணை நடத்திய போது வேனை வழியில் நிறுத்தி விடைத்தாள்களை மாற்றி இருக்கும் மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஓம்காந்தன், நுங்கம்பாக்கத்திலுள்ள டிபிஐயில் ஆவண கிளார்க்காக பணிபுரிந்துவருகிறார். 2016ஆம் ஆண்டு முதல் டிஎன்பிஎஸ்சி விடைத்தாள்களை கொண்டுசெல்லும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். முகப்பேரைச் சேர்ந்த ஜெயக்குமார், தனக்கு தெரிந்தவர்களை டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் வெற்றிபெறவைக்க ஓம்காந்தனிடம் உதவி கேட்டுள்ளார். இதற்காக 15 லட்சம் ரூபாய் பேரம் பேசப்பட்டு முன்பணமாக 2 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், கீழக்கரை பகுதி தேர்வு மையங்களைத் தேர்வு செய்ய ஓம்காந்தனுக்கு ஜெயக்குமார் அறிவுறுத்தியுள்ளார். பின்னர், தேர்வுகளுக்கு தேர்வு எழுதிய சில மணி நேரங்களில் அழிவது போன்ற பேனாவை ஜெயக்குமார் வழங்கியுள்ளார்.

செப்டம்பர் 1ஆம் தேதி தேர்வு முடிந்தவுடன் ராமநாதபுரத்திலிருந்து தேர்வுத் தாட்களை சென்னை டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் ஒப்படைக்கும் பணிக்கு உதவியாக ஓம்காந்தன் நியமிக்கப்பட்டார். அன்று இரவு விடைத்தாள்களுடன் தட்டச்சர் மாணிக்கவேலு, பாதுகாப்புக்காக போலீஸ் ஒருவர், ஓட்டுனர் ஆகியோர் வேனில் சென்னைக்கு கிளம்பியுள்ளனர். விடைத்தாள்கள் இருந்த இடத்தின் சாவியை ஓம்காந்தன் வைத்துள்ளார். வேன் செல்லத் துவங்கியதும் ஜெயக்குமார் காரில் அதனை பின் தொடர்ந்து சென்றார்.

சிவகங்கையை கடந்ததும் இரவு உணவுக்காக வாகனம் நிறுத்தப்பட்டது. வாகனம் நிறுத்தியிருந்த இடத்திற்கு எதிரேயுள்ள ஒரு ஹோட்டலில் தன்னுடன் வந்தவர்களை சாப்பிட வைத்துள்ளார் ஓம்காந்தன், தான் மட்டும் வெளியே சென்று ஜெயக்குமாரிடம் வாகனத்தில் விடைத்தாள் இருந்த இடத்தின் சாவியை அளித்துள்ளார். தாமதிக்காத ஜெயக்குமார் வாகனத்தில் இருந்த கீழக்கரை, ராமேஸ்வரம் மையங்களின் தேர்வுத்தாள்களை மட்டும் எடுத்துக்கொண்டார். அதன்பிறகு வாகனம் அதிகாலை 5 மணிக்கு விக்கிரவாண்டி அருகில் டீ குடிப்பதற்காக நிறுத்தப்பட்டது. அந்த சமயம், திருத்தப்பட்ட விடைத்தாள்களை ஜெயக்குமார் உள்ளே வைத்துவிட்டார். பின்னர், மறுநாள் மதியம் விடைத்தாள்கள் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஓம்காந்தனிடம் நடத்தப்படும் விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விடைத்தாளை மாற்றிய ஜெயக்குமாரை சிபிசிஐடி காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ராஜேஷ் தாஸ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு: வெளியான அதிர்ச்சித் தகவல்! ...

6 நிமிட வாசிப்பு

ராஜேஷ் தாஸ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு: வெளியான அதிர்ச்சித் தகவல்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்! ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்!

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்: மளமளவெனக் குறைந்த தங்கம் விலை! ...

3 நிமிட வாசிப்பு

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்: மளமளவெனக் குறைந்த தங்கம் விலை!

ஞாயிறு 26 ஜன 2020