மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 21 ஜன 2021

கிழங்கு வகையைத் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாமா?

கிழங்கு வகையைத் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாமா?வெற்றிநடை போடும் தமிழகம்

உருளைக்கிழங்கு சிப்ஸுக்கும் ரோஸ்ட்டுக்கும் மயங்காதவர் உண்டா? சேனை சாப்ஸைத் தட்டில் வைத்தால் ஒதுக்கிவிடத்தான் முடியுமா? அத்துடன், வீட்டுக்குக் காய்கறிகள் வாங்கும்போது கண்ணில்படும் கிழங்கு வகையையும் சேர்த்தே வாங்கி வருவோம். ஆனால், ‘மண்ணுக்கு அடியில் விளையும் உணவுகள் ஆரோக்கியத்துக்குக் கேடானவை. எனவே, அவற்றைத் தவிர்க்க வேண்டும்’ என்று பலரும் ஆலோசனை சொல்வதைப் பார்க்கிறோம். இன்னொருபுறம் கேரட், பீட்ருட் போன்றவற்றில் சத்துகள் அதிகம் என்று சொல்வதையும் கேட்கிறோம்.

எது சரி... எது தவறு?

‘‘நம்முடைய அன்றாட உணவில் மண்ணுக்கு அடியில் விளையக்கூடிய உணவுகள் முக்கியப் பங்கு வகிக்கிறது. இவற்றை நேரடியாகவும் சமைத்தும் சாப்பிட்டும் வருகிறோம். கிழங்கு வகைகள் என்கிற இவற்றால் பெரிய உடல்நலக் கேடு ஒன்று இல்லையென்றாலும், காய்கறிகளைப் போல தினமும் பயன்படுத்தக் கூடாது” என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள்.

தொடர்ந்து, ‘‘கிழங்கு வகையைப் பொறுத்தவரை, அவற்றின் சமையல் முறையிலும், சாப்பிடும் முறையிலும் கொஞ்சம் கவனம் தேவை. முதலில் அவற்றின் வகையையும், தன்மையையும் புரிந்துகொண்டால் பயன்படுத்தும் முறை பற்றியும் நாம் புரிந்துகொள்ளலாம்.

மண்ணுக்கு அடியில் விளையும் உணவு வகையைப் பொதுவாக Root vegetables, Root starchy மற்றும் Ground nut என்று மூன்று வகையாகப் பிரிக்கிறோம்.

முள்ளங்கி, கேரட், பீட்ருட், நூக்கல் போன்றவை Root vegetables வகையாகும். இந்த ரூட் வெஜிடபுள் உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தவறு இல்லை. ஆனால். இவற்றை ஜூஸாகவோ, நேரடி உணவாகவோ சாப்பிடக் கூடாது. ஏனெனில், இவற்றில் சுக்ரோஸ் என்கிற சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால் உடல் பருமனைக் கூட்டும் வாய்ப்புள்ளது.

உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சேனைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு போன்றவை Root starchy என்கிற வகையாகும். இந்த Root starchy உணவு வகை பயன்பாட்டில் அளவும், கவனமும் தேவை. ஆரோக்கியமான உடல்நிலை கொண்டவர்களே குறைந்த அளவு எடுத்துக்கொள்வதுதான் நல்லது. ஏனெனில். இவற்றில் வைட்டமின்கள், மினரல்களைவிட கலோரிகள் அதிகமாக இருக்கிறது. மேலும் மாவுச்சத்து, சர்க்கரைச் சத்து போன்றவையும் அதிகமாக இருக்கிறது. அதனால், அளவோடு பயன்படுத்த வேண்டும். நீரிழிவு நோயாளிகளும், உடல்பருமன் கொண்டவர்களும் இவற்றைத் தவிர்ப்பதே நல்லது.

Ground nut என்கிற வேர்க்கடலையும் மண்ணுக்கு அடியில் விளையக்கூடிய கடலை வகை சார்ந்த உணவாகும். இதிலும் ஸ்டார்ச், மாவுச்சத்து, சர்க்கரைச்சத்து அதிகமாக இருக்கிறது. எனவே, குறைந்த அளவே இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதுவும் கடலையை வறுத்து சாப்பிடுவதை விட, நீரில் வேகவைத்து சாப்பிடுவதே சிறந்தது.

பொதுவாகவே, மண்ணுக்கு அடியில் விளையும் உணவுகளை உடல் உழைப்பு இல்லாத, உடல் உழைப்பு குறைந்தவர்கள் குறைந்த அளவே எடுத்துக் கொள்ள வேண்டும். அதுபோல மண்ணுக்கு அடியில் விளையும் உணவுகளை வேறு எந்த வகையிலும் எடுத்துக் கொள்ளாமல் நீரி்ல் வேகவைத்து சாப்பிடுவது நல்லது.

கிழங்கு வகை உணவுகள் எடுத்துக்கொள்ளும்போது நீரில் அவித்துச் சாப்பிட வேண்டும். எண்ணெயில் பொரித்துச் சாப்பிடக் கூடாது. இதனால் பருமன், வயிற்றுப்புண், புற்றுநோய் போன்ற பிரச்சினைகள் வரக்கூடும்.

சமீபகாலமாக, கிழங்கு வகை உணவுப் பொருட்களை விதவிதமான சிப்ஸ்களாக நேரடியாகவும், பாக்கெட்டில் அடைத்தும் விற்கிறார்கள். அதை நாம் உண்பதோடு, குழந்தைகளும் விரும்புகின்றன என வாங்கித் தருகிறோம். இது அவர்களின் உடல் நலத்துக்கு கேடு விளைவிப்பது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அப்படி கிழங்கு வகைகள் கொடுப்பதாக இருந்தால், நீரில் வேகவைத்துத் தருவதே நல்லது’’ என்பதே கிழங்கு வகையைத் தினமும் சாப்பிடுவதற்கான தீர்வாக இருக்கிறது.

ஞாயிறு, 26 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon